சனி, 20 ஜூன், 2020

விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் மற்றொரு தொகுதி இளம் தலைவர்களை இந்திய விமானப்படை சேர்த்துள்ளது.


துன்டிகல் விமானப்படை அகாடமியில் 2020 ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பை விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதவ்ரியா ஆய்வு செய்தார். 123 விமானப்படை வீர்ர்களுக்கு ‘ குடியரசுத் தலைவரின் ஆணை’களையும், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 11 அதிகாரிகளுக்கு ‘ விங்க்ஸ்’  விருதுகளையும் அவர் வழங்கினார். புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள அதிகாரிகளில், 61 அதிகாரிகள் இந்திய விமானப்படையின் பறக்கும் பணிப்பிரிவிலும், 62 பேர் களப்பணிக் கிளைகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 19 பெண் அதிகாரிகளும் அடங்குவர். வியட்நாம் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானப்படை வீரர்களும் தங்களது பறக்கும் பயிற்சியை இந்த அகாடமியில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். அவர்களுக்கு ‘ விங்க்ஸ்’ விருதுகள் ஆய்வு அதிகாரியால் வழங்கப்பட்டன.

ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்புக்கு வருகை தந்த விமானப்படை தளபதியை பயிற்சி கமாண்டின் ஏர் ஆபிசர் கமாண்டிங் இன் சீப், ஏர் மார்ஷல் ஏ.எஸ். புட்டோலா, விமானப்படை அகாடமியின் கமாண்டன்ட் ஏர் மார்ஷல் ஜே. சலபதி ஆகியோர் வரவேற்றனர். கொவிட்-19 விதிமுறைகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு, பறக்கும் வீரர்களுக்கு அதிகாரிகள் பதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்பாக , விமானப்படை தளபதிக்கு பொது வணக்க அணிவகுப்பு நடைபெற்றது. பயிற்சியின் போது, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. விமானிகள் படிப்பில் ஒட்டுமொத்த ஒழுங்கில் முதலிடம் பிடித்த பறக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரி அனுராக் நைனுக்கு ‘ ஸ்வோர்ட் ஆப் ஹானர்’ விருதும், குடியரசுத் தலைவரின் பட்டயமும் வழங்கப்பட்டது. களப்பணிப் பிரிவில், ஒட்டு மொத்தமாக சிறந்து விளங்கிய பறக்கும் அதிகாரி ஆஞ்சல் கங்வாலுக்கு குடியரசுத் தலைவரின் பட்டயம் வழங்கப்பட்டது.

அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது உரையாற்றிய விமானப்படை தளபதி, கல்வான் பள்ளத்தாக்கில் எல்லையைப் பாதுகாத்த போது உயிர்த்தியாகம் புரிந்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பட்டம் பெற்றுள்ள அதிகாரிகளைப் பாராட்டிய அவர், இந்தத் துறையில் சிறந்து விளங்கியதுடன், திறன் மிகுந்த கடின உழைப்பை வெளிப்படுத்தி விருது பெற்றவர்களை வாழ்த்தினார். கடுமையான கொவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற அவர், சிரமம் மிகுந்த கடினமான சூழ்நிலைகளுக்கு இடையே, பயிற்சியை உரிய காலத்தில் நிறைவு செய்ய உதவிய பயிற்சியாளர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டினார். இந்தப் பணியைத் தேர்வு செய்து, இந்திய விமானப்படையில் சேரும் கனவை நனவாக்கியுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு விமானப்படைத் தளபதி நன்றி கூறினார். நமது பிராந்தியத்தில் பாதுகாப்புச் சூழல், நமது ஆயுதப்படைகள் எந்த நேரத்திலும் தயாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டிய நிலையில் உள்ளதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். 

லடாக் எல்லையில் நடந்த நிகழ்வு, ஆயுதப்படையினர் குறுகிய காலத்தில் கையாளக்கூடிய சிறிய சம்பவம் என அவர் கூறினார். ஒற்றுமையின் எழுச்சியை வலியுறுத்திய விமானப்படைத் தளபதி, பட்டம் பெற்றுள்ள அதிகாரிகள் நீலநிறச் சீருடையின் பெருமிதத்தை உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பட்டம் பெற்றுள்ள அதிகாரிகள் எடுத்துக் கொண்டுள்ள உறுதிமொழியை,  அவர்களது கடமைகள் மற்றும் பணிகளைச் செய்யும் போது வழிகாட்டும் கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்று கூறி அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக