வெள்ளி, 19 ஜூன், 2020

கொரோனாவிலும் இப்படி குரூரம், மோசடியா? வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! - தி.வேல்முருகன்


அரசு ஒத்திவைக்கச் சொன்ன வங்கிக் கடன் தவணைக்கும் வட்டி வசூலிப்போம் என்கின்றன வங்கிகள்! 
ஆனால் அரசின் சொலிசிட்டர் ஜெனரலோ, வங்கிகள் சொல்வது சரிதான் என்கிறார் உச்ச நீதிமன்றத்தில்! 
கொரோனாவிலும் இப்படி குரூரம், மோசடியா? வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

இந்தக் கொரோனா காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் இயங்கவில்லை. சில நிறுவனங்கள் மூடிவிட்டன. பல நிறுவனங்கள் பாதி ஊழியர்களை வெளியேற்றிவிட்டன. இதனால் அந்த நிறுவனங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியிருக்கும் ஊழியர் பலருக்கும் ஊதியம், வருவாய் இல்லாத நிலை. 

இதனால் ஆகஸ்ட் மாதம் வரையிலான கடன் தவணைகளைச் செலுத்த ஆகஸ்ட் 31ந் தேதி வரை சலுகை வழங்கியது ஒன்றிய அரசு. ஆனால் எந்த வங்கியும் அரசின் ஆணைப்படி நடந்துகொள்ளவில்லை. அது மட்டுமா? தவணைத் தொகை என்பது ஏற்கனவே வட்டியும் சேர்ந்ததுதான். ஆனால் என்ன அநியாயம்? ஆறு மாதத் தொகைக்கும் கூட மேலும் வட்டி உண்டு என்கின்றன வங்கிகள். 

அப்படியானால் அது வட்டிக்கு மேல் வட்டிதானே? சந்தேகமென்ன? 

இதனால் கடனாளிகள் அதிர்ந்து போனார்கள். உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கும் போடப்பட்டது. ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர ஷர்மா என்பவர் போட்ட இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஷோக் பூஷன், கவுல், ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தவணைத் தொகை ஒத்திவைப்புக் காலத்திற்கு வட்டி வசூலிக்காவிட்டால் வங்கிகள் பெருத்த நஷ்டமடையும்; இது தொடர்பாக, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் (ஆர்பிஐ) ஆலோசனை கேட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

நீதிபதிகளோ, தடைக் காலக்கட்டத்தில் கடன்கள் மீதான முழு வட்டியையும் தள்ளுபடி செய்வது பற்றியதல்ல இது; காலதாமத தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படுமா என்பது பற்றிய கேள்வியே என்றனர். காலதாமதமாக செலுத்தப்படும் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை அடுத்த 3 நாட்களுக்குள் ஒன்றிய நிதியமைச்சகமும் ஆர்பிஐயும் ஆலோசித்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி அடுத்த வாரத்துக்கு வழக்கைத் தள்ளிவைத்தனர் நீதிபதிகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக