இன்று - ஜூன் 5, உலக சுற்றுப்புறச் சூழல் தினம் ஆகும். சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுப்புறச் சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஒரு பகுதி, ஒரு நாடு என்ற நிலை இல்லாமல் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இச்சொற்றொடர் வரும் காலகட்டங்களில் மாற்றியமைக்க வேண்டிய சூழல் கூட உருவாகலாம். ஏனெனில், இச்சுற்றுப்புறச் சூழலில் தான் மனிதன் உயிர் வாழ்கிறான். சுற்றுப்புறச் சூழல் உகந்ததாக இல்லை என்றால் மனித இனமே வாழ இயலாது. இயற்கையின் பரிணாமத்தினால் தான் விலங்கினங்களும், மனித இனமும் உருவாகியிருக்கின்றன. எனவே மனிதன் உயிர் வாழ்வதற்கான காற்றும், நீரும், மண்ணும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு.
உலகத்தில் இலட்சோபலட்சம் உயிரினங்கள் இருக்கின்றன. அவை எவையுமே சுற்றுப்புறச் சூழலை அழித்து வாழ்வதில்லை. சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்த வாழ்க்கை நடத்துகின்றன. கடலில் வாழும் உயிரினங்கள் கடலைச் சுத்திகரித்துக் கொண்டேதான் தன்னை வாழ்வித்துக் கொள்கின்றன. பூமித்தரையில் வாழுகின்ற உயிரினங்களும் இயற்கையை மாசுபடுத்துவதில்லை. கொடிய விலங்குகள் கூட காடுகளை அழிப்பதில்லை. காடுகளுக்கு அவ்வுயிரினங்கள் பாதுகாப்பாகவும், அந்த உயிரினங்களுக்கு காடுகள் பாதுகாப்பாகவும் இருக்கின்றன. மனிதன் மட்டும்தான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ மறுக்கிறான். சுற்றுப்புற சூழலை கெடுத்து வாழவும், இயற்கையை அழித்து வாழவும் நினைக்கிறான்.
காடுகள் இன்றி மழையும் இல்லை, மழையின்றி நதியும் இல்லை, ஆக்ஸிஜனும் இல்லை, கார்பன்–டை–ஆக்சைடும் இல்லை, நைட்ரஜனும் இல்லை. கடல் இல்லை என்றால் சீதோசண நிலையும் இல்லை. பூமித்தரை இல்லை என்றால் எந்த புல் பூண்டும் இருக்காது. எவ்வுயிரினத்திற்கும் எந்த உணவும் கிடைக்காது. எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூமி பந்தின் பாதுகாப்பை எளிதாக சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்று சொல்லிவிடக் கூடாது. இதை உயிரின பாதுகாப்பு என்றுதான் சொல்லவேண்டும். மனிதர்கள் நவீனம், நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் மலைகளைக் குடைந்து சுரங்கங்களை வெட்டுகிறார்கள். மரங்களை வெட்டி மலைகளை மொட்டை அடிக்கிறார்கள்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஆற்றங்கரைகளில் நச்சுத் தொழிற்சாலைகலை உருவாக்கி நன்னீரை நச்சுக் கழிவுகளின் நீரோட்டமாக மாற்றுகிறார்கள். மழைநீரை சேமிக்கும் எல்லா நீர்நிலைகளையும் மணலாகவும், மண்ணாகவும் சுரண்டி எடுக்கிறார்கள். வளம் தரும் குளங்களை குப்பைகளால் மேவி பட்டா போடுகிறார்கள். அளவுக்கதிகமான வாகனங்களால் கரியமில வாயுக்கள் உமிழப்பட்டு காற்றை சுவாசிக்க அற்றதாக மாற்றுகிறார்கள். மிதமிஞ்சிய பயன்பாட்டு கலாச்சாரம் உருவாகி உணவை பொட்டலங்களிடும் பைகள், செல்போன், கம்ப்யூட்டர் கழிவுகள் வரை மலைமலையாக கொட்டிக் குவிக்கப்படுகின்றன.
ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரும் முன் ஒன்றும், வந்தபின் ஒன்றும் பேசுகிறார்கள். மனித இனங்கள் வாழ்ந்திட, உலக மனித இனத்திற்கே ஆக்ஸிஜனை தந்திடும் அமேசான் காடுகளின் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டன. ஆட்சியாளர்கள் மரக்கிளையில் அமர்ந்து கொண்டு மரத்தின் அடியை வெட்டுகிறார்கள். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்து சுற்றுப்புறச் சூழலை பலி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். சுற்றுப்புறச் சூழல் என்பது அரசால் மட்டுமே நிறைவேற்றக் கூடியது அல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும், தான் வாழவும், தங்களுடைய சந்ததிகள் தலைமுறை தலைமுறைக்கும் வாழவும் சுற்றுப்புறச் சூழலை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அரசுகளால் மக்கள் உருவாக்கப்பட்ட வரலாறு கிடையாது. மக்களால்தான் அரசுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்களால் தான் உலகத்தில் மற்றவைகள் நடந்தேறியிருக்கின்றன. உலகப் பந்தில் இந்தியா ஓர் அங்கம், தமிழ் மண் ஓர் அங்கம். நமது வீடும், வீதியும் அதில் உள்ளடக்கம். சுற்றுப்புறச் சூழல் என்பது நமது சுய செயல்பாட்டிலிருந்து துவங்க வேண்டும். முகக் கவசங்கள் கரோனாவுக்கு மட்டுமானது அல்ல! சுற்று சூழலை பாதுகாப்பதற்கும் உண்டானதுதான்!! நாம் தும்மும் போதும், இருமும் போதும் கூட சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தப்படுகிறது. அதை தடுப்பதற்காகத்தான் குறைந்தது கைக்குட்டையாவது பயன்படுத்த வேண்டும் என்பது நியதி. ஆனால், கரோனா வந்த பிறகு முகக்கவசம் அணிந்து, சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.
அதுபோல, பொதுவெளியில் எச்சில் துப்புவது, மலம் கழிப்பது, கண்ட இடத்தில் பயன்படுத்தும் பொருட்களை தூக்கி எறிவது, பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்துவது, டயர்களை கொளுத்துவது, வீட்டுக் குப்பைகளை வீதிகளிலே போடுவது போன்ற செயல்களை முற்றாக தவிர்த்து சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான அம்சமாகும். நீரோடைகள், ஆறுகளில் தொழிற்சாலைக் கழிவுகளை கொண்டு சேர்ப்பது, அனைத்து நீர் நிலைகளிலும் மலம், ஜலம் கழிப்பது போன்ற அனைத்து வித செயல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாமிசக் கழிவுகள் உட்பட அனைத்தும் முறைப்படி அகற்றப்படவேண்டும். அரசின் திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகள் வைக்கோல்களை தீயிடுவதை முற்றாக கைவிட வேண்டும். மலைகளின் அழகை கண்டு ரசிக்க செல்லக்கூடியவர்கள் அங்கு அவர்கள் வீசி எறியும் சிகரெட் துண்டுகளால் வனங்கள் தீப்பற்றி எரிகின்றன என்பதையும், அதனால்தான் அந்த இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள் அழிகின்றன என்பதையும் உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எனவே, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது வெறுமனே வார்த்தையோடு கலந்த அம்சமாக இல்லாமல், வாழக்கையோடு கலந்த அம்சமாக இருக்க வேண்டும்.
காலையில் எழுந்து பல் துலக்குவது, தங்கள் குளிப்பதற்கு செலவிடும் தண்ணீரின் அளவை குறைப்பதில் இருந்து, தொழிற்சாலைகளுக்கும், வேளாண்மைக்கும், பிற நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தும் நீரின் அளவை குறைப்பதும் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதின் ஓர் அம்சமாகும். எனவே சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை நடைமுறையாக மாற வேண்டும். மனித குலம் வாழ இயற்கையும், பாதுகாப்பான சுற்றுப்புறச் சூழலும் தேவை. ஆனால் இயற்கை எவர் தயவும் இன்றி தனித்து இயங்கும். எனவே நாம் வாழவும், நமது தலைமுறை இந்த மண்ணிலே தொடரவும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது தலையாய கடமையாகக் கருதி சொல்லளவில் இல்லாமல், செயலளவில் இறங்கிட வேண்டும். நம்மை காற்று, வெயில், மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க எப்படி வீடு தேவைப்படுகிறதோ? அதுபோல நாம் அனைவரும் ஆக்ஸிஜனை சுவாசிக்க வீட்டில் இத்தனை மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற சூழல் கூட உருவாகலாம். எனவே, அகத்தூய்மை உருவாக்க புறத்தூய்மை மிகமிக அவசியம். புறத் தூய்மையில்லாமல் அகம் தூய்மையாக முடியாது. நம்முடைய அகமும் புறமும் தூய்மையாக மாசற்ற காற்றும், நன்னீரும், நல்ல பூமியும், நல்ல உணவும் வேண்டுமெனில் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க இன்றே களம் காண்போம்.
சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு, பிறந்த மண் அறக்கட்டளை சார்பாகவும், புதிய தமிழகம் கட்சி சார்பாகவும் ஏற்கனவே மரக்கன்றுகளை நடும் இயக்கத்தை துவக்கி நடத்தி வருகிறோம். இன்று புதிய தமிழகம் கட்சியின் ஒவ்வொருவரும், பொதுமக்களும் தங்கள் வீட்டிலேயே பலன் தரும், பழம் தரும் மரங்களை நட வேண்டுமெனவும், அதை பாதுகாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல, அடுத்த ஆண்டுக்குள் ஆளுக்கு நூறு மரங்களையாவது நடவேண்டும் என்பதை இலக்காக கொண்டு தாங்கள் வசிக்கும் வீடுகளிலும், பகுதிகளிலும், கிராமங்களிலும் மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க சபதம் ஏற்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக