சனி, 17 ஜூலை, 2021

கரோனா 3 ஆம் அலை எச்சரிக்கை! ‘நீட்’ தேர்வை நடத்த பிடிவாதம் காட்டுவது சரிதானா? மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம்! - கி.வீரமணி

 கரோனா 3 ஆம் அலை எச்சரிக்கை!

‘நீட்’ தேர்வை நடத்த பிடிவாதம் காட்டுவது சரிதானா?

மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம்!

‘‘கன்வார் மத யாத்திரை’’ ரத்து - வரவேற்கத்தக்க உச்சநீதிமன்ற ஆணை!

கரோனா கொடுந்தொற்று கொடுமையிலிருந்து நம் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள - அடுத்த 3 ஆவது அலை பாயும் அபாயம் இருப்பதால், இனி வருகின்ற 100 நாள்கள் (அக்டோபர் மாதம் வரை) மிக முக்கியமானவை; அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று நிட்டி ஆயோக்  (மக்கள் நல்வாழ்வு) உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்!

குறையத் தொடங்கியுள்ளது; ஆனால் முடிவுக்கு வரவில்லை!

கரோனா வைரஸ் பரவலின் 2 ஆவது அலை நாட்டில் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது; ஆனால், முடிவுக்கு வரவில்லை. பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் தளர்வுகளால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.

கரோனாவிலிருந்து மக்களைக் காக்கும் தடுப்பூசியை மக்களில் 16 சதவிகிதமே செலுத்திக் கொண்டுள்ள காரணத்தால், நாட்டில் மூன்றாவது அலை நிச்சயம் பரவும் நிலை உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆயிரம் ஏற்பாடுகளை அரசுகள் செய்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தாலொழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

மிக எளிய வழிகள் நம் கையில்; ஆனால், நம் நடத்தையில்...?

மிக எளிய வழிகள் நம் கையில், நம் முடிவில், நம் நடத்தையில்தான் இருக்கின்றன என்பதை நம் மக்கள் ஏனோ மறந்து, அலட்சியமாய் நடந்து, உயிர்ப் பலி தருவது, குடும்பங்களை தெருவில் நிர்க்கதியாக நிற்க வைப்பது நியாயந்தானா?

1. தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது

2. கைகளை சோப்புப் போட்டு அடிக்கடி கழுவுதல்

3. கிருமி நாசினியைப் பயன்படுத்துதல்

4. தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக் கொள்வது

5. முகக் கவசங்களைத் தவறாமல் சரியாக அணிவது

 மேற்கண்ட அய்ந்தும் எவ்வளவு எளிதானவை!

நம் கையில்தானே உள்ளது?

இதனைக் கடைப்பிடித்தால் எந்த அலையும் நம்மை அச்சுறுத்தாது. பகுத்தறிவுள்ள மனிதர்களாகிய நாம் ஏன் இந்த குறைந்தபட்ச நம் உயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற மறுக்கிறோம்?

‘நீட்’ தேர்வை நடத்தியே தீருவோம் என்ற வறட்டுப் பிடிவாதம் ஏன்?

இந்நிலையில், ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வு என்பதை வலுக்கட்டாயமாக திணித்ததோடு, இந்த கரோனா உச்சகட்ட காலத்திலும் - அனைத்துப் பொதுத் தேர்வுகளும் இவ்வாண்டு அரசுகளால் கைவிடப்பட்ட நிலையில், ‘நீட்’ தேர்வை நடத்தியே தீருவோம் என்ற வறட்டுப் பிடிவாதத்துடன் செப்டம்பர் 12 என்று தேதி அறிவிப்பது எவ்வகையிலும் முரண்பாடே!

மற்ற தேர்வு முடிவுகளை எப்படி ஒன்றிய - மாநில அரசுகள் மதிப்பெண்கள் வழங்கி அறிவித்துள்ளனவோ - அதுபோன்ற நடைமுறையையே மருத்துவப் படிப்பிற்கும் கடைப்பிடித்தால் என்ன குடியா மூழ்கிவிடும்?

ஏனோ இந்த முதலைத்தனமான பிடிவாதம்? ‘‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்!’’

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (இந்திய மாநில முதலமைச்சர்களிலேயே முதல் இடத்தை -ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்கள்கூட ஆகாத நிலையில் - பிடித்து வரலாற்றை உருவாக்கியுள்ள முதலமைச்சர்) நேற்று (16.7.2021) பிரதமரிடம் இதை வலியுறுத்தியுள்ளது - மக்களின், மாணவர்களின் உயிர் காக்கும் நலப் பாதுகாப்பு யோசனை அல்லவா? பிரதமர் மக்கள் நலம் கருதி இதனை இணைக்கமாகச் சிந்தித்து, ‘நீட்’ தேர்வைக் கைவிட முன்வரவேண்டும். ‘‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்‘’; மாணவர்கள் இருந்தால்தானே மருத்துவர்கள் எண்ணிக்கைக் கூடும்?

வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத்தின் ஆணை!

அதுபோல மற்றொருசெய்தி - வட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கங்கையில் மூழ்கி - பக்திப் பரவசம் காட்டிட ‘கன்வார் யாத்திரை’ என்ற மதப் பண்டிகையில் பல லட்சக்கணக்கில்  மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தொற்று கடுமையாக பரவிடும் பேரபாயம் உண்டு என்பதால், அதனைத் தடை செய்வது அவசியம்; அந்த கூட்டுக் குளியல் பண்டிகைக்கு உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் நேற்று (16.7.2021) ஆணை பிறப்பித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது!

‘‘இந்த உலகில் எண்ணிலடங்கா மதங்கள்

கந்தகக் கிடங்கில் கனலின் கொள்ளிகள்’’

என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

அது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

மிகப்பெரும் அவலம் அல்லவா?

மதவெறிக்கு முன்னால் உயிர்ப் பாதுகாப்பு மண்டியிட்டு பலி பீடத்தில் நிறுத்தப்படும் மிகப்பெரும் அவலம் அல்லவா?

U.P. Can’t proceed with Kanwar Yatra and Pandemic, says S.C.

மதம் நோய்களை அலட்சியப்படுத்தினாலும், மக்கள் உயிரைத் துச்சமாக்கினாலும், அறிவியல் அவர்களை ஓடோடி வந்து பாதுகாக்கத் தவறவில்லை.

யாத்திரை தடுப்பு - மதப் பிரச்சினை அல்ல; மனித உயிர் காக்கும் ஏற்பாடு.

மதவெறியர்களின் கண்களைத் திறக்கட்டும்!

உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, ரோகின்டன் எஃப்.நாரிமன், பி.ஆர்.கவாய் ஆகியோர் கொடுத்த ஆணையில், ‘‘அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளில் 21 ஆவது பிரிவு மக்களின் உயிர் காக்கும் முன்னுரிமையை வலியுறுத்துவது. அதன்படி கன்வார் யாத்திரையை அனுமதிக்கவே முடியாது’’ என்று தடை போட்டிருப்பது, மதவெறியர்களின் கண்களைத் திறக்கட்டும்!

இருட்டறையில் நாடும் சமுதாயமும் இன்னமும் இருக்கவேண்டுமா?

மனிதர்கள் பகுத்தறிவற்ற பிராணிகளா?

மதவெறி மாய்த்து மனிதநேயத்தை - மனித உயிர்களைக் காப்போம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக