வெள்ளி, 2 ஜூலை, 2021

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள வடக்கு ராணுவ தளத்தின் முன்கள பகுதிகளில் ராணுவ துணை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஆய்வு


 எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்வதற்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள வடக்கு ராணுவ தளத்தின் முன்கள பகுதிகளுக்கு மூன்று நாள் பயணமாக ராணுவ துணை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சி பி மொகந்தி சென்றார்.

செயல்பாட்டு தயார்நிலை, தொழில்நுட்பத்தின் பயன்பாடு, பாதுகாப்பு படைகளின் பல்வேறு பிரிவுகள், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்களுக்கிடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ராணுவ துணை தளபதிக்கு அதிகாரிகள் விளக்கினர்.

படையினரிடயே உரையாடிய ராணுவ துணை தளபதி, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை குறித்தும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து வரும் தீய செயல்களுக்கு எதிர்வினை ஆற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

நாட்டில் அமைதி நிலவ உளவு தகவல்கள் அடிப்படையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொய்வின்றி எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொவிட் பெருந்தொற்றுக்கு இடையிலும் ராணுவத்தின் தயார்நிலையை அவர் பாராட்டினார். கொவிட்-19 பெருந்தொற்றின் சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இந்திய ராணுவம் உறுதியாக நிற்பதாக அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லே யூனியன் பிரதேசங்களில் இந்திய ராணுவம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ துணை தளபதிக்கு விளக்கப்பட்டது. ராணுவம், விமானப் படை, துணை ராணுவம், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மத்திய காவல் அமைப்புகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அவர் பாராட்டினார். சிறப்பான பணியை தொடருமாறும் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக