சனி, 20 ஜூலை, 2019

நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் - மதிமுக தீர்மானம்


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 20.07.2019 சனிக்கிழமை, காலை சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


தீர்மானம் எண். 1 :
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை செப்டம்பர் 15, 2019 அன்று தலைநகர் சென்னையில் மிகவும் சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண். 2 :
தமிழீழத்தில் 2009-ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு துணை போனபோது, அதனைக் கண்டித்தும், சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகள் அளிக்கக் கூடாது என்றும் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் பல கடிதங்கள் தீட்டினார்.
இந்தக் கடிதங்கள் தமிழில் மொழியாக்கம் பெற்று ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்னும் புத்தகமாக சென்னை, அண்ணாசாலை, இராணி சீதை அரங்கில் 15.07.2009 அன்று வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரைக்காக அவர் மீது தமிழக அரசு தேசத் துரோகச் சட்டப் பிரிவு 124-ஏ இன்கீழ் வழக்கு பதிவு செய்தது.
இவ்வழக்கில் விசாரணை முடிந்து ஜூலை 5, 2019 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், பத்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பெற்ற வைகோ, குறைந்தபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்று நீதிபதி எழுதி உள்ளதைக் கண்டு கொதித்துப் போன வைகோ அவர்கள் நீதிபதியைப் பார்த்து, “தண்டனையைக் குறைக்கச் சொல்லி நான் ஒருபோதும் கேட்கவில்லை; அதிகபட்சம் ஆயுள்தண்டனை கொடுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நான் சொல்லாத வார்த்தையை, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கேட்காததை இத்தீர்ப்பில் எழுத வேண்டும் என்றால் நீதிபதியின் உள்ளத்தில் வெறுப்பு இருக்கிறது,” என்று உரக்கக் கூறினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தந்தை பெரியாருக்கு எதிரான வழக்கில் 1938, டிசம்பர் 6-இல் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது, தந்தை பெரியார் அவர்கள் “எவ்வளவு அதிக தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள்” என்று நீதிமன்றத்தில் முழங்கி வரலாறு படைத்தார். அதேபோன்று, ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை’ என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாக வீரமுழக்கமிட்ட பெரியாரின் வாரிசு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீதான தேசத் துரோக வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய கழக உயர்நிலைக்குழு உறுப்பினரும், சட்டத்துறைச் செயலாளருமான வழக்கறிஞர் திரு. ஜி.தேவதாஸ் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண். 3 :
தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்திட தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு, தி.மு.க. ஆதரவுடன் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஜூலை 6-ஆம் தேதி சட்டப் பேரவைச் செயலாளரிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்மொழிய, வைகோ அவர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்று தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளத்திலும் மிகுந்த கவலையும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. ஜூலை 9-ஆம் நாள் சட்டப் பேரவைச் செயலாளர் வைகோவின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்ததும், வைகோ அவர்களை தமிழ் உலகமே வாழ்த்தியது.
இந்நிலையில் ஜூலை 11-ஆம் நாள் சட்டப் பேரவைச் செயலாளர், தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் உறுப்பினர்களாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.
கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஜூலை 11-ஆம் நாள் மாலை 4.30 மணி அளவில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். பின்னர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.கழக முன்னோடிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன் தந்தை பெரியார் நினைவிடம் அமைந்துள்ள பெரியார் திடல் சென்று ஐயா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். டாக்டர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லம் சென்று கலைஞர் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்பு தி.மு.கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் இல்லம் சென்று அவரிடம் தலைவர் வைகோ வாழ்த்து பெற்றார்.
டெல்லி நாடாளுமன்றத்தில் முதன்முதலாக 1978-இல் அடியெடுத்து வைத்த வைகோ அவர்கள் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் சீரிய முறையில் பணியாற்றினார்.
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்திற்கு கம்பீரமாகச் செல்லும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சக்கணக்கான தொண்டர்களின் சார்பில் இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்து பெருமை கொள்கிறது.

தீர்மானம் எண். 4 
தேனி மாவட்டத்தில் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தாமே நீதிமன்றத்தில் வாதாடினார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மார்ச்சு 26, 2015-இல் ‘நியூட்ரினோ ஆய்வகம்’ அமைக்கும் திட்டத்திற்குத் தடை ஆணை பிறப்பித்தது.
ஐ.நா. மன்றத்தின் புனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் பாதுகாக்கப்பட வேண்டிய பல்லுயிரிய மண்டலமும், மதிகெட்டாஞ்சோலை தேசியப் பூங்காவும் பொட்டிபுரத்திற்கு அருகே அமைந்துள்ளன. முல்லைப்பெரியாறு, இடுக்கி அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளும், நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள இடத்திற்கு அருகில் உள்ளன.
நியூட்ரினோ ஆய்வகத்தால் பல இலட்சம் டன் பாறைகள் உடைத்து நொறுக்கப்பட்டு சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும். கதிரியக்க அபாயமும் ஏற்படும் என்பதால்தான் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை ஆணை பெற்றார். தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணமும் மேற்கொண்டு மக்களிடம் நியூட்ரினோ ஆய்வகத்தின் அபாயங்களை எடுத்துரைத்தார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ‘தேசிய பசுமைத் தீர்ப்பாய’த்தின் தென்னக அமர்வு மார்ச் 20, 2017-இல் இரத்து செய்துள்ளது.
மேலும் மார்ச்சு 31, 2018-இல் மதுரையில் தொடங்கி ஏப்ரல் 10, 2018 அன்று கம்பத்தில் நிறைவடைந்த நடைப்பயணத்தில் இலட்சக்கணக்கான பொது மக்களைச் சந்தித்து பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தின் தீய விளைவுகளை விளக்கினார்.
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதுரையில் புறப்பட்ட தலைவர் வைகோ அவர்களின் நடைப்பயணத்தை தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வில், புலி, கயல் கொடியை ‘வைகோ’விடம் கையளித்து தொடங்கி வைத்தார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு வைகோவை வாழ்த்தி உரையாற்றினர். நடைப்பயணத் தொடக்க விழாவின்போது விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவகாசி இரவி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டு, தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார்.
மதுரையில் தொடங்கிய வைகோவின் நடைப்பயணம் நான்காவது நாளான ஏப்ரல் 3, 2018 அன்று தேனி வந்திருந்தபோது, கவிப்பேரரசு வைரமுத்து, தேனி பங்களாமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, வைகோ அவர்களை வாழ்த்தி உரையாற்றினார்.
கம்பத்தில் வைகோ அவர்களின் நடைப்பயண நிறைவு விழாவில் உலகளவில் விஞ்ஞானிகள் அமைப்பின் உறுப்பினரும், கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்தவருமான விஞ்ஞானி பத்மநாபன் கலந்து கொண்டார்.
அப்போது உரையாற்றிய விஞ்ஞானி பத்மநாபன், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வைகோவின் பேச்சை மத்திய, மாநில அரசுகள் அப்போதே கேட்டிருந்தால், இப்போது மக்கள் இந்த அளவுக்குப் போராடும் நிலைமை ஏற்பட்டு இருக்காது. அதுபோல நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை எதிர்த்து வைகோ போராடி வருவதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டு, நியூட்ரினோ திட்டத்தின் பாதிப்புக்களை எடுத்துரைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவரும் 18-ஆம் கால்வாய் விவசாய சங்கத் தலைவருமான ஹாஜி கே.எம். அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டார்.
நடைப்பயண நிறைவுக் கூட்டத்தில் உரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், “நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சித்தால் ஐந்து மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மீண்டும் வருவேன்,” என்று பிரகடனம் செய்தார்.
தற்போது மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கி உள்ள தடை ஆணை மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு இவற்றை அலட்சியப்படுத்தி விட்டு நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துளளது. எனவே, பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அறிவித்தவாறு மீண்டும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் ஆகஸ்டு 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்கள் வைகோ அவர்கள் தலைமையில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன், நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் நிர்வாகிகளான லெனின் ராசப்பா, திருமுருகன் காந்தி, ஈரோடு கி.வே.பொன்ன்னையன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.

நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரைப் பயணத்தை தேனி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 5 :
தென்தமிழ் நாட்டில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாமரி மாவட்டங்களை பேரழிவுக்கு ஆளாக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிற கூடங்குளம் அணுஉலைகளின் வளாகத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்க இந்தியாவின் மத்திய அரசு முனைந்து வருகிறது. இதைத் தடுத்தே தீர வேண்டிய இன்றியமையாத கடமை நமக்கு இருக்கிறது.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், பூவுலக நண்பர்கள் அமைப்பும் இணைந்து 2019 ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை அன்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், பூவுலக நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சுந்தரராசன் அவர்கள் முன்னிலையில் எழும்பூர் சிராஜ் மகாலில் மாலை 4 மணி முதல் கருத்தரங்கம் நடத்துவது என்றும், இதில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களையும் பங்கேற்கச் செய்து, எழுச்சியுள்ள நிகழ்வாக நடத்தத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண். 6 :
கடந்த ஜூலை 8 ஆம் தேதி மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய புலனாய்வு முகமை (சட்டத்திருத்த) மசோதாவினை தாக்கல் செய்தார்.
தேசிய புலனாய்வு முகமை என்பது 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அமைக்கப்பட்டது. தீவிரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க சிறப்பு அந்தஸ்துடன் அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் நடைபெறும் தீவிரவாதச் சம்பவங்களை எதிர்கொள்ள மாநில அரசுகளின் அனுமதி இன்றியேகூட விசாரணைகள் மேற்கொள்ள இவ்வமைப்புக்கு உரிமையுள்ளது.

இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை தற்போது பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ளது. அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்கான பட்டியலில் மேலும் சில குற்றங்கள் சேர்க்கப்படுகின்றன. ஆட்கடத்தல், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உற்பத்தி அல்லது விற்பனை செய்தல், வெடிபொருட்கள் சட்டம் 1908ன் கீழ் வரும் குற்றங்கள், கள்ளநோட்டு அச்சிடுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. இனி தேசிய புலனாய்வு முகமை இந்தக் குற்றங்கள் சார் செயல்களைப் பற்றியும் நடவடிக்கை எடுக்கலாம்.

இக்குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு முகமை அதிகாரிக்கு அவ்வழக்கினை விசாரிக்கும் காவல்துறைக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனையும் உண்டு. இவ்வமைப்பின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது; இந்தியாவிற்கு வெளியே சர்வதேச உடன்படிக்கைகளுக்கு உட்பட்டு அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இக்குற்றங்கள் பற்றி விசாரிக்கும் அதிகாரமும் உண்டு. அப்படி வெளிநாடுகளில் நடந்து அதனால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும்போது மத்திய அரசு அதுபோன்ற வழக்குகளை புலனாய்வு முகமையிடம் வழங்கும். இது டில்லியில் அமையும் சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும்.

இவ்வரையறுக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்க மத்திய அரசே சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. மேலும் மாநிலங்களிலுள்ள அமர்வு நீதிமன்றங்களை அவ்வவற்றுக்குரிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கலாம்; ஒரு உயர்நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வு நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கப்படும் எனில் அந்த தலைமை நீதிபதியே வழக்குகளைப் பிரித்தளிப்பார். இவ்வாறு அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சட்டத் திருத்தத்தில் ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதத் தயாரிப்பு, விற்பனை, இணையவழி பயங்கரவாதம் ஆகிய குற்றங்களையும் என்.ஐ.ஏ. விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.

பயங்கரவாதக் குற்றங்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ. அமைப்பின் அதிகார வரம்பை விரிவுபடுத்தும்போது ஆள் கடத்தல், கள்ள நோட்டுகள் விநியோகித்தல் முதலானவை எப்படிப் பயங்கரவாதக் குற்றங்கள் ஆகும்?
ஆயுதம் தயாரிப்பது, வெடி மருந்துச் சட்டத்தின் கீழான குற்றங்கள் ஆகியவை ஏற்கனவே மாநில அரசின் விசாரணை வரம்புக்குள் உள்ளன.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தையும் மத்திய பா.ஜ.க. அரசு தன் கையில் எடுத்துக்கொள்கிறது. மாநிலங்களில் உள்ள செசன்ஸ் நீதிமன்றங்களை, சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கும் அதிகாரத்தையும் இச்சட்டத் திருத்தம் மத்திய அரசுக்கு அளிக்கிறது.

சிறுபான்மை மக்களையும், அரசுக்கு எதிராக ஜனநாயக முறையில் குரல் கொடுப்போர்களையும் வேட்டையாட இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.
பா.ஜ.க. அரசு ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே கல்வி; ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே குடும்ப அட்டை எனும் வரிசையில் இந்தியா முழுவதற்கும் ‘ஒரே புலனாய்வு முகமை’ என்ற அடிப்படையில், ‘தேசிய புலனாய்வு முகமை’ச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மாநில அரசின் அனுமதியின்றி, மாநில காவல்துறை இயக்குநரிடம் தகவல் அளிக்காமல் நேரடியாக எவரை வேண்டுமானாலும் மத்திய அரசு நிறுவனங்கள் விசாரிப்பதற்கும், தண்டிப்பதற்கும் என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் தரப்பட்டிருருக்கிறது. கூட்டாட்சித் தத்துவதற்கு எதிரான மாநில உரிமைகளைப் பறிக்கும் என்.ஐ.ஏ. சட்டத் திருத்தங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 7 :
ஆகஸ்டு 5, 2019 அன்று நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரை.கதிர்ஆனந்த் அவர்களின் வெற்றிக்கு அயராமல் பாடுபடுவது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக