சனி, 6 ஜூலை, 2019

தள்ளிவைக்கப்படும் தேர்தல்களும், தள்ளாடும் ஜனநாயகமும் ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

தள்ளிவைக்கப்படும் தேர்தல்களும், தள்ளாடும் ஜனநாயகமும்.!
தமிழக மக்களின் குரலுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன ?
-டாக்டர் K. கிருஷ்ணசாமி
(புதியதமிழகம்)



நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு, அந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரின் இருப்பிடத்திலும், அவரது கல்வி நிறுவனத்திலும் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அப்பொழுதே, ”இது சரியான நடைமுறை அல்ல; மாறாக, சட்டத்திற்குப் புறம்பாக, ஜனநாயக விரோதமாக, வாக்காளர்களை ஊழல்படுத்த பணத்தை பதுக்கி வைத்திருந்த அந்த வேட்பாளரையே தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தோம். அதே கருத்தையே பலரும் வலியுறுத்தியிருந்தார்கள்.

சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருந்த அந்த வேட்பாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கு பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முறைகேட்டில் ஈடுபட்ட குற்றசாட்டிற்கு ஆளான அக்கட்சியையோ, அந்த வேட்பாளரையோ மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட எந்தவித தடையும் இல்லையாம்! தேர்தல் ஆணையத்தின் இவ்விதமான நடவடிக்கையை எவ்விதத்தில் அணுகுவது என்று தெரியவில்லை. இதே போன்ற ஒரு தவறான நடவடிக்கையை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தேர்தல் ஆணையம் கையாண்டது.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறவேண்டும் என்பதில் எவருக்கும் இருவேறு கருத்திருக்க முடியாது. வாக்காளர்களை ஊழல்படுத்துவது என்பது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம். தமிழக அரசியலில் கடந்த 15 வருடங்களில் சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும், இடைத்தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது என்ற ஒரு மிகமிக மோசமான நிலைமை உருவாகியிருக்கிறது. ஆர்.கே.நகரிலேயே சரியான நடவடிக்கையை எடுத்து, அந்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அதுபோன்ற ஒரு தவறைச் செய்ய எவருக்கும் துணிவு வந்திருக்காது, எதிர்காலத்திலும் வராது!!

தமிழகத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்தளவிற்கு பணம் பாய்ந்தது என்பதை அனைவரும் அறிவர். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலை நிறுத்தி வைப்பதன் மூலமாக, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் பணப்புற்று வளர்ந்து வருவதை தடுப்பதற்குண்டான அடிகோலியாகக் கருதியிருக்கலாம். ஆனால், எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் அதே வேட்பாளர் போட்டியிடுவதற்கு அனுமதித்திருப்பது தேர்தல் ஆணையத்தின் பலவீனமா?

தேர்தல் ஆணையம் முனைப்போடு செயல்பட்டிருந்தால், தேர்தலை நடத்த அனுமதித்து, ஒருவேளை குறிப்பிட்ட அந்த வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தால், பணத்தைக் கைப்பற்றிய ஆதாரத்தை அடிப்படையாக வைத்து, தேர்தல் ஆணையமே தானே முன்வந்து அவரை பதவி இழக்கச் செய்திருக்க முடியும்; அவர் பதவிப் பிரமாணமே எடுக்காமல் தடுத்திருக்க முடியும்; அது ஒரு வரலாறாகவும் ஆகியிருக்கும்; இந்திய தேர்தல் ஆணையமும், ”வலுவுள்ள’’ அமைப்பு என்று பெயர் பெற்றிருக்கும். தமிழக அரசியல்வாதிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாகவும் இருந்திருக்கும். அதை இந்தியத் தேர்தல் ஆணையம் தவற விட்டுவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

ஆனால், ஒரு விசயத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா முழுமைக்கும் தேர்தல் ஆணையம் ஒருவிதமாகவும், தமிழகத்திற்கு வருகின்ற பொழுது அந்த தேர்தல் ஆணையம் செயலிழந்து போவதும் ஏன் என்பது தான் என்னுடைய கேள்வி. 2009, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், இந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வாக்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டனவோ என்று பரவலாக பேசப்படதைக்கூட தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாததன் விளைவு, கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 144 தடையுத்தரவு பிறப்பித்து தான் வாக்குக்குப் பணம் கொடுக்கவேண்டி இருந்த நிலை மாறி, இன்று பட்டப்பகலிலேயே பகிரங்கமாக பட்டுவாடா செய்யக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நடைபெறக்கூடிய இந்த வரம்பற்ற முறைகேட்டைத் தடுத்து நிறுத்தப்போகிறதா இல்லை, ”வல்லான் வகுத்ததே வழி” என்று விட்டுவிடப்போகிறதா? தேர்தல் ஆணையம் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை தள்ளிப்போட்டு சாதித்தது என்ன என்பது நாட்டு மக்களுடைய கேள்வி ஆகும். மீண்டும் அதே Formula நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்திய தேர்தல் ஆணையம் தடுக்குமா, தடுக்காதா? நடவடிக்கை எடுக்குமா, எடுக்காதா? எடுத்தால் அந்த நடவடிக்கை இப்படித்தான் இருக்குமா? என்பது அனைவர் மத்தியிலும் எழும் மிகப் பெரியகேள்விக் குறியாகும்.

உணர்ச்சிமிகு தமிழ் கோஷங்களாலும், சினிமா கலாச்சாரத்தாலும் தமிழ் மக்கள் குறிப்பாக கிராம மக்கள் எல்லையில்லாத வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு விட்டார்கள். 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் காலை, மதியம், இரவு என்று பாராமல் அரசியல் கட்சிகளுடைய கூட்டங்களுக்குச் செல்லவும், அவர்களுக்குக் கொடிபிடிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டார்கள். அவர்களுடைய அவலநிலையை எண்ணி நாம் கண்ணீர் தான் வடிக்க முடியும்.

தமிழகத்தினுடைய எந்த அரசியல் கட்சியின் கூட்டமும் தேர்தல் கோஷமும் அவர்களுடைய வாழ்நிலையை இப்பொழுது மாற்றியமைக்கப் போவதில்லை. நாடாளுமன்றம் என்றால் 40 பேருடைய வாழ்வாதாரம், சட்டமன்றம் என்றால் 234 பேருடைய வாழ்வாதாரம், அவர்களை சார்ந்தவர்களுடைய உயர்வு, மேன்மை. இதைத் தவிர இந்த அரசியல் கட்சிகளுக்கு வேறு பெரிய நோக்கம் எதுவும் கிடையாது.

எனவே நோக்கமற்றவர்கள், இலட்சியமற்றவர்கள் எந்த சட்டத்தையும் தங்களுக்குச் சாதகமாக வளைக்க நினைக்கலாம். தேர்தல் ஆணையத்தையும் வளைத்திட முயற்சி செய்யலாம். 

ஆனால்…,
தேர்தல் ஆணையம் தலை குனிந்திடலாமா? வளைந்திடலாமா?
என்பதே சாமான்ய தமிழ் மக்களுடைய குரல்;
இந்திய தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக