வெள்ளி, 12 ஜூலை, 2019

மத்திய நிதிநிலை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை! - ஆர்.எஸ்.பாரதி எம்.பி.

மத்திய நிதிநிலை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை!
தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கோதாவரி, காவிரி, கிருஷ்ணா நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- திரு. ஆர்.எஸ்.பாரதி எம்.பி., 
(திமுக RAJ SABHA)

முதல் கட்டமாக நிதி அமைச்சர் கோதாவரி, காவிரி, கிருஷ்ணா நதிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மத்திய நிதிநிலை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை
என்று கழக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மாநிலங்களவையில் தெரிவித்தார்.


“முதலாவதாக, தனது நிதிநிலை அறிக்கை உரையில் புறநானூற்றுப் பாடலைப் பாடியதற்காக மத்திய நிதி அமைச்சரைப் பாராட்டுகிறேன். ஆனால், இதை விட அவர், மற்ற தேசிய மொழிகளுக்கு இணையாக தமிழை மேம்படுத்துவதற்கான திட்டங்களைக் குறிப்பிட்டிருந்தாரானால் அது மிகவும் மகிழ்ச்சியளித்திருக்கும். ஆமாம் ஒரு ஆட்சியாளர் ஒவ்வொரு நாளும் அநீதிகளைப் பரிசோதித்து அவற்றைக் களையாவிட்டால், தன்னுடைய ஆதிக்கத்தை நாளுக்கு நாள் இழந்து விடுவார். எனவே, இந்த அரசாங்கம் தங்கள் உத்தேசத் திட்டங்களில் உள்ள அநீதிகளைப் பரிசோதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பத்திரிகைக் காகிதம் இறக்கு மதிக்கான சுங்கத் தீர்வையைப் பத்து சதவிகிதம் உயர்த்தியிருப்பது பற்றிய பிரச்சினை ஊடகத்தின் மீது நடத்தப்பட்ட பெரும் தாக்குதலாக இருக்கும். நாம் அனைவரும் அறிந்திருப்பதைப் போல் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகம் உள்ளது. இந்த அரசு ஊடகத்தின் மீது வரி விதிப்பதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. இது அநீதியை ஏற்படுத்தும். எனவே, இதை மறுபரிசீலனை செய்து, பத்திரிகைக் காகிதத்தின் மீதான சுங்கத் தீர்வையை 10 சதவிகிதம் உயர்த்துவதைத் திரும்பப் பெற வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டாவதாக, அச்சிட்ட புத்தகங்கள் மீது 5 சதவிகிதம் தீர்வை விதிக்கப்பட உள்ளது. நாம் கல்விக்கான உரிமைச் சட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கல்விக்கான உரிமைச் சட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவில் நீங்கள் நூல்கள் மீது 5 சதவிகிதம் தீர்வை விதித்தால், அது கற்பதன் மீது வரி விதிப்பது போன்றதாகும். மேலும் கல்வி உதவித் தொகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, அரசு இதைப் பரிசீலித்து இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்த அரசைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிதிநிலை அறிக்கை பல்வேறு பிரச்சினைகளில் மவுனம் சாதிக்கிறது. மிகவும் முக்கியமாக இந்த நிதிநிலை அறிக்கை தண்ணீர் தட்டுப்பாடு போன்ற கடுமையான பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டது. நாம் தண்ணீர் பற்றாக்குறை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். நமது பிரதமரும் தண்ணீர் பற்றாக்குறை பற்றி நிறைய கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அது பற்றி எதுவும் இல்லை. நமது நிதி அமைச்சர் அம்மையார் அவர்கள் தமிழ்நாட்டின் மகள், ஆந்திரப் பிரதேசத்தின் மருமகள். அவர் இந்த மதிப்பிற்குரிய அவையில் கர்நாடக மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்து கிறார். எனவே, முதல் நிகழ்வாக நிதி அமைச்சர் அவர்கள் கோதாவரி, காவிரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்கிறேன். அது அனைத்து மூன்று மாநிலங்களுக்கும் பெரும்பேறாக (வரப்பிரசாதமாக) இருக்கும். அதற்கு ரூ.1,000 கோடி மட்டும்தான் செலவாகும். நாம் தண்ணீர்ப் பற்றாக்குறை பற்றி நிறைய பேசிக் கொண்டிருக்கும் போது, அவ்வாறு செய்ய வேண்டும் என்று நான் அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அரசு “இந்தியாவில் உருவாக்குவோம்"" (மேக் இன் இந்தியா) போன்றத் திட்டங்களோடு வந்த போதிலும் அதில் வேலையில்லாத இளைஞர்களுக்கு எதுவும் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வங்கிகளிலிருந்து கடன் வாங்கியவர்களால் தங்கள் கடன்களைக் கட்ட முடியவில்லை. அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் போல் நடத்தப்படுகிறார்கள். நாம் பல்வேறு மாநிலங்களிலும் பார்க்கிறோம். முதுநிலை பட்டதாரிகளும், பொறியாளர்களும், துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இது மிக வேதனையான நிலைமை. சுதந்தரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட கல்வி கற்ற தொழிலாளர்களுக்கும், பொறியாளர் களுக்கும் வேலை அளிக்கும் நிலையில் நாம் இல்லை. எனவே அரசு இந்த அடிப்படையில் வேலைகளை உருவாக்க யோசிக்க வேண்டும்.

இந்த இடத்தில் எங்கள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் பற்றி குறிப்பிட்டுக் கூற வேண்டும். அவர்கள் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்கள். அவர் அடிக்கடி சொல்வது வழக்கம், “நிதிநிலை அறிக்கை என்பது பணக்காரர் களிடமிருந்து எடுக்கும் வகையிலும் ஏழைகளைத் தட்டிக் கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும்" என்று சொல்வார்கள். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த நிதிநிலை அறிக்கை பணக்காரர்களை வெறுமனே தட்டிக் கொடுக்கிறது; ஏழைகளிடமிருந்து பறிக்கிறது. எனவே, இந்த நிதி நிலை அறிக்கை திருப்திகரமாக இல்லை. இத்துடன் நான் நிறைவு செய்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக