சனி, 6 ஜூலை, 2019

புதிய இந்தியா குறித்து மக்‍களுக்‍கு அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. - டிடிவி . தினகரன்

மத்திய அரசின் நிதி நிலை அறிக்‍கையானது புதிய இந்தியா குறித்து மக்‍களுக்‍கு அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
 -  டிடிவி . தினகரன் 
( அமமுக பொதுச்செயலாளர் )


மத்திய பட்ஜெட் குறித்து கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன்​வெளியிட்டுள்ள அறிக்‍கையில், வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல், ஜி.எஸ்.டி. வரி சீர்த்திருத்தங்கள் போன்ற பெரிதும் எதிர்பார்க்‍கப்பட்ட மக்‍களுக்‍கு உடனடி தேவையான திட்டங்கள் இல்லாமல், முரண்பாடுகளின் தொகுப்பாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்‍கை அமைந்துள்ளது

2019-2020 ஆம் நிதியாண்டுக்‍கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்‍கையில்,
கழிவுகளை அகற்ற மனிதர்களுக்‍குப் பதிலாக எந்திரங்களும், ரோபோக்‍களும் களமிறக்‍கப்படும் - மின்சார வாகனத் தயாரிப்புக்‍கு முக்‍கியத்துவம் போன்ற சில அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை என்றும், சிறு,குறு, வணிகர்களுக்‍கும் ஓய்வூதிய வீட்டுக் கடனுக்‍கான வட்டியில் கூடுதலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமான வரி விலக்‍கு உள்ளிட்டவை அந்தந்தப் பிரிவினருக்‍கு நன்மை தரக்‍கூடியதாக இருக்கும் 

அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்‍கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்‍கப்பட்டிருப்பது- விலைவாசியை அதிகப்படுத்தி மக்‍களுக்‍கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்‍கொண்டே போவது எப்படி நியாயமாக இருக்‍க முடியும் ?

தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் மக்‍கள் குடிநீருக்‍காக அல்லாடிக்‍ கொண்டிருக்‍கும் நிலையில், அதற்கான உடனடி நிவாரணங்களை அறிவிக்‍காமல் 2024-க்‍கும் அனைவருக்‍கும் குடிநீர் என்பது சரியானதா ? 

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்‍களுக்‍கான மிகப்பெரிய அரசு போக்‍குவரத்து அமைப்பாக இருக்‍கும் ரயில்வே துறையை தனியார் மயமாக்‍க அறிவிக்‍கப்பட்டுள்ள 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திட்டம் பெரும் கவலையை அளிக்கிறது.

'உணவு அளிக்‍கம் விவசாயிகளுக்‍கு நன்றி' என்ற நிதியமைச்சர், அவர்களின் வருமானம் 2022-ம் ஆண்டுக்‍குள் இருமடங்காகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் 2014-ல் இவர்கள் ஆட்சிக்‍கு வரும்போது, இரண்டே ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இருமடங்காகும் என்று அளித்த வாக்‍குறுதி நினைவுக்‍கு வருவதைத் தவிர்க்‍க முடியவில்லை. நாடு முழுவதும் பெரும் வறட்சி நிலவும் நிலையில் விவசாயத்திற்கு சிறப்புத் திட்டங்களோ, நிதி உதவிகளோ இல்லாமல் வெறும் வார்த்தைகளில் விவசாயிகளைப் புகழ்ந்துவிட்டால் போதும் என்று அரசு நினைத்து விட்டதாகத் தெரிகிறது.

இதேபோல இன்னும் கழிவறைகள் இல்லாத லட்சக்‍கணக்‍கான வீடுகள் கிராமப்புறங்களில் இருக்‍கும்போது, இன்னும் இரண்டே மாதங்களில் எப்படி திறந்தவெளி கழிவறை இல்லாத நாடாக இந்தியா மாறும் என்று நிதியமைச்சர் அறிவித்தார் எனத் தெரியவில்லை- 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து வரும் நிலையில், பட்ஜெட்டில் புதிய வேலைவாய்ப்புக்‍கான சிறப்புத் திட்டங்கள் இல்லாதது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

சிறு,குறு தொழில்துறைக்‍கு ஒதுக்‍கப்பட்டிருக்‍கும் 350 கோடி ரூபாய் நிதி என்பது பணமதிப்பிழப்பு, சரியான திட்டமிடல் இல்லாத ஜி.எஸ்.டி. அமலாக்‍கம் போன்ற யானைகள் புகுந்து ஆடிய தாண்டவத்தால் உருக்‍குலைந்து கிடக்‍கும் இத்துறைகளுக்‍கு, வெறும் சோளப்பொரியாகக்‍ கூட இருக்‍காது.
 கட்டிடங்கள், கழிவறைகள், ஆய்வகங்கள், போதுமான ஆசிரியர்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத பள்ளிகளும், கல்லூரிகளும் நிறைந்ததாக இந்த தேசம் இருக்‍கும் நிலையில், வெளிநாட்டவரை இங்கே வந்து படியுங்கள் என்றொரு திட்டம் கொண்டு வருவதை என்னவென்று சொல்வது. சுற்றுச்சூழலை பாதிக்‍காமல் 30 ஆயிரம் கிலோமீட்டருக்‍கு பசுமை வழிச்சாலைகள் போடப்படும் என்றும் நிதிநிலை அறிக்‍கையில் கூறப்பட்டிருக்‍கிறது- விளைநிலங்கள், நீர்நிலைகள், வனங்கள், குடியிருப்புகள் பசுமைக்‍கான அத்தனை ஆதாரங்களையும் அழித்து, பசுமை வழிச்சாலைகளைக்‍ கொண்டு வந்தால், சுற்றுச்சூழல் எப்படி பாதிக்‍காமல் இருக்‍கும் என்பதும் புரியவில்லை 

மொத்தத்தில் புதிய இந்தியா என்ற கனவு வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லி, அதற்காக புதுப்புது பெயர்களை திட்டங்களை மட்டும் அறிவித்து விட்டால், புதிய இந்தியா பிறந்துவிடும் என்று இந்த அரசு நினைப்பது வெறும் பகல் கனவாகவே இருந்துவிடுமோ என்ற கவலையையும், அச்சத்தையும் மத்திய அரசின் பட்ஜெட் ஏற்படுத்தியிருப்பதாகவும் திரு.டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக