வியாழன், 4 ஜூலை, 2019

10% இடஒதுக்கீடு வழங்கிட முதல்வருக்கு டாக்டர்.K.கிருஷ்ணசாமி கடிதம்

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

டாக்டர்.K.கிருஷ்ணசாமி கடிதம்
(புதிய தமிழகம்)


இந்தியா முழுமைக்குமுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புக்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கிட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், ஏற்கெனவே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கிவிட்டது. பல உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வும் துவங்கவுள்ளது.

ஏற்கெனவே பல மாநிலங்கள் மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு திட்டத்தை வரவேற்று நடைமுறைப்படுத்தத் துவங்கிவிட்டன. ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரையிலும், இது குறித்து தனது முடிவை அறிவிக்கவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட்ட பிரிவினருக்கான இழப்பீட்டை சரிசெய்யும் வகையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் 10% இடங்களை கூடுதலாகக் கொடுப்பது குறித்து மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது.

குறிப்பாக, இப்பொழுது இருக்கக்கூடிய மொத்த இடங்களைக் காட்டிலும் மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 25% கூடுதலான இடங்களை அளிப்பதற்கும் மத்திய அரசு முன் வந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், 10% சதவீதம் முற்பட்ட பிரிவினருக்குப் போக, கூடுதலாக 15% இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் பெற வாய்ப்பிருக்கிறபோதிலும், மாநில அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று தெரியவில்லை? தமிழக அரசு முற்பட்ட பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முன்வருமேயானால், இந்தாண்டு மட்டும் 812 பேர் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் கூடுதலாக மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பை பெறுவார்கள். அந்த வாய்ப்பை தமிழக அரசு எந்த விதத்திலும் இழந்து விடக்கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோளாகும்.

இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்டு முடிவெடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். தமிழக மக்களுடைய நலன் கருதி பல நல்ல திட்டங்களை அமல்படுத்திவரக்கூடிய நீங்கள், முற்பட்ட பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை அமலாக்குவதற்கு தாங்களே முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குக் குந்தகம் விளைவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள பலரின் ஆலோசனைகள் இதற்கும் எதிராகவே இருக்கக் கூடும். ஒருவேளை நீங்கள் அரசியல் கட்சிகளுடைய ஆலோசனைகளைப் பெறுவதென முடிவெடுத்தால், தமிழகத்தினுடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, விரிவான ஆலோசனைகளைப் பெற்றிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

எட்டுக் கோடி தமிழ் மக்களின் நலனை உள்ளடக்கியும், நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்கால மருத்துவர் கனவுகளை நனவாக்கக்கூடிய வகையிலும், முற்பட்ட பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை அமலாக்கும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக