புதன், 17 ஜூலை, 2019

ஹைட்ரோகார்பன் அனுமதியை உடனடியாக மத்தய அரசு ரத்து செய்ய வேண்டும். - தொல்.திருமாவளவன்

விவசாயம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலன் குறித்து 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. 


விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நமது அரசு முக்கியத்துவம் அளித்திருப்பதாக தெரியவில்லை. தொழில் வளர்ச்சியே இந்த தேசத்தின் வளர்ச்சி என்கிற தவறான எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அதனால்
தான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நமது அரசு ஊக்கமளித்து வருகிறது. ஆனால், விவசாயத்தை அழிப்பதற்கான சிதைப்பதற்கான பல்வேறு திட்டங்களை வழங்கி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தீவிரம் காட்டி வருகிறது.

குறிப்பாக, என்னுடைய சிதம்பரம் தொகுதி உள்ளடங்கிய டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு மிகத்தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருவது வேதனையளிக்கிறது. நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற கிராமங்களில் மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களை நாள்தோறும் நடத்திய நிலையிலும் கூட தற்போது 254 ஹைட்ரோகார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. கடலூர், நாகப்பட்டினம் பகுதிகளில் 158 ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி. விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் 116 ஹைட்ரோகார்பன் கிணறுகளை தோண்ட அனுமதி. 2500 அடி ஆழத்திலே இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளை தோண்டுவதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். அந்த நீர்மட்டம் குறையும். அது ரசாயன பொருட்களால் நஞ்சாக மாறும். இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்த ஹைட்ரோகார்பன் அனுமதியை உடனடியாக மத்தய அரசு ரத்து செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். விவசாயிகளுக்கு உதவி வழங்குகிற பிஎம்கிசான் திட்டம் வரவேற்கத் தகுந்தது, பாராட்டுகிறேன். ஆனால், கோடான கோடி விவசாயத் தொழிலாளர்களின் நலன் குறித்து இந்த அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. எனவே, இந்த திட்டத்தை விவசாயத் தொழிலாளர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 

சென்னையிலிருந்து சேலம் வரையில் எட்டுவழிச் சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்து நீதிமன்றத்திலே வழக்கு தொடுக்கப்பட்டு தடைவிதிக்கப்பட்ட நிலையிலும் கூட அதை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று மத்திய அரசு உறுதியாக இருப்பது வேதனையளிக்கிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, எட்டுவழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

மேலும், விவசாயிகளின் நலன் எவ்வளவு முக்கியமோ அதைவிட விவசாயத் தொழிலாளர்களின் நலன் மிகமிக முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கென்று ஒரு பாதுகாப்பு உறுதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வாய்ப்புக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக