செவ்வாய், 16 ஜூலை, 2019

தேவேந்திரகுல வேளாளர்களையும், தமிழர்களையும் 60 ஆண்டுகாலமாக ஏமாற்றி வருவது யார்? - DR. கிருஷ்ணசாமி

“துண்டுச் சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு நிமிடம் கூட பேச முடியவில்லை இதில் முதல்வர் கனவு வேறு”
தேவேந்திரகுல வேளாளர்களையும், தமிழர்களையும் 60 ஆண்டுகாலமாக ஏமாற்றி வருவது யார்?
கண்டுகொள்! தமிழகமே கண்டுகொள்!!
ஸ்டாலினின் குடும்பக் கட்சியான திமுகவின் அரை நூற்றாண்டுகால ஏமாற்று வேலைகளை தமிழகமே கண்டுகொள்!!
- DR. K. கிருஷ்ணசாமி
(புதிய தமிழகம்)


அன்புள்ளம் கொண்ட தமிழ் மண்ணின் சொந்தங்களுக்கும், இந்திய தேசியத்தை உயிர்மூச்சாகக் கருதுகின்ற சகோதர, சகோதரிகளுக்கும், புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது அன்பு கனிந்த வணக்கம்!

ஸ்டாலின் – குடும்ப வாரிசுக் கட்சியின் பத்திரிக்கையில்
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வந்த செய்திக்கு இன்னும் மறுப்பு வரவில்லையே என்று பலரும் நம்மிடத்திலே கேள்விகள் கேட்ட வண்ணம் உள்ளனர். அடுத்தநாளே அதற்கு மறுப்பு செய்தி மட்டும் போட்டு விடலாமா என்று யோசித்தேன். ஆனால், தமிழ்நாட்டை ஏறக்குறைய 60 ஆண்டுகாலமாக திராவிடத்தின் பெயராலும், தமிழின் பெயராலும் ஏமாற்றிப் பிழைப்பு நடத்தி வருகின்ற அந்தக் குடும்பக் கட்சியினுடைய பித்தலாட்டங்களை ஒட்டுமொத்தத் தமிழர்களிடத்தில் அம்பலப்படுத்துவதற்கான ஓர் அரிய வாய்ப்பை அவர்களாகவே நமக்கு உருவாக்கித் தந்திருக்கின்ற பொழுது, ஓரிரு நாட்கள் காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, திராவிடப் போலிகளை, தமிழின வஞ்சகர்களின் நரித்தனத்தை இத்தோடு பொசுக்கிவிடவேண்டும் என்று முடிவெடுத்ததால் தான் இரண்டு நாட்கள் கூடுதலாக தாமதம் ஆகிவிட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிப்பது குறித்து கடந்த 8-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 16 கட்சிகள் 10% இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. புதிய தமிழகம் உள்ளிட்ட 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

பரந்துபட்ட மக்களுடைய ஆதரவைப் பெற்றிருக்கக்கூடிய அரசியல் கட்சிகளை அழைப்பதென்பது, அனைத்துக் கட்சிகளுடைய கருத்துக்களையும் அறிந்து ஒரு சரியான முடிவெடுப்பதற்காகவே. 10% இடஒதுக்கீட்டிற்கு தமிழக அனைத்து அரசியல் கட்சியினரும், மக்களும் ஆதரித்து ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், இதுபோன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவசியம் இல்லாமல் கூட போயிருக்கலாம். ஆனால், மாற்றுக் கருத்துக்களும் இருக்கின்ற காரணத்தினால், ஒரு சரியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்பாக மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், நல்ல நோக்கத்தோடு அரசு இக்கூட்டத்தை நடத்தியிருக்கிறது. இக்கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சியினுடைய நிலைப்பாடாக 10% இடஒதுக்கீட்டை மாநில அரசு காலம் தாழ்த்தாமல், துணிவுடன் நிறைவேற்ற வேண்டுமென்றும், அதற்குண்டான வலுவான ஆதாரங்களையும் எடுத்து வைத்தோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஸ்டாலினின் கட்சிப் பத்திரிக்கையில், ”முன்னேறிய வகுப்பினரின் 10% இடஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுத்து, தேவேந்திரகுல மக்களை ஏமாற்றி வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி! கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் அறிக்கை!”என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளிவந்திருப்பதாக நம்முடைய கட்சிப் பொறுப்பாளர்கள் நமது கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். உடனடியாக அந்தப் பத்திரிக்கை ஒன்றை வாங்கி வரச் சொன்னேன்; அந்தப் பத்திரிக்கை எங்கும் கிடைக்கவில்லை; ஏனெனில், அவர்கள் கட்சிக்காரர்களே வாங்கிப் படிக்காத பத்திரிக்கை அது.

பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த பிராமணர், ஐயர், ஐய்யங்கார், சைவ முதலியார், ரெட்டியார், சைவப் பிள்ளை, நாயுடு, நாட்டுக்கோட்டைச் செட்டியார், இராஜூக்கள், வைசிய செட்டியார் உள்ளிட்ட 69 சமுதாய மக்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தின்படி, 10% இடஒதுக்கீட்டின் கீழ், தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நான் பேசியதில் என்ன தவறைக் கண்டீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்? முற்பட்ட பிரிவில் இருக்கக்கூடிய ஏழைகளுக்காக நான் பரிந்து பேசியதற்கு உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வருகிறது? ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள் பெயரில் அந்த அறிக்கை வந்திருந்தது. பாவம்! பரிதாபம்! நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் அவருக்கு திமுக வாய்ப்பளிக்க மறுத்த காரணத்தினால், அரசியலில் ஓரங்கட்டப்பட்டு, உள்ளம் வெதும்பியிருந்த அவரை எப்படியோ தேடிப்பிடித்து, எங்கிருந்தோ, எவரோ எழுதிக் கொடுத்த அறிக்கையில், கையெழுத்துப் பெற்று, அந்த செய்தியை வெளியிட்டிருக்கிறீர்கள்.

என்னதான் இருந்தாலும் கடந்த 60 ஆண்டுகாலமாக திராவிடம் பேசியும், தமிழ் பேசியும் தமிழகத்திற்கு நயவஞ்சகம் செய்த ஸ்டாலின் கும்பலின் மோசடித் தனத்திற்கும், திமுகவின் நரித் தந்திரத்திற்கும் விஜயன் பலகடா ஆகியிருக்கக் கூடாது.

தேவேந்திரகுல மக்களுடைய மனித உரிமையும், மண்ணுரிமையும், வாழ்வுரிமையும், அவர்களுடைய அடையாளமும் கேள்விக்குறி ஆக்கப்பட்ட போதெல்லாம் கருணாநிதி - ஸ்டாலின் குடும்பக் கட்சி உற்றத் துணையாக விளங்கிய வரலாறு இல்லை. ஆனால், ஸ்டாலின் குடும்பக் கட்சியின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தும் போதெல்லாம் அவர்கள் கட்சிக்குள்ளே செல்லாக்காசாக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களைத் தேடிப்பிடிப்பது, அவர்களைத் திடீர் தலைவர்களாக்குவது, அவர்களை நமக்கு எதிராக செயல்படத் தூண்டுவது, இதுதான் இவர்களுடைய அரசியல் பாணி. இது நமக்கெதிராக மட்டுமல்ல, இதே கீழ்தரமான தரங்கெட்ட பாணியைத் தான் எல்லா தமிழ் சமுதாய மக்களிடத்திலும் கருணாநிதி - ஸ்டாலின் குடும்பம் கடைபிடித்து வந்துள்ளது.

எனக்கு இந்த அறிக்கையைப் பார்த்தவுடன் சிறிதும் கூட கோபம் வரவில்லை; உண்மையிலேயே மகிழ்ச்சி தான் வந்தது. ஏனெனில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நான் கேட்ட கேள்விகளால் எந்தளவிற்கு ஸ்டாலின் மிரண்டு போயிருக்கிறார் என்பதையே அது பிரதிபலிக்கிறது. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக, துணை முதல்வராக, மேயராக இருந்தவர், இப்பொழுது முதல்வர் கனவு வேறு. ஆனால், துண்டுச் சீட்டு இல்லாமல் அவரால் அக்கூட்டத்தில் ஒரு நிமிடம் கூட பேச முடியவில்லை.

அன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 21 கட்சிகள் கலந்து கொண்டன; பாரதிய ஜனதா கட்சி, தமிழக காங்கிரஸ் கமிட்டி, சிபிஎம், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 10% இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசின; அதிமுக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துப் பேசின; திமுகவுடன் கூட்டணியிலிருந்த காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்துப் பேசின; அது அந்தந்த கட்சிகளின் கொள்கையினுடைய வெளிப்பாடு. ஸ்டாலின் அவர்களே நீங்கள் உங்கள் அப்பாவினுடைய உழைப்பில் வளர்ந்தவர். நாங்கள் அப்படியல்ல, எங்களது சொந்த உழைப்பில் வளர்ந்தவர்கள். உங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கே உங்களோடு ஒத்தக் கருத்து இல்லாத போது, எங்களுக்கு எதிராக மட்டும் அறிக்கை விட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது?

அகில இந்திய அளவில், 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விசயம் அது; தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் வலுவாக இருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த வாரத்தில் சட்டமன்றத்திலும் இதுகுறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார்; அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தெளிவுபடுத்தினார். 10% இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமலாக்க முன் வந்தால் மருத்துவப் படிப்புக்கான இடங்களில், 25% கூடுதல் இடங்கள் ஒதுக்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றத் தகவலையும் தந்தார்.

”தமிழகத்தில் இருக்கக்கூடிய 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பெருந்துறை போக்குவரத்துக் கழக மருத்துவக் கல்லூரி, இரண்டு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 28 மருத்துவக் கல்லூரிகளில் இப்போது இருக்கக்கூடிய மாணவர் சேர்க்கையில் எந்த மாற்றமும் இருக்காது. உதாரணத்திற்கு, தமிழகத்தில் மொத்தம் 5800 மருத்துவ இடங்கள் இருக்கிறதென்றால் 1400 இடங்களை கூடுதலாகக் கொடுப்பதற்கு மத்திய அரசு முன்வருகிறது. அதில் 385 இடங்கள் முற்பட்ட பிரிவிலுள்ள ஏழைகளுக்குப் போக, 1015 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பாருக்கு கூடுதலாகக் கிடைக்கும். எனவே எந்த சூழ்நிலையிலும் ஏற்கெனவே இருக்கின்ற 69% இடஒதுக்கீட்டிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது; 10% இடஒதுக்கீட்டால் முற்பட்ட பிரிவினரில் மிகவும் ஏழைகள் தானே பயன்பெறப் போகிறார்கள்; அவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பிள்ளைகள் தானே; எனவே ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?” என்று நான் என்னுடைய வாதங்களை முன்வைத்தேன். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் வெறும் ஆத்திரப்படுவது எந்த விதத்தில் நியாயம்? 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு, மேல்நிலைத் தேர்வில் மதிப்பெண் அதிகமாக இருந்தும், நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெறாத காரணத்தினால் ஒரு மாணவி மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழக்க நேரிட்டது. அதைச் சுட்டிக்காட்டி இன்று வரையிலும் நீட் எதிர்ப்பு அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ஆனால், 1400 தமிழ் பிள்ளைகள் மருத்துவம் படிக்கும் ஓர் அரிய வாய்ப்பு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என மொத்தம் 7000 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கின்ற பொழுது அதற்கு ஏன் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்? என்று தான் நான் வலியுறுத்தினேன்.

Forward என்ற பெயரில் இருக்கின்ற காரணத்தினாலேயே அவர்கள் முன்னெறியவர்கள் என்று நாமாகவே முடிவு செய்து விடக் கூடாது. சுதந்திர இந்தியாவில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எனவே அவர்களுடைய இன்றைய வாழ்நிலையைக் கணக்கிலே கொண்டு, அவர்களில் ஏழைப் பிள்ளைகளுக்கு உண்டான உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டையே நாம் வலியுறுத்தினோம். ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுக்கொருமுறை பட்ஜட், 110 விதிகள், அந்நிய முதலீடுகள் என அனைத்துமே, நம் மக்களுடைய வாழ்நிலையை மேம்ப்படுத்துவதற்கும், மக்களிடையே நிலவும் அனைத்துவித ஏற்றத்தாழ்வுகளையும் களைவதற்கும் தான்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொள்ள முடியாது என்று சொல்ல முடியாது; எல்லா இடத்திலும் பொருளாதாரச் சூழலும் அளவுகோலாக இருக்கும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் எடுத்து வைத்த வாதங்களுக்கு முறையாக பதில் சொல்ல முடியவில்லை என்று சொன்னால், அதற்கு மேல் ஸ்டாலினிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று தான் பொருள். பெரிய கட்சி, சிறிய கட்சி என்று எதுவும் கிடையாது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்க முடியாமல் மண்ணைக் கவ்விய கட்சி தான் திமுக. இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு வந்திருக்கக்கூடிய வெற்றி, அவர்களுடைய சொந்த செல்வாக்கால் பெற்றதல்ல; செயற்கையாக உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வால், கள்ளத்தனமாக பெற்ற வெற்றி அது. அந்த வெற்றி நிரந்தரமானதல்ல, அது நிதர்சனமானதும் அல்ல; எனவே அந்த மிதப்பில் வாரிசுக் குடும்பக் கட்சி செயல்படுமேயானால், அதை சந்திக்கப் புதிய தமிழகம் என்றும் தயாராகவே இருக்கிறது; வருங்காலத்தில் அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் புதிய தமிழகமே துளிரும், மலரும், மிளிரும்.

எதிர்கட்சி அந்தஸ்தோடு இருக்கக்கூடிய ஒரு கட்சி நம்முடைய கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டுமென்றால், கொள்கை ரீதியாக சொல்லியிருக்க வேண்டும். அதைவிடுத்து, ’முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு குரல் கொடுத்து தேவேந்திரகுல மக்களை ஏமாற்றுகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி’ என்று ஒரு மாவட்டத்தைத் தாண்டி வேறெங்கும் அறிமுகமில்லாத ஒரு நபரை வைத்து நமக்கு எதிராக அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? புதிய தமிழகம் கட்சி இம்மண்ணிலுள்ள அனைவரது முன்னேற்றத்திற்கும் குரல் கொடுக்கும் கட்சியே.

சமூகத் தளத்தில் அவர்களுக்கு முற்பட்டோர் என்ற பெயர் இருக்கலாம்; பொருளாதாரத் தளத்தில் அவர்கள் முன்னேறவில்லையென்றால் அவர்களையும் முன்னேற்றுவதற்கு குரல் கொடுக்கக்கூடிய கட்சி தான் புதிய தமிழகம் கட்சி. மத, சாதிய, பொருளாதார வேறுபாடுகளைக் களைவதற்காக பாடுபடக்கூடிய கட்சியே புதிய தமிழகம் கட்சி. பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு குரல் கொடுத்தால் தேவேந்திரகுல வேளாளர்களை எப்படி ஏமாற்றுவதாகும்? இதிலிருந்தே உங்களது நரித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஜாதி வெறியைத் தூண்டி, மத வெறியைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்.

தளம் தேவேந்திரகுல வேளாளராக இருந்தாலும், அனைத்து மனிதர்களின் மனித உரிமையை காப்பதற்காக உருவான கட்சியே புதிய தமிழகம். எனவே புதிய தமிழகத்தின் மீதான திமுகவின் குருட்டு பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆமாம்! திமுகவிற்கும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் என்ன சம்பந்தம் உண்டு? நீங்கள் எப்பொழுது தேவேந்திரகுல வேளாளர் என்று அம்மக்களை அங்கீகரித்தீர்கள்? இந்தப் புதுப்பாசம் எப்பொழுதிருந்து உங்களுக்கு வந்தது? தேவேந்திரகுல மக்களையும், தமிழகத்தில் பிற விளிம்புநிலை மக்களையும் திமுக துவங்கப்பட்ட காலத்திலிருந்து ஏமாற்றி வருபவர்கள் நீங்கள் தானே. ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய, நிலப்பகுதியை ஒன்றாக்கி தனிநாடு பெறுவது தானே உங்கள் கட்சியினுடைய அடிப்படைக் கொள்கை. அந்த அடிப்படைக் கொள்கையான திராவிட நாடு கொள்கையை ஏன் கைவிட்டீர்கள்? நீங்கள் கட்சித் துவக்கியபோது நீங்கள் முழங்கிய முழக்கம் என்னவாயிற்று? கேரளாவில் உங்கள் கட்சி எங்கு இருக்கிறது? கர்நாடகாவில் உங்கள் கட்சி எங்கு இருக்கிறது? ஆந்திராவில் உங்கள் எங்கு இருக்கிறது? நீங்கள் திராவிட நாடு கொள்கையை கைவிட்ட பிறகு தமிழக முன்னேற்றக் கழகம் என்று தானே பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்றிப் பிழைப்பது நீங்களும் உங்கள் குடும்பமும் தானே? உங்களுடைய எல்லாவிதமான வரலாறும் எல்லோருக்கும் தெரியும். உங்கள் குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட பொழுது அதிலிருந்து தப்பிப்பதற்காக, இன்றளவும் தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்ககூடிய இலங்கைக்கு கச்சத்தீவைத் தாரைவார்த்து, தமிழக மீனவர்களையும், தமிழர்களையும் ஏமாற்றியவர்கள் நீங்கள்.

காவிரியையும் தமிழகத்தையும் விட்டுப் பிரிக்க முடியாது. நதியையும் மலையையும் எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் சொந்தங்கொண்டாட முடியாது. அவை அந்த மண்ணுக்கேச் சொந்தம். அந்த வகையில் தமிழகத்தின் காவிரி உரிமையை எவரும் மறுக்க இயலாது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்று, காவிரி உரிமையை விட்டுக்கொடுத்து, தமிழகத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் தானே நீங்கள்.

பன்னாட்டு உதவியோடு இலங்கை அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் ஈழத்தமிழ் மக்கள் மீது இறுதிப் போரை நடத்திய போது, கொத்துக் குண்டுகளால் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்களே, அன்று மத்தியிலும் ஆட்சியிலே பங்கு, மாநிலத்திலும் ஆட்சி-அதிகாரம்; அந்த ஆட்சி, அதிகாரத்தை சுவைப்பதற்காக நீங்கள் 1 ½ இலட்சம் தமிழர்களை காவு கொடுத்தீர்களே… 3 இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் தள்ளினீர்களே… அங்கேயும் இலட்சக்கணக்கிலே தேவேந்திரகள் உண்டு… உங்களை விட தமிழர்களை ஏமாற்றியவர்கள் உலகத்தில் யார் உண்டு?

1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின் போது, ஏறக்குறை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தேவேந்திரகுல வேளாளர்கள் தங்கள் சொந்தக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து அல்லல்பட்ட பொழுது, காங்கிரஸ் ஆட்சியை மட்டும் விமர்சனம் செய்துவிட்டு, அப்படியே நழுவிக் கொண்டீர்களே… அன்று தேவேந்திரகுல வேளாளர்களைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் எடுத்த கள நடவடிக்கை என்ன?

நீங்கள் பிறந்த ஊரான திருக்குவளையிலே இருந்து 10-வது கிலோமீட்டர் தொலைவில் கீழவெண்மணி; 1968-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக தேவேந்திரகுல சமுதாயத்தைச் சேர்ந்த 44 பேர் முதியோர், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஒரே குடிசையில் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்களே… அன்று ஆட்சி செய்தது நீங்கள் தானே; 44 தேவேந்திரர்களை தீயிட்டு கொலைசெய்த அந்த குற்றவாளிகள் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? மாறாக, முதல் குற்றவாளியான பண்ணையாரை விடுவித்து, சிறைச்சாலைக்கேச் சென்று மாலை, மரியாதையோடு வரவேற்பு செய்தவர்கள் அல்லவா நீங்கள்? தேவேந்திரகுல வேளாளர்களை இதைவிட யார் ஏமாற்றியிருக்க முடியும்?

1980 முதல் 1981 வரையிலும் தென்தமிழகத்தில் எங்கு பார்க்கினும் சாதிய ஒடுக்குமுறைகள் நடந்து பல தேவேந்திரர்கள் கொல்லப்பட்டார்கள். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே அய்யாபுரத்தில் 6 தேவேந்திரர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்கள். 1982-ல் தென்காசி - பண்பொழி அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் சமூக ஒடுக்குமுறையால், அப்பொழுது புதிய தமிழகம் கட்சி போன்று வலுவான இயக்கம் இல்லாத காரணத்தினால், மதம் மாறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்களே, நீங்கள் அவர்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? 1989, 1991-ஆம் ஆண்டுகளில் உங்களது ஆட்சிக் காலத்தில், தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரத்தில் ஏற்பட்ட கலவரத்தில், நீங்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்ட காரணத்தினால், 60-க்கும் மேற்பட்ட தேவேந்திரர்கள் கொல்லப்பட்டார்களே.. தேவேந்திரர்களுக்கு வஞ்சகம் செய்தது நீங்கள் தானே.

1995-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி நெல்லை மாவட்டம், வீரசிகாமணியில் துவங்கிய தேவேந்திரர்களுக்கு எதிரான சாதிக்கலவரம், தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம் வரை நீடித்து, ஆகஸ்டு 31-ஆம் தேதியன்று 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை அன்றைய காவல்துறை சூறையாடக்கூடிய நிலை உருவாயிற்று. அப்போது தேவேந்திரகுல வேளாளர்களுக்காக பரிந்து பேசினால், இன்னொரு தரப்பினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று ஒதுங்கிக் கொண்டது தானே உங்கள் குடும்பம். அன்றைய தென்மாவட்டக் கலவரத்தின் போது தேவேந்திரகுல வேளாளர்களை பாதுகாக்க நீங்கள் செய்த அரசியல் நடவடிக்கை என்ன? 1995-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி துவங்கி 1996-ஆம் ஆண்டு ஜனவரி வரையிலும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேவேந்திரகுல மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன; வாரம் ஒரு மாவட்டத்தில் பந்த் நடத்தினார்கள்; அன்று நான் தானே கோவையிலிருந்து தென்தமிழகத்திற்கு ஓடோடிச் சென்று தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்காகக் குரல் கொடுத்தேன். தேவேந்திரகுல சமுதாயமே இருந்த இடம் தெரியாமல் பூண்டோடு அழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டபொழுது, அந்த சமுதாயத்தை சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்தும், அரச பயங்கரவாதத்திலிருந்தும் பாதுகாத்துக் கொடுத்தது நாங்கள் தானே… தேவேந்திரகுல மக்களுடைய பல நூறாண்டுகாலம் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுத்து இந்த மண்ணில் அவர்களை தலைநிமிர்ந்து நடக்க வைத்திருப்பது நாங்கள்; நீங்கள் அவர்களுக்கு உங்கள் வாழ்நாளெல்லாம் செய்தது பச்சைத் துரோகம்.

கொடியங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தேவேந்திரகுல மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் உண்மை நிலையறிந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், கொந்தளித்திருந்த தேவேந்திரகுல மக்களை சாந்தப்படுத்த வேண்டும் என்பதற்காக, தேவேந்திரகுல சமூகத்தில் பிறந்து சுதந்திரப் போராட்டத் தியாகியான வீரன் சுந்தரலிங்கனார் பெயரில் விருதுநகரை மையமாக வைத்து போக்குவரத்துக் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், 1996 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பின் காரணமாக சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகம் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. தேவேந்திரகுல மக்கள் மத்தியில் அதிமுக மீது ஏற்பட்ட எதிர்ப்பலையால் 1996-ல் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். அந்தத் தேர்தலில் தனித்து நின்று புதிய தமிழகம் வெற்றி பெற்றது.

1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும், ஜெயலலிதா அவர்கள் அறிவித்த வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகம் நடைமுறைக்கு வரவில்லை. அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி எனது தலைமையிலேயே மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதிக்குள்ளாக வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகம் நடைமுறைக்கு வரவில்லையெனில், மே 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வேறு எவர் பெயரிலும் போக்குவரத்துக் கழகமோ, மாவட்டமோ இயங்க அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தோம். அதைத் தொடர்ந்து அறிவிப்பு வந்தது.

மே 1-ஆம் தேதி முதல் வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகம் செயல்படத் துவங்கியது; ஆனால், அதை அரசு விழாவாகக் கொண்டாடவில்லை; ஒரு அமைச்சரோ, உயர் அதிகாரியோ கூட துவக்கி வைக்க வரவில்லை; வீரவசனத்திற்குப் பெயர்பெற்ற உங்களுடைய அப்பா, வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்தை நியாயப்படுத்தி ஒரு வரி கூட பேசவில்லை. எப்பொழுதுமே ஒருவருடைய பெயர் சூட்டப்பட்டால், அந்த மாவீரருடைய புகழ் பாடப்படவேண்டும். கருணாநிதிக்கு தளபதி சுந்தரலிங்கத்தினுடைய புகழ் பாடுவதற்கு வாய் முன்வரவில்லை. வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகம் என்ற பெயருடன் பேருந்துகள் மட்டும் இயங்கின;

அதிமுக தோற்ற காரணத்தால் ஒரு பிரிவினர் உங்கள் குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தனர்; அவர்களை எப்படியாவது திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களை வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்திற்கு எதிராகவும் தேவேந்திரகுல மக்களுக்கு எதிராகவும் தூண்டிவிட்டீர்கள். தென்மாவட்டங்கள் கலவர பூமியாயின.

தேவேந்திரகுல வேளாளருடைய அந்த ஒரு அடையாளம் கூட இருக்கக் கூடாது என்பதில் தான் கருணாநிதி முழு மூச்சாக இருந்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, உங்களுடைய கூட்டணிக் கட்சியினரை முன்மொழிய வைத்து தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் அடையாளம் இருக்கக் கூடாது என்பதற்காக எல்ல தலைவர்களுடைய பெயரையும் எடுப்பதற்குத் துணிந்து, கண்முன்னால் தேவேந்திரகுல வேளாளர்களை ஏமாற்றிய வஞ்சகக் குடும்பம் நீங்கள்.

அதுமட்டுமல்ல, வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகத்தை போராடிப் பெற்றதற்காக வேண்டுமென்றே என்னை தேனியில் கைது செய்து வேலூர் சிறையிலடைத்தீர்கள். ஆனால், என் மீதோ, எங்கள் கட்சிக்காரர்கள் மீதோ குற்றம் சுமத்துவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?.

1999-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பரவி இருக்கக்கூடிய 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, நியாயமான சம்பளம் கேட்டு போராடிய 1 ½ வயது குழந்தை விக்னேஷ் உட்பட 17 பேரை தாமிரபரணி ஆற்றில் அடித்து கொலை செய்த குற்றவாளிகள் நீங்கள்.

சமூகநீதி பேசக்கூடிய உங்கள் ஆட்சியில் இன்று வரையிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் அங்கம் வகிக்கும் பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முறையாக அமலாக்கப்படாததை சுட்டிக்காட்டி, நான் வெள்ளையறிக்கை கேட்ட போது, 3 இலட்சம் பின்னடைவு பணியிடங்களை மூடி மறைத்து, வெறும் 5500 பணியிடங்களை பின்னடைவுப் பணியிடங்கள் என்று காட்டி ஏமாற்றிய குற்றவாளிகள் நீங்கள்.

இலட்சக்கணக்கான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்திருந்த அந்த நேரத்தில், வெள்ளையறிக்கை கேட்டு உங்களுடைய போலி சமூகநீதியை அம்பலப்படுத்தியதற்காக, பழிவாங்குகிற நோக்கத்தோடு, மத்திய அரசினுடைய அனுமதி இல்லாமல், பட்டியல் வகுப்பினருக்கான 18% இடஒதுக்கீட்டை உடைத்து, 3% உள் இடஒதுக்கீட்டை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு தாரைவார்த்த குற்றவாளிகள் நீங்கள். அதனால் இன்று வரையிலும் ஆயிரக்கணக்கான தேவேந்திரகுல இளைஞர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை இழந்து தவிப்பதை நீங்கள் அறியாமலா இருந்திருப்பீர்கள்? பலமுறை உங்களை வெற்றி பெற வைத்த தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலிலிருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு 6% இடஒதுக்கீடு கொடுத்திருக்கலாமே? ஆனால், நீங்கள் அதை செய்ய முன்வரவில்லை. இலட்சக்கணக்கான பின்னடைவுப் பணியிடங்களை மறைப்பதற்காகத் தான் உள் இடஒதுக்கீடு பிரச்சினையை கையிலெடுக்கிறீர்கள் என்று உங்கள் மீது குற்றம் சுமத்தி அந்தக் கூட்டத்திலிருந்து நான் வெளிநடப்பு செய்ததை ஸ்டாலின் அவர்களே நீங்கள் அறிந்திருந்தும் கொஞ்சம் கூட அரசியல் நாணயம் இல்லாமல், உள் இடஒதுக்கீட்டை நான் ஆதரித்தது போல அறிக்கை கொடுக்க வைக்கிறீர்கள். இது எவ்வளவு அப்பட்டமான பொய்?

புதிய தமிழகம் கட்சி துவங்கப்படுவதற்கு முன்பு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பைத் தான் துவக்கியிருந்தோம். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு துவக்கப்பட்டபோதே முதல் போராட்டம் ஆறு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என மதுரையில் உண்ணவிரதப் போராட்டம் நடத்தினோம்; அதைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டையில் பேரணி; 1994-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி நாமக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு. அந்த மாநாட்டினுடைய மிக முக்கியமான கோரிக்கையே தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் தான்.

1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் உறவுகள் பற்றி பேசுவதற்காக தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினுடைய நிர்வாகிகள் மூன்று பேர் உங்களது அப்பாவையும், அன்று முதல் இன்று வரையிலும் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய பேராசிரியர் அன்பழகனையும் சந்தித்தார்கள். அப்பொழுது கூட்டணிக்கு நாங்கள் முக்கியமாக வைத்த கோரிக்கை தேவேந்திரகுல வேளாளர் அரசாணை தான்.

ஆனால், உங்கள் தந்தையும் பேராசிரியர் அன்பழகனும் அன்று என்ன வாக்குறுதி கொடுத்தார்கள் என்று நினைவாற்றல் மிக்க பேராசிரியர் அன்பழகனாரிடமே கேட்டுப் பாருங்கள்.

அதற்குப் பிறகு 1996 முதல் 2001 வரை 5 ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டத்தை தேவேந்திரகுல வேளாளர் சமூகமும் புதிய தமிழகம் கட்சியும் நடத்தியிருக்கின்றன. புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 1998-ஆம் இராமநாதபுரத்தில் நடந்த முதல் மாநில மாநாட்டிலும், 2000-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டிலும், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற நெல்லையில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிலும், 2005-ஆம் ஆண்டு கோயம்புத்தூர், 2008-ஆம் ஆண்டு மதுரை என அனைத்து மாநாடுகளிலும் எங்களது முதன்மையான கோரிக்கையே தேவேந்திரகுல வேளாளர் அரசாணை தான்.

2011 முதல் 2016 வரையிலும் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, எத்தனையோ முறை இந்தக் கோரிக்கைக்காக வெளிநடப்பு செய்திருக்கிறேன் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கை வேண்டாம் என்று உங்கள் அப்பாவிடம் சொன்னதாக அறிக்கை விட வைத்திருக்கிறீர்கள். 2009-ஆம் ஆண்டு ஈழத்திலே போராட்டம் தீவிரமான பொழுது நீங்கள் ஆட்சியிலிருந்து ஈழத்தமிழர்களுக்கு உதவாத நிலையில், உங்களை எதிர்த்துத் தானே 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தினோம். ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகங்களை எதிர்த்து நாங்கள் வலுவாக போராட்டங்களை முன்னெடுத்த போது தான், 2011-ஆம் ஆண்டு தான் நீங்கள் ஜனார்த்தனன் ஆணையம் அமைத்தீர்கள். திமுக அரசை எதிர்த்து உச்சகட்ட போராட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், நான் உங்கள் தந்தையை சந்தித்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வேண்டாம் என்று பேசியதாக உங்களால் எப்படி ஒரு அப்பட்டமான பொய்யை சொல்ல முடிகிறது.

ஸ்டாலின் அவர்களே, 2011 முதல் 2016 வரையிலும் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, சட்டமன்றத்தில் ஜெயலலிதா அவர்களுடன் நான் வாதாடிய போதெல்லாம் நீங்களோ, உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களோ தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கைகளை ஆதரித்ததுப் பேசியதுண்டா? 3% சதவீதத்தை 6% சதவீதமாக ஆக்குவதற்காக உங்கள் இரத்தம் கொதிக்கிறது, இதயம் துடிக்கிறது. தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கை குறித்து எந்த இடத்திலாவது நீங்கள் பேசியதுண்டா? மதுரை விமான நிலையத்திற்கு தேவேந்திரகுல வேளாளர்கள் யார் பெயரை வைக்க வேண்டுமென்று போராடுகிறார்கள்? நீங்கள் யார் பெயரை வைக்க வேண்டுமென்று போராடுகிறீர்கள்.

சிறப்பு உட்கூறு திட்டம் பற்றி திடீர் பாசம் கொள்கிறீர்கள். அதைப்பற்றி எனக்கே நீங்கள் பாடம் எடுக்கப் போகிறீர்களா? நீங்கள் கோவையில் நடத்திய செம்மொழி மாநாட்டிற்கும், இலவச டிவி திட்டத்திற்கும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை உங்கள் ஆட்சியில் பயன்படுத்தியை அம்பலப்படுத்தியதே நான் தானே. இது குறித்து இமயம் டிவியில் அன்றைய ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் யசோதாவுடன் நேர்காணல் பேட்டியில், ’ஏன் நீங்கள் இதுகுறித்து சட்டமன்றத்தில் பேச மறுக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்ட போது அவர் பாதியிலேயே எழுந்து ஓடியதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். உங்களுடைய இந்த செயலை தேசிய பட்டியலின ஆணையமே கண்டித்தது உங்களுக்குத் தெரியாதா?

உண்மையிலேயே உங்களுக்கு தைரியமிருந்தால் நேர்மையிருந்தால் உங்கள் பெயரிலே அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, விஜயன் பெயரில் பொய்யாகவும், தவறாகவும் ஒரு அறிக்கை தயார் செய்து, இதிலேயும் ஒரு தேவேந்திரகுல வேளாளரை பலிகடா ஆக்கியிருக்கிறீர்கள்.

தேவேந்திரகுல மக்களுக்கும், பட்டியல் பிரிவினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், தமிழ் மக்கள் அனைவருக்கும் நீங்களும் உங்கள் குடும்பமும் செய்த துரோகங்கள் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்; நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

அரசியல் ரீதியாக ஒரு காலத்திலும் எனக்கோ, எங்கள் கட்சிக்கோ, தேவேந்திரகுல மக்களுக்கோ நீங்கள் துணை நின்ற வரலாறு இல்லை. 2001-ஆம் ஆண்டு எல்லோரும் உங்களை கைவிட்ட நேரத்தில் நான் தான் உங்களுக்குத் துணை நின்றேன். அப்பொழுதும் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வஞ்சகம் செய்து எங்களைத் தோற்கடித்தீர்கள். 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசித் தொகுதியிலும், 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், திருவில்லிப்புத்தூர், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் உள்ளடி வேலைகள் செய்து எங்களைத் தோற்கடித்தீர்கள். 2011 முதல் 2016 வரை நாங்கள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நேரத்திலும் உங்களது சகோதரிக்கும், உங்கள் கட்சியில் இன்னொருவருக்கும் இராஜ்யசபா உறுப்பினர் பதவி தந்து, வாழ்வு கொடுத்தோம். தேவேந்திரகுல மக்களுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கும் எல்லா காலத்திலும் நீங்கள் தீங்கு தான் செய்திருக்கிறீர்கள். எம்மக்களை ஏமாற்றியே நீங்கள் ஏற்றம் பெற்றிருக்கிறீர்கள்.

பொய்யான வாக்குறுதிகளால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை வைத்து அகங்காரம் பிடித்து அலையாதீர்கள். சூரைக்காற்று எதை வேண்டுமானாலும் மேலே பறக்க வைக்கும். வஞ்சகம் என்றும் நிலைக்காது மிஸ்டர் ஸ்டாலின். பணத்தாலும், வேறு பலத்தாலும் நீங்கள் பெரியவராகக் காட்டிக் கொள்ளலாம்.

தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்காக நாங்கள் எங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறோம். தமிழ் சமுதாயத்தின் ஒற்றுமைக்காக உறுதியாக நிற்கிறோம். தேச ஒற்றுமைக்காக என்றென்றும் துணை நிற்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக