வெள்ளி, 19 ஜூலை, 2019

கீழே இருக்கின்ற சக்கரம் மேலே வரும் - மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விவாதம்.

’கீழே இருக்கின்ற சக்கரம் மேலே வரும்’
”22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது; 9 பெரியதா – 13 பெரியதா?”
”அதிமுகவின் 12 தொகுதிகளை வென்றது திமுகவின் வளர்ச்சியைக் காட்டுகிறது”

-  மு.க.ஸ்டாலின் .
(தலைவர், திமுக.)

நேற்றைய முன் தினம் மத்திய அமைச்சரவையில் தேசிய எக்ஸிட் தேர்வு குறித்து ஒரு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது. அதுகுறித்து சில விளக்கங்களை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து நான் பெற விரும்புகின்றேன்.
தேசிய மருத்துவக்கழக அமைப்பு தொடர்பான மத்திய அரசின் புதிய மசோதா மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் நேற்று முன்தினம் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேசிய மருத்துவக் கழகத்தின் உறுப்பினர்கள் நியமனத்தை பொருத்தமட்டில் தமிழகம் போன்று அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கக்கூடிய மாநிலத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை. தேசிய மருத்துவக் கழகத்திற்கு உறுப்பினர்கள் தலைவரை தேர்வு செய்யக் கூடிய Search கமிட்டிக்கும், மாநிலங்களுக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை. முன்பு வெளிவந்த மசோதாவில் எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு தேசிய எக்ஸிட் தேர்வு வைத்திருந்தார்கள். தேசிய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து மருத்துவராகப் பணி புரிவதற்கு இது மிகவும் முக்கியம் என்றும் கூறியிருந்தார்கள்.

ஆனால் இப்பொழுது, எம்.பி.பி.எஸ் கடைசி வருடம் மத்திய அரசே ‘தேசிய எக்ஸிட் தேர்வு’ நடத்தும் என்று கூறியிருப்பது, மாநிலத்தில் இருக்கக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டை முழுவதுமாக மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆபத்து இப்போது ஏற்பட்டிருக்கின்றது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு இந்த
தேசிய எக்ஸிட் தேர்விலிருந்து விலக்களிக்கலாம் என்பது சென்னையில் இருக்கக்கூடிய மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் போன்றவற்றை அவமதிக்கக்கூடிய போக்காக இது அமைந்திருக்கின்றது.

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்லூரிகள் இல்லை என்று மத்திய அரசு கருதுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கின்றது. எனவே, தேசிய மருத்துவக் கழக மசோதாவை கடுமையாக நம்முடைய தமிழக அரசு எதிர்க்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் நடத்துவது மாநிலங்களுடைய உரிமை என்பதை மத்திய அரசிற்கு நம்முடைய மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்று நான் இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவந்து அதே நேரத்தில் வலியுறுத்தி - வற்புறுத்தி கேட்டு அமர்கின்றேன்.

மின்துறை அமைச்சர் அவர்கள் சில விளக்கங்களை சொல்கின்ற பொழுது அங்கு இருக்கக்கூடிய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தூண்டி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதனால் தான் எங்களுடைய உறுப்பினர் மறுக்க வேண்டும் என்பதற்காகத்தான் எழுந்தாரே தவிர வேறொன்றும் அல்ல.

நீங்கள் சொல்வதை நான் மனப்பூர்வமாக முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன் அதில் எந்த மாறுபாடும் கிடையாது. ஆனால், அமைச்சர் அவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது எப்பொழுதும் பொறுமையாகத்தான் சொல்வார் யாரையும் சீண்டி விடக்கூடிய நிலையில் அவர் பேசிவிட மாட்டார் என்பது எனக்கும், இந்த அவைக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் இடையில் தேவையற்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தூண்டிவிடக்கூடிய நிலையில் அவர்களை கொச்சைப்படுத்தக்கூடிய வார்த்தைகளை சொல்லி இருக்கின்றார். எனவே, அதுவும் தவறுதான். நீங்கள் சொல்வது போல் எங்களது உறுப்பினர் ஆட்சேபிக்கின்ற பொழுது துணை முதலமைச்சர் சொன்னது போல், உங்களிடத்தில் நேரத்தையும் வாய்ப்பையும் கேட்டு சொல்லியிருக்க வேண்டும். எனவே, அதற்காக நானும் வருத்தப்படுகின்றேன் அது தவறுதான். எனவே அந்த வார்த்தையை தயவுகூர்ந்து அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டீன் அவர்கள் ஒரு உரிமை மீறல் பிரச்சினை பற்றி அவருடைய மாவட்டத்தில் அவருடைய தொகுதிகளில், நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளில் விளம்பரம் செய்யப்படுகின்ற நேரத்தில் அவருடைய பெயரினைப் போடாமல் டெல்லி பிரதிநிதியின் பெயரினைப் போட்டு நிகழ்ச்சி நடத்துவதாக உங்களிடத்தில் ஒரு உரிமை மீறல் பிரச்சினை கொடுத்திருக்கின்றார்கள். அவர் கொடுத்து நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டது எனவே அதற்கு விளக்கம் கேட்கின்றார்.

இது கன்னியாகுமரி மாவட்டம், ஆஸ்டின் தொகுதியில் மட்டுமல்ல கரூர் தொகுதியில் அரவாக்குறிச்சி தொகுதியில், ஏன் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இது போன்ற பிரச்சினை இருந்து கொண்டே இருக்கின்றது. அதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். அதற்கும் நீங்கள் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இங்கு துணை முதல்வர் அவர்கள் அவருடைய தொகுதியில், அவருடைய மாவட்டத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு முறையாக அழைப்பு அனுப்பப்பட்டிருக்கின்றது வந்து கலந்து கொண்டார் என்று சொன்னார். நீங்கள் அழைப்பு அனுப்பியவுடன் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அழைப்பு வந்திருக்கிறது போகலாமா என்று கூட என்னிடத்தில் கேட்டார்கள். அழைப்பு வந்தால் கட்டாயம் போக வேண்டும். ஏன், முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளக்கூடிய சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட ஆளும் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். எங்களுக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டார்கள் போகவேண்டும் என்றுதான் நான் சொன்னேன். ஆனால், இப்பொழுது என்னவென்றால் முதலமைச்சர் தொகுதியில், அதேபோல் துணை முதலமைச்சர் இருக்கக்கூடிய தொகுதியில் அல்லது மாவட்டத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. பெயர்களோடு சில இடங்களில் அறிவிப்பதில்லை ஆனால் தொலைபேசியில் சொல்லுகின்றார்கள். நாங்களும் போகச் சொல்கின்றோம்.

ஆனால், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வேண்டுமென்றே திட்டமிட்டு எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. எனவே சம்பந்தமில்லாதவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையில், ஆனால் உரிமை பெற்று இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றது. ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றது. அதுதான் கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு ஆளும் கட்சியைச் சார்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றார்கள். ஆனால் திமு கழகத்தின் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை. அதைத்தான் இந்த அவையின் சட்டமன்றத்தின் கவனத்திற்கு நான் கொண்டு வந்திருக்கின்றேன். இதற்குப் பிறகாவது நல்ல முடிவு வரும் என்ற அந்த சூழ்நிலையில் தான் துணை முதலமைச்சர் அவர்களும் விளக்கம் தந்திருக்கின்றார்கள். இது முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.

மக்களவைத் தேர்தலின்போது நாங்கள் என்னென்ன வாக்குறுதிகள் வழங்கி இருக்கின்றோமோ, அதையெல்லாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம். தலைவர் கலைஞர் அவர்கள் எங்களை அப்படித்தான் வளர்த்திருக்கின்றார்கள். எனவே, நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

முதலமைச்சர் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்ததுபோல கீழே இருக்கின்ற சக்கரம் மேலே வரும், மேலே இருக்கின்ற சக்கரம் கீழே வரும். அது வரப்போகின்றது. அதைத்தான் எங்களுடைய உறுப்பினர் பொன்முடியும் சொன்னார்.

22 தொகுதிகளில் தேர்தல் நடந்து, 13 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. 9 இடங்களில் உங்களுடைய அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கின்றது. 9 பெரியதா? 13 பெரியதா? எனவே, மக்களின் ஆதரவு 13 என்றுதான் சொல்லமுடியும். மக்கள் அந்தளவிற்கு 22 தொகுதிகளில் 13ஐ தி.மு.கழகத்திற்கு கொடுத்திருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல, ஏற்கனவே திருவாரூரைத் தவிர்த்து 12 தொகுதிகள் உங்களிடத்தில் இருந்த தொகுதிகள் அதை நாங்கள் கைப்பற்றியிருக்கின்றோம் என்று சொன்னால், எங்களுடைய வளர்ச்சியைத்தான் இது காட்டுகின்றது. நாங்கள் சொன்ன உறுதிமொழியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். நிச்சயமாக நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு உங்கள் கேள்விக்கு பதில் சொல்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக