சனி, 20 ஜூன், 2020

நோய் பற்றியும் அதன் மேலாண்மை குறித்தும் மேலும் அதிக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்: திரு அர்ஜுன் முண்டா



கிராமப்புறங்களிலும் பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் ‘சிக்கிள் செல்’ - Sickle Cell (அரிவாள் போன்ற வடிவம் உள்ள இரத்த சிவப்பணுவினால் ஏற்படும்) நோய் பற்றியும் அதன் மேலாண்மை குறித்தும் மேலும் அதிக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்: திரு அர்ஜுன் முண்டா

உலக சிக்கிள் செல் நாளையொட்டி FICCI, மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம், அப்பல்லோ மருத்துவமனை, நோவர்திஸ் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இணையதளக் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய திரு.முண்டா, “இந்தியாவில் சிக்கிள் செல் நோய் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் அரசு உறுதியாக உள்ளது” என்று கூறினார். 

சிக்கில் செல் தொடர்பான தேவையான தகவல்களை அளிக்கவும், புள்ளிவிவரங்களைச் சேகரிக்கவும், மத்திய அரசு புதிய இணையதளம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது என்றும், இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் திரு.முண்டா கூறினார். பதிவு செய்து கொள்வதற்கான வசதி, நோய் பற்றிய தகவல்கள், நோயை எதிர்கொள்வதற்காக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், உடனுக்குடனான புள்ளிவிவரங்கள் கொண்ட அறிவிப்புப் பலகை ஆகிய அனைத்தும் இந்த இணையதளத்தில் உள்ளன. 

சிக்கிள் செல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு.முண்டா, கோவிட் -19 தொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் இப்போது, கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மக்களும் கோவிட்-19 குறித்து எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். கிராமப்புறங்களிலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும், சிக்கிள் செல் நோய் பற்றி அதிக அளவில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அமைச்சகம் ‘செயல் ஆராய்ச்சி’ திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் யோகாவை வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டு, இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் பிரச்சினைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

சிக்கிள் செல் நோய் குறித்து சமுதாயத்தில் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிக்கிள் செல் நோய் உலகத்திற்கே ஒரு சுமையாக இருப்பது குறித்தும், இந்தியாவில் இந்த நோய் உள்ளது குறித்தும் விவாதிப்பது, இந்த இணையதளக் கருத்தரங்கின் நோக்கமாகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக