வெள்ளி, 19 ஜூன், 2020

வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதற்கும் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான கர்நாடக அரசின் செயல்பாட்டிற்கு மத்திய அரசு பாராட்டு.


தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கும், வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதற்கும் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான கர்நாடக அரசின் செயல்பாட்டிற்கு மத்திய அரசு பாராட்டு.

கோவிட்-19 மேலாண்மையில்,  கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கும், நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, வீடு வீடாக சென்று ஆய்வு செய்வதற்கும், கர்நாடக அரசு பின்பற்றி வரும் சிறந்த நடைமுறைக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.  இந்த நடைமுறை மூலம், கர்நாடகாவில் இதுவரை 1.5 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  பல்துறை அமைப்புகளின் பங்கேற்புடன்,  தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் தலையீடுகளின் ஒத்துழைப்புடன்  ‘ஒட்டுமொத்த அரசு’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசு, இந்த இரண்டு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.   தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்புடையவர்களைத் திறம்படக் கண்டறிவதன் மூலம், நோய்த் தொற்று பரவுவது வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த சிறந்த நடைமுறையை, மற்ற மாநிலங்களும், தத்தமது உள்ளூர் நிலைமைக்கேற்ப பின்பற்றி ,  கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில்  சிறப்பாகச் செயல்படுமாறு, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில்,  தொற்று பாதிப்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது தான் பெரும் சிக்கலாக இருப்பதுடன், சுகாதாரக் கட்டமைப்புகளுக்குப் பற்றாக்குறை ஏற்படாதவாறு உறுதிசெய்ய வேண்டும்.   மத்திய அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ள படி, அதிக ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்து உடைய தொடர்புகளை இணைத்திருப்பதன் மூலம், கர்நாடக அரசு,  ‘தொடர்பு’ என்பதற்கான விளக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.   கர்நாடகாவில்,  முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை,  மிகச்சரியாகக் கண்டறியப்பட்டு,  அனைவரும் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டனர்.  

மாநில அரசால் வரையறுக்கப்பட்டபடி,  தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பொறுப்பு நன்கு பயிற்சி பெற்ற 10,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மூலம் படிப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.   பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதற்கான செல்போன் செயலி மற்றும் இணையதள செயலிகள் பயன்படுத்தப்படுவதால்,  பணிச்சுமை குறைவதோடு,  உண்மையான  நேர்மையானவர்கள் உண்மையாகவே மறந்து போயிருந்தாலோ அல்லது பல்வேறு காரணங்களால் மறைக்க முயற்சிப்பவர்களையும் கண்டறிய முடிகிறது.  

அதிக பரப்பளவைக் கொண்ட மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளுக்குத்  தொற்று பரவுவதையும், அம்மாநிலத்தில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.   குடிசைப் பகுதிகள் அல்லது அதுபோன்ற இடங்களில் வசிக்கும்,  பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களை, அரசு ஏற்பாட்டிலான கட்டாயத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியதன் மூலமே இது சாத்தியமாயிற்று.  கர்நாடகாவிற்கு திரும்புவோர் மற்றும் அம்மாநிலத்திற்கு வரும் பயணிகள் “சேவா சிந்து”  வலைதளத்தில் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கியிருப்பதால், சம்பந்தப்பட்ட நபர், அடுத்த சில தினங்களுக்கு, அவரது வீடு அல்லது அரசு தனிமைப்படுத்துதல் மையத்தில் இருக்கிறாரா என்பதை மாநில அரசு அறிந்து கொள்ள முடிகிறது. தனிமைப்படுத்துதலை முறையாக நடைறைப்படுத்துவதில்,   “தனிமைப்படுத்துதல் கண்காணிப்புச் செயலி” களப் பணியாளர்களுக்கு உதவிகரமாக உள்ளது.   வீட்டில் தனிமைப்படுத்தலை நடைமுறைப்படுத்த,  சமுதாயப் பங்கேற்புடன் கூடிய நடமாடும் குழுக்களையும், அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.    தனிமைப்படுத்தப்பட்ட நபர், அதனை மீறுவதாக, பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்தோ அல்லது பொது மக்களிடமிருந்தோ, தகவல் வரப்பெற்றால்,   சம்பந்தப்பட்ட நபர், அரசு தனிமைப்படுத்துதல் மையத்திற்கு மாற்றப்படுகிறார்.  

எளிதில் பாதிப்பு ஏற்படக்கூடிய மூத்தகுடிமக்கள், இணை நோய்கள் உடையோர், குளிர்காய்ச்சல் போன்ற பாதிப்பு உடையோர்,  கர்ப்பிணிகள் மற்றும்  கடுமையான மூச்சுத்தினறல் பாதிப்பு உடையவர்களைக் கண்டறிந்து,  முன்னுரிமை அடிப்படையில்,  அவர்களைப் பாதுகாத்து சிகிச்சை அளிக்க ஏதுவாக,  கர்நாடக அரசு, நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ வீடுவீடாகவும் ஆய்வு நடத்துகிறது.  

இதுபோன்ற ஆய்வு மே 2020-இல் தொடங்கப்பட்டு,  மொத்தமுள்ள 168 லட்சம் வீடுகளில்,  இதுவரை 153 லட்சம் வீடுகளில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  சுகாதார ஆய்வுச் செயலி மற்றும் வலைதளச் செயலிகளைப் பயன்படுத்தி, தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   இதுபோன்று சேகரிக்கப்படும் தகவல்கள்,  ஏற்கனவே சுகாதாரத்துறையிடம் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், காசநோய், எச்.ஐ.வி., சிறுநீரக டயாலிசிஸ் மற்றும் புற்று நோயாளிகள் பட்டியல் மூலம் சரிபார்க்கப்படுகிறது.   நாஸ்காம் அமைப்பின் ஒத்துழைப்புடன், மாநில  அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆப்தமித்ரா எனப்படும் தொலைபேசி ஆலோசனை உதவி எண் (எண்.14410-க்கு அழைக்கலாம்)  மூலமும், பதிவு செய்யப்பட்ட குரல்கள் அல்லது நேரடியாகவும் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது.   ஒரு வீட்டில் யாருக்காவது  கோவிட்-19 அறிகுறி தென்படுவதாகத் தகவல் தெரிவித்தால், அந்த நபர், மருத்துவர்களால் தொலைமருத்துவ முறையில் பரிசோதிக்கப்பட்டு,  தொடர் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.   சுகாதாரக் களப்பணியாளர்  ( ASHAs) சம்பந்தப்பட்ட வீட்டிற்கு நேரடியாகச் சென்று தகவல்களை உறுதி செய்வதோடு,  தேவையான சுகாதார சேவைகளும் வழங்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக