புதன், 3 ஜூன், 2020

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு தொழில்கள் மீண்டும் தொடங்கிவிட்டதால் தொழில் செய்வோருக்கு வங்கிகள் கடன் உதவி செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்



"தமிழகத்தில் கரோனாவின் தாக்கத்தால் விவசாயிகளும், தொழில் புரிவோரும் அடைந்துள்ள பொருளாதாரப் பிரச்சினையை சமாளிக்க வங்கிகள் காலத்தே கடன் உதவி செய்ய வேண்டும். ஊரடங்கின் காரணமாக விவசாயத் தொழில், சிறு, குறு, நடுத்தரத் தொழில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி சிரமப்படுகிறார்கள். இருப்பினும், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு தொழில்கள் மீண்டும் தொடங்கிவிட்டதால் தொழில் செய்வோருக்கு வங்கிகள் கடன் உதவி செய்ய வேண்டும்.

குறிப்பாக, தமிழக முதல்வர் வங்கிகளின் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயத்திற்கும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் எளிமையான முறையில் விரைவில் கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல, துணை முதல்வரும் முடங்கியுள்ள தொழில்துறையை மீண்டும் எழச்செய்ய வங்கிகளின் பங்கு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கும் சலுகை வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதும் பேருதவியாக இருக்கும்.

குறிப்பாக, 2 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிவாரண சலுகைகள் வழங்கப்படும், மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் உள்ளிட்ட பல முடிவுகளை மத்திய அரசு எடுத்திருப்பது விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இப்போதைய அவசிய தேவையாக இருக்கிறது.

எனவே, தமிழக அரசு விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் உதவி செய்ய கேட்டுக்கொண்ட நேரத்தில் மத்திய அமைச்சரவையும் விவசாயத்தை ஊக்குவிக்கவும், பல்வேறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிவாரண சலுகை வழங்கவும் முடிவு எடுத்திருப்பது மிகவும் சரியானது.

அதாவது, மத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்துடைய ஒருங்கிணைந்த முயற்சியால் கரோனாவின் பாதிப்பில் இருந்தும், பொருளாதார பாதிப்பில் இருந்தும் பொதுமக்களை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் தொழில்கள் படிப்படியாக வளர்ந்து நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.

இந்நிலையில், விவசாயிகளும், சிறு, குறு, நடுத்தர தொழில் புரிவோரும் தொழில் செய்ய ஏதுவாக வங்கிகள் விரைவில் அவர்களுக்கு கடன் உதவி செய்ய முன்வர வெண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக