செவ்வாய், 2 ஜூன், 2020

திராவிடம் பேசி, சாதியை ஒழிக்க புறப்பட்டவர்கள்தான் சாதியை வளர்ப்பதில் முன்னனியில் நிற்கிறார்கள். - டாக்டர் K. கிருஷ்ணசாமி


நான்கு வருணங்களை உருவாக்கி சாதிய துவேசத்தை வளர்த்தவர்கள் பார்ப்பனர்கள். எனவே, சாதி ஒழிய பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கம் கண்டு ஆட்சிக்கு வந்தனர். சாதி வளர்ப்பின் அடையாளம் பார்ப்பனர்கள், சாதி ஒழிப்பின் அடையாளம் திராவிடர்கள்; பார்ப்பனியம் வருண, சாதி பேதங்களை உள்ளடக்கியவை, திராவிடம் என்பது வருண, சாதி பேதங்கள் அற்றவை; பார்ப்பனியம் ஏற்றத் தாழ்வுடையது,  திராவிடம் ஏற்றத் தாழ்வற்றது; பார்ப்பனியம் மூடநம்பிக்கைகள் உடையது, திராவிடம் மூடநம்பிக்கைகளை உடைப்பது; பார்ப்பனியம் அந்நியமானது, திராவிடம் சுதேசி; பார்ப்பனர்கள் வெளியில் இருந்து குடியேறியவர்கள் என்பது போன்ற கொள்கை முத்துகளை தமிழ் மண்ணிலே விதைத்து.

திராவிடம் என்றாலே இங்கு உயர்த்தப்பட்டோரும் இருக்கமாட்டார்கள், தாழ்த்தப்பட்டோரும் இருக்கமாட்டார்கள், உயர்வு, தாழ்வு தலை தூக்காது; ஏழை, பணக்காரர் இருக்கமாட்டார்கள்;   மூடநம்பிக்கைகளுக்கு இங்கு இடமே இல்லை, இங்கு எல்லாமே முற்போக்காகவும், பகுத்தறிவுக்கு ஏற்றதும்தான். எனவேதான் ஜாதியை ஒழித்துக் கட்ட பிராமணர்களை ஒழித்துக் கட்டுவோம். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிட்டு! பார்ப்பனனை அடி!! என்று திராவிட இயக்க தளகர்த்தர்களால் உசுப்பேத்தி, முறுக்கேற்றி பேசி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நம்ப வைத்து, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தார்கள்.

இப்படியெல்லாம் சாதி ஒழிப்பு முற்போக்கு பேசியவர்கள் தான் இப்பொழுது சாதியத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிக்கு வந்த பின்பும் முழங்கிய கொள்கை முழக்கங்கள் எங்கே? இவர்களின் கடந்தகால நிலைமை எப்படி இருந்தது என்பதையெல்லாம் மறந்துவிட்டு எஜமானர்களை போல பேசுகிறார்கள். இப்பொழுது எந்த பார்ப்பனரும் இவர்களை போல சாதிக்கு வக்காலத்து வாங்குவதில்லை.

திராவிடம் பேசி, சாதியை ஒழிக்க புறப்பட்டவர்கள்தான் சாதியை வளர்ப்பதில் முன்னனியில் நிற்கிறார்கள். என்ன குற்றசாட்டுகளையெல்லாம் பார்ப்பனியர்களிடத்தில் இருப்பதாக சொன்னீர்களோ? அவை அனைத்தையும் அதைவிட பன்மடங்கு இப்பொழுது உங்கள் உள்ளத்தில் காண்கிறோம்.

இவர்கள் எந்த மக்களைப் பார்த்து அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தால் வழங்கப்பட்ட சலுகைகளைக் கூட இவர்கள் போட்ட பிச்சை என்று சொல்கிறார்களோ? மூன்றாம் தர வகுப்பினர், நான்காம் தர வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் என்று தாழ்த்தி பேசிகிறார்களோ? அந்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வாழ்விடங்களும், ஆதிதிராவிட மக்களின் வாழ்விடங்களும்தான் திராவிட இயக்கத்தினுடைய தொட்டில்களாக விளங்கின என்பதை இவர்கள் மறந்து போய் விட்டார்களா? இவர்கள் மறந்தாலும், வரலாறுகள் மறந்திடுமா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக