செவ்வாய், 9 ஜூன், 2020

திமுக - அதிமுகவினரின் சாதி வெறுப்பு அரசியல்! பின்விளைவுகளை அறியாமல் செய்கிறார்களா? அறிந்து செய்கிறார்களா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி


திராவிட மனுவாதிகளே! மண்ணின் மைந்தர்களை
 மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
திமுக - அதிமுகவினரின் சாதி வெறுப்பு அரசியல்!
பின்விளைவுகளை அறியாமல் செய்கிறார்களா? அறிந்து செய்கிறார்களா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

இந்திய திருநாட்டின் பூர்வீகக் குடிமக்களை மனம் போன போக்கில் அழைக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. திராவிட முற்போக்கு பேசி முதலில் ஆட்சிக்கு வந்த திமுக, அதை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக ஆகிய இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பூர்வீக குடிமக்களை இழிவுபடுத்துவதிலும், குறைத்து பேசுவதிலும் முன்னணியில் நிற்கிறார்கள். இதுபோன்று இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சிகளும் தரம் தாழ்ந்து நடந்து கொள்வதில்லை. அதிகார போதை மற்றும் மிதமிஞ்சி சேர்ந்த செல்வம் இவர்களை இப்படி பேச வைக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்விரு கட்சிகளுடைய செயல்கள் சட்டவிரோதமானது, மனிதநேயமற்றது, தண்டனைக்குறியது ஆகும்.

பன்னெடுங்காலம் பலரது படையெடுப்புக்கு ஆளான இந்திய தாயின் தலைமக்கள் தங்களுடைய மண்ணை இழந்தார்கள். சொந்த மண்ணை இழந்து, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட அம்மக்கள் அதே நேரத்தில், அதே நிலத்தில் உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள். பாரத தேசம் மீது மாவீரன் அலெக்சாண்டர், செங்கிஸ்கான், ஆப்கானிஸ்தியர், துருக்கியர், முகமதியர் அதன்பின் ஆங்கிலேயர் என்று மாறி மாறி பலரது படையெடுப்புக்களுக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் ஆட்பட்டு சுதந்திரம் அடைந்த பிறகும் இம்மக்களிடத்திலிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மட்டும் இன்று வரையிலும் அவர்களுக்கு திருப்பித் தரப்படவே இல்லை. நிலம் இல்லை, வாழ்வாதாரம் இல்லை, கல்வி இல்லை என அனைத்து நிலைகளிலும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் ஏதும் அறியாது விழித்தார்கள். கல்வியிலும், சமூகத்திலும், அதிகார மட்டத்திலும் பின்னுக்கு தள்ளப்பட்ட மக்கள் அனைவருக்கும் அனைத்து துறைகளிலும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழும்பின.
1882 ஆம் ஆண்டு மஹாரஷ்ட்ராவின் ஒரு பகுதியில் ஆட்சி புரிந்த சாகுமகாராஜ் அவர்கள் தனது அமைச்சரவையில் அனைத்து வகுப்பினருக்கும் வாய்ப்பளிக்கும் ’வகுப்புவாரி’ உரிமையை முதன்முதலில் அமலாக்கினார். இதே கருத்தை வலியுறுத்தி மகாத்மா ஜோதிபா பூலேவும் போராடி வந்தார். 1920-ல் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் பங்குபெற்ற இந்திய பிரதிநிகள் ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவரவருக்கு உரிய பங்கீட்டை கேட்டுப் பெற்றார்கள்.  அதுதான் நாளடைவில் வகுப்புவாரி உரிமையாகவும், இடஒதுக்கீடாகவும் பரிணாமம் அடைந்தது. எனவே வகுப்புவாரி உரிமை அடிப்படையிலோ அல்லது இடஒதுக்கீட்டின் அடிப்படையிலோ வாய்ப்பு பெற்றவர்கள்  எந்த காலத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றோ, ஒடுக்கப்பட்டவர்கள் என்றோ முத்திரை குத்தப்பட்டவர்கள் அல்ல! என்பதுதான் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட சரத்து ஆகும். 

1950-ல் தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட போது தாழ்த்தப்பட்டோர் அல்லது ஒடுக்கப்பட்டோர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. Socially and Educationally Backward, அதாவது  சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னடைவுக்கு ஆளானவர்கள் என்றுதான் வரையறை செய்யப்பட்டதே தவிர வேறு எந்த அடைமொழியும் சேர்க்கப்படவில்லை. அதனுடைய பொருள் என்னவென்றால் இடஒதுக்கீடு பெறக்கூடியவர்கள் அனைவருமே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னடைந்தவர்கள் என்பதுதான். இப்பொழுது தமிழகத்தில் நிலவும் 69% இடஒதுக்கீட்டில் 90% பேர் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கிறார்கள், எஞ்சிய 10% பேருக்கும் Economically Weaker Section என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசு துறைகளில் தற்போது இட ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று அமையக்கூடிய  மத்திய, மாநில அரசுகள் ”மக்களின் நல அரசு”  (Welfare State) என்று சொல்லப்படுகிறது. மக்களுடைய அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், சாக்கடை, மின்விளக்குகள்  உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், சட்டபூர்வமான கடமைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உண்டு. அதுபோன்ற கடமைகளை நிறைவேற்றுகின்ற பொழுது அது ஊராட்சி அல்லது நகராட்சியாக இருந்தாலும்; மாநில அல்லது மத்திய அரசாக இருந்தாலும் சாதிய, மத பேதங்கள் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதே நியதி. ஆனால், இந்திய அரசியல் வரலாற்றில் அளவுக்கு அதிகமாக சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, வர்ணாசிரம ஒழிப்பு, சுய மரியாதை, சமூக நீதி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட சிசுக்கள். 1967-லிருந்து இன்று வரையிலும் 53 வருடங்களாக ஆட்சியில் இருக்கிறார்கள்.

திராவிடம் பேசாத அண்டை மாநிலமான ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ, கேரளாவிலோ இவர்களைப் போல யாரும் வன்மத்தோடு வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. மூன்று மாத்திற்கு முன்பு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆதிதிராவிடர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் அவர்கள் போட்ட பிச்சை என்று பகிரங்கமாகவே பேசினார்கள். தலைமை செயலாளரோடு ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து தயாநிதிமாறனும், டி.ஆர்.பாலுவும் நாங்கள் என்ன தாழ்த்தபட்டவர்களா? என்று கூறினார்கள். இப்பொழுது அவர்கள் மூவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அனைத்து சமுதாய மக்களும் வாழக்கூடிய, ஒப்பீட்டளவில் தேவேந்திரகுல மக்கள் சற்று கூடுதலாக உள்ள பாண்டவர்மங்கலம், திட்டங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஒரு கவுன்சிலருடைய நிதியிலிருந்து செய்து தரப்பட்ட சாக்கடை வசதியை குறிப்பிட்டு அதற்கு தூத்துக்குடி மாவட்ட அமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் விதமாக ”தாழ்த்தப்பட்டோரின் விடிவெள்ளி” என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள், செய்தித்தாளில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காகத்தான் மூன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்பது தெரிந்திருந்தும் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் இதுபோன்ற வாசகங்களை பயன்படுத்தி போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள், விளம்பரம் செய்திருக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் பற்றி அறியாமலா? அல்லது அறிந்து செய்திருக்கிறார்களா?

தேவேந்திரகுல வேளார்கள் தங்களை தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், அரிஜன், தலித் என்றெல்லாம் அழைக்கக் கூடாது என்றும், பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி தேவேந்திரகுல வேளாளர் என்றே அழைத்திட வேண்டுமென்றும், அம்மக்களும், புதிய தமிழகம் கட்சியும் போராடி வருவதையும், இக்கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்தியாவினுடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் தேவேந்திரகுல  வேளாளர்களுடைய பட்டியல் வெளியேற்ற கோரிக்கை பரிசீலனைலையில் உள்ளது என்று கூறியதையும், தமிழக அரசு புதிய தமிழகம் கட்சியுடைய கோரிக்கையை ஏற்று, மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் குழு அமைத்து கோரிக்கையை நிறைவேற்ற அடுத்தகட்ட நடவடிக்கையில் உள்ளதையும், சென்னை பல்கலைகழகத்தின் மானுடவியல் துறை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கவும், பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை பரிசீலனை செய்யலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளதையும் இந்திய மக்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். எனினும் திமுகவினரும், அதிமுகவினரும் தொடர்ந்து நேர்மாறாக அழைப்பதில் மிகப்பெரிய அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. 

இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் அவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அவர்களை அழைத்திட மங்கலகரமான பெயர்கள் உண்டு. இந்தியாவினுடைய பிற எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சிகளும் சொல்ல எண்ணிக்கூட பார்க்காத நிலையில், திராவிட கட்சிகளுக்கு மட்டும் இது போன்ற துணிச்சலும், வக்கிர புத்தியும் எப்படி வருகிறது? திமுக, அதிமுகவில் தாழத்தப்பட்டோர் விடிவெள்ளி, பிற்படுத்தப்பட்டோர் விடிவெள்ளி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடிவெள்ளி, உயர்ந்தோர் விடிவெள்ளி  என ரகம் பிரித்து வைத்திருக்கிறார்களா? அரசின் நிதியில் செய்யக்கூடிய திட்டங்களுக்கெல்லாம் இவர்களுக்கு எதற்கு விடிவெள்ளிப் பட்டங்கள்? பாலம் கட்டினால் அதற்கு ஒரு விடிவெள்ளி, சாலை போட்டால் அதற்கு ஒரு விடிவெள்ளி, சாக்கடை வசதி செய்தால் அதற்கு ஒரு விடிவெள்ளி என்றால், டாஸ்மாக் திறந்தால் அதற்கும் விடிவெள்ளி என்று போட்டுக் கொள்வீர்களா? எனவே தொடர்ந்து இரண்டு திராவிட கட்சிகளும் பூர்விகக் குடிமக்களை தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டொர், தலித், அரிஜன் என்று இழிவுபடுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்க விரும்புகிறோம். 

அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மட்டும் நினைவு கூற விரும்புகிறேன். ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர், வெள்ளையின போலீஸ் அதிகாரியால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைக்கு ஆளானார். இப்போது அமெரிக்க நாடெங்கும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதுகுறித்து ஒரு கருப்பினப் பெண்ணுக்கும், வெள்ளையின பெண்ணுக்கும் நடந்த விவாதத்தில் மூன்று மிக முக்கியமான வார்த்தைகளை கருப்பின பெண் பயன்படுத்தியிருந்தார்.  “I am A BLACK”, I am not “OPPRESSED OR SUPPRESSED, I am FREE” - நான் கருப்பினத்தைச் சேர்ந்தவள், என்னை அடக்கப்பட்டவள் என்றோ அல்லது   ஒடுக்கப்பட்டவள் என்றோ? அழைக்காதீர்கள். நாங்கள் அடக்கப்பட்டவரோ அல்லது ஒடுக்கப்பட்டவரோ அல்ல! நாங்கள் சுதந்திரமானவர்கள். அவர்களுடைய உணர்வுகள் என்னவோ அதேதான் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உணர்வுகள் என்பதை சாதிய மனோபாவம் கொண்ட திராவிட கட்சிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இம்மண்ணின் பூர்வக்குடி மக்களான ”தேவேந்திரகுல வேளாளர்கள்” எங்களை ”தேவேந்திரகுல வேளாளர்கள்” என்று தான் அழைத்திட வேண்டும். இம்மக்கள் தாழ்த்தப்பட்டவர்களும் அல்ல! ஒடுக்கப்பட்டவர்களும் அல்ல!! அடக்கப்பட்டவர்களும் அல்ல!!! சுதந்திர இந்திய தேசத்தில் சுதந்திரமாக வாழக்கூடிய இந்திய மக்கள்.

திராவிட மனுவாதிகளே! மண்ணின் மைந்தர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இது தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு மட்டுமானது அல்ல! தமிழகத்தின் பெரும்பாலான சமுதாய மக்களுக்கும் பொருந்தும். எல்லா சாதிகளுக்கும் பெருமைக்குரிய அடையாளங்கள் உண்டு. அவர்களுடைய பூர்வீகப் பெயர்களை தேடி எடுத்து அடையாளப்படுத்துங்கள்.
சில நாட்களுக்கு முன்பு, உடையார்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இரண்டு தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் படுகொலைக்கு ஆளானார்கள். ”டைம்ஸ் ஆப் இந்தியா” என்ற நாளிதழ் வேண்டுமென்றே அவர்களை தலித் என குறிப்பிட்டு இருந்தார்கள். உடனடியாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அந்த பத்திரிகையின் ஆசிரியருக்கு நமது கண்டனத்தை தெரிவித்து, அதற்கு மறுப்பும் வெளியிட வலியுறுத்தியிருந்தோம்.
எனவே ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ, தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், தலித், அரிஜன் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டாலோ, மண்ணின் மக்களை தாழ்த்தி திராவிடக் கட்சிகள் பேசினாலும், வேறு எவரும் எப்படி பயன்படுத்தினாலும் புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்தில் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், தேவைபட்டால் நீதிமன்றங்களையும் நாடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

திராவிட கட்சிகள் இதுபோன்ற சாதிய வன்ம பேச்சுகளுக்கு இனியும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், எமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும். தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் இதுபோன்ற ஆட்சேபகரமான விளம்பரம் செய்த தினகரன் நாளிதழ் மீதும், அதிமுகவினர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது கோவில்பட்டிக்கு மட்டுமல்ல, தமிழகத்தின்  பூர்வீக குடிமக்கள் – மண்ணின் மைந்தர்கள் மீது எந்த மூலையில் இருந்து மதிப்பு குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டாலும், அவர்களுக்கு எதிராக உடனடியாக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமாறு புதிய தமிழகம் கட்சியினர் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தேவேந்திரகுல வேளாளர்கள் தலித்துக்களும் அல்ல! 
தாழ்த்தப்பட்டோரும் அல்ல!!
ஒடுக்கப்பட்டோரும் அல்ல! 
அடக்கப்பட்டோரும் அல்ல!
மண்ணின் மைந்தர்கள், ஆம், மண்ணை ஆண்ட மன்னர்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக