செவ்வாய், 29 ஜூன், 2021

ஜார்கண்ட் மாநிலத்தின் 29,752 கிராமங்களில் மொத்தமுள்ள 58.95 லட்சம் வீடுகளில் வெறும் 7.72 லட்சம் (13%) வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


 ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதாரமான தண்ணீர் குழாய் இணைப்பை வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு ரூ. 2479.88 கோடியை ஜார்கண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரூ.572.24 கோடியாக இருந்தது. இந்த நான்கு மடங்கு உயர்த்தப்பட்ட தொகையை ஒதுக்கீடு செய்கையில், 2024-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு ஊரக வீட்டிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது நாடு முழுவதும் மொத்தமுள்ள 19.20 கோடி ஊரக வீடுகளில் வெறும் 3.23 கோடி (17%) வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்பு இருந்தது. கடந்த 22 மாதங்களில் கொவிட்-19 பெருந்தொற்றையும் பொருட்படுத்தாது ஜல் ஜீவன் இயக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதனால் 4.39 கோடி வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நம் நாட்டில் இதுவரை 7.62 கோடி (சுமார் 40%) ஊரக வீடுகளுக்கு இந்த வசதி செய்துத் தரப்பட்டுள்ளது. புதுச்சேரி, கோவா, தெலங்கானா, அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்தத் திட்டம் ஏற்கனவே 100% நிறைவடைந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் 29,752 கிராமங்களில் மொத்தமுள்ள 58.95 லட்சம் வீடுகளில் வெறும் 7.72 லட்சம் (13%) வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது அந்த மாநிலத்தில் 3.45 லட்சம் (5.85%) வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்பு இருந்தது. கடந்த 22 மாதங்களில் 4.27 லட்சம் (7.24%) வீடுகளுக்கு இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. எனினும் தேசிய சராசரி அளவான 23%துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. கடந்த 2020-21ஆம் ஆண்டில் வெறும் 2.99 லட்சம் இணைப்புகள்  வழங்கப்பட்டது. இந்த வேகம் நீடித்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் எஞ்சியுள்ள 51.23 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்புகளை வழங்குவது மிகவும் சவாலாக இருக்கும்.

இந்தத் திட்டத்தை மிக மெதுவாகவே செயல்படுத்தியதால் 2020-21ஆம் ஆண்டிற்கான மானியத்தை ஜார்கண்ட்  மாநிலத்தால் பயன்படுத்த முடியவில்லை. இதே ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மொத்தத் தொகையான ரூ. 572.24 கோடியில் ரூ. 143.06 கோடியை மட்டுமே இந்த மாநிலம் பயன்படுத்தி ரூ.429.18 கோடியைத் திருப்பித் தந்தது. இதன் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் தண்ணீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக இந்த மாநிலத்தின் வசம் மொத்தம் ரூ. 5235.62 கோடி உறுதி தொகை உள்ளது. எனினும் மத்திய ஒதுக்கீட்டின் முதல் தவணையை விடுவிப்பதற்கான முன்மொழிவை மாநில அரசு இன்னும் அனுப்பவில்லை.

2024-ஆம் ஆண்டிற்குள் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக அனைத்து கிராமங்களிலும் இதற்கான பணியை முடுக்கிவிடுமாறு  அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், ஜார்கண்ட் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். முழு தொகையையும் பயன்படுத்தி இந்தத் திட்டத்தின் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், இத்தகைய மிக உயரிய முதலீடு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், ஊரகப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக