ஞாயிறு, 27 ஜூன், 2021

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடையீட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 அகமதாபாத்தில் அகமதாபாத் மேலாண்மை சங்கத்தில் (ஏஎம்ஏ), ஒரு ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியின் அர்ப்பணிப்பை இந்திய- ஜப்பான் உறவின் எளிமை மற்றும் நவீனத்துவத்தின் சின்னம் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை நிறுவுவதற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஹ்யோகோ மாவட்டத்தின் தலைவர்கள், குறிப்பாக ஆளுநர் டோஷிசோல்டோ மற்றும் ஹ்யோகோ சர்வதேச சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். இந்திய-ஜப்பான் உறவிற்கு புதிய ஆற்றலை வழங்கியதற்காக குஜராத்தைச் சேர்ந்த இந்திய-ஜப்பான் நட்புணர்வு சங்கத்தையும் அவர் பாராட்டினார்.

ஜென் மற்றும் இந்தியாவின் தியானத்திற்கு இடையேயான ஒற்றுமையை சுட்டிக்காட்டிய பிரதமர், இரு கலாச்சாரங்களில் காணப்படும் வெளிப்புற வளர்ச்சியுடன் கூடிய உள்ளார்ந்த அமைதி பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பல காலங்களாக யோகாவினால் இந்தியர்கள் அனுபவித்து வரும் அதே அமைதி, நிதானம் மற்றும் எளிமையை இந்த ஜென் தோட்டத்திலும் இந்தியர்கள் உணர்வார்கள். இந்த தியானத்தை, இந்த அறிவொளியை புத்தர் உலகிற்கு வழங்கியதாக பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சி மட்டுமல்லாமல் தொடர் வளர்ச்சியை வலியுறுத்தும் கைசனின் வெளிப்புற மற்றும் உள்ளார்ந்த அர்த்தங்களையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

முதலமைச்சராக, குஜராத் நிர்வாகத்தில் கைசனை தாம் அமல்படுத்தியதை பிரதமர் நினைவுக்கூர்ந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நிர்வாக பயிற்சியில் அது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 2005-ஆம் ஆண்டில் சிறந்த ஆட்சிப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது. ‘தொடர் வளர்ச்சி', செயல்முறைகளின் சீரமைப்பில் பிரதிபலிக்கப்பட்டதுடன், ஆளுகையில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தியது. ஆளுகையின் முக்கியத்துவத்தை தேசிய மேம்பாட்டில் தொடரும் வகையில், தாம் பிரதமரான பிறகு குஜராத்தில் கைசன் தொடர்பான அனுபவத்தை பிரதமர் அலுவலகம் மற்றும் இதர மத்திய அரசு துறைகளில் அமல்படுத்தியதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதன்மூலம் செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதுடன், அலுவலக இடம் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஏராளமான துறைகள், நிறுவனங்கள் மற்றும் திட்டங்களில் கைசன் பயன்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.

ஜப்பானுடனான தமது தனிப்பட்ட தொடர்பு, ஜப்பானிய மக்களின் அன்பிற்கு தமது பாராட்டு, அவர்களது பணி கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். “குஜராத்தில் மினி-ஜப்பானை உருவாக்க நான் விரும்பினேன்”, என்ற தமது உறுதித்தன்மை, ஜப்பானிய மக்களைக் காண்பதற்கான உணர்ச்சியார்வத்தை உள்ளடக்கியது என்றார் அவர்.

பல ஆண்டுகளாக ‘துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டில்' ஜப்பானின் ஆர்வமான பங்கேற்பு பற்றி பிரதமர் பேசினார். வாகனங்கள், வங்கிகள் முதல் கட்டுமானம், மருந்தகங்கள் வரை சுமார் 135 நிறுவனங்கள் குஜராத்தை தமது தலைமையிடமாகக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சுசுகி மோட்டார்ஸ், ஹோண்டா மோட்டார் சைக்கிள், மிட்சுபிஷி, டொயோட்டா, ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்கள் குஜராத்தில் உற்பத்திப் பணிகளில் ஈடுபடுகின்றன. உள்ளூர் இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் இந்த நிறுவனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. குஜராத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் பணியில் 3 ஜப்பான்-இந்திய உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோவின் அகமதாபாத் வர்த்தக உதவி மையம், ஒரே சமயத்தில் 5 நிறுவனங்கள் கணினி சம்பந்தமான பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகளை அளித்து வருகிறது. இதன் மூலம் ஏராளமான ஜப்பானிய நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன. சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தும் வகையில் குஜராத்தில் கோல்ஃப் வசதிகளை மேம்படுத்த தாம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், முறைசாரா விவாதத்தின்போது ஜப்பானிய மக்கள் கோல்ஃப் போட்டிகளை விரும்புவது தமக்குத் தெரியவந்ததாகவும் பிரதமர் நினைவுக்கூர்ந்தார். அந்த சமயத்தில் குஜராத்தில் கோல்ஃப் வகுப்புகள் மிகவும் பிரபலமடையவில்லை. தற்போது குஜராத்தில் ஏராளமான கோல்ஃப் வகுப்புகள் செயல்படுகின்றன. அதேபோல குஜராத்தில் ஜப்பானிய உணவகங்களும், ஜப்பானிய மொழியும் பிரபலமடைந்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டின் பள்ளிக்கல்வி முறையை அடிப்படையாக கொண்ட மாதிரிப் பள்ளிகளை குஜராத்தில் உருவாக்கும் தமது விருப்பத்தையும் பிரதமர் வெளிப்படுத்தினார். நவீனத்துவம் மற்றும் நீதி மாண்புகளின் கலவையாக உள்ள ஜப்பான் பள்ளிக்கல்வி முறையை பிரதமர் பாராட்டினார். டோக்கியோவில் உள்ள டாய்மெய் ஆரம்ப பள்ளியை தாம் நேரில் சென்று பார்த்த அனுபவத்தை பிரதமர் நினைவுக்கூர்ந்தார்.

ஜப்பானுடனான பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாச்சார உறவுகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பொதுவான தொலைநோக்குப் பார்வையில் நாம் நம்பிக்கைக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஜப்பான் நாட்டுடனான சிறப்பு கேந்திர மற்றும் சர்வதேச கூட்டணியை வலுப்படுத்துவது பற்றி அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஜப்பான் பிளஸ் முறை பற்றியும் அவர் பேசினார்.

ஜப்பான் தலைமையுடனான தமது தனிப்பட்ட சமன்பாடு பற்றிப் பேசிய பிரதமர், முன்னாள் ஜப்பான் பிரதமர் திரு ஷின்சோ அபேவின் குஜராத் பயணம் குறித்துக் குறிப்பிட்டார். இந்திய ஜப்பான் நாடுகளின் உறவிற்கு இந்தப் பயணம் புதிய உத்வேகத்தை அளித்தது. பெருந்தொற்றின்போது சர்வதேச நிலைத்தன்மை மற்றும் செழுமைக்காக இந்திய- ஜப்பான் நாடுகளின் நட்புணர்வு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தற்போதைய ஜப்பான் பிரதமர் திரு யோஷிஹிடே சுகாவுடனான பரஸ்பர நம்பிக்கை பற்றி அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். நமது நட்பு மற்றும் கூட்டணி மேலும் வலுப்பெறுவது தற்போதைய சவால்களின் தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் கைசன் மற்றும் ஜப்பானிய பணி கலாச்சாரத்தின் பரவல் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடையீட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் திரு மோடி வலியுறுத்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஜப்பானிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் திரு மோடி தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக