செவ்வாய், 29 ஜூன், 2021

NATRAX- the High Speed Track(HST) நாட்ராக்ஸ் என்ற ஆசியாவின் மிக நீளமான அதிவேக வழித்தடத்தை மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்


 கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், நாட்ராக்ஸ் என்ற ஆசியாவின் மிக நீளமான அதிவேக வழித்தடத்தை இன்று திறந்து வைத்தார். 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட நாட்ராக்ஸ், இருசக்கர வாகனங்கள் முதல் கனரக டிராக்டர் டிரெய்லர்கள் வரையிலான பல்வேறு வகை வாகனங்களின் அதிவேக செயல்திறனை சோதிப்பதற்கான ஒரே தளமாக விளங்கும்.

உலகத் தரத்திலான 11.3 கிலோ மீட்டர் அதிவேக வழித்தடத்தை மின்னணு வாயிலாகத் தொடங்கிவைத்துப் பேசிய திரு ஜவடேகர், வாகன உற்பத்தி மற்றும் உதிரி பாகங்களின் முனையமாக இந்தியா உருவாகவிருக்கிறது என்று கூறினார். ‘தற்சார்பு இந்தியாவை' நோக்கி நாம் விரைவாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும், அதற்காக அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், அமைச்சர் குறிப்பிட்டார். வாகன உற்பத்தி முனையமாக இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் கனவை நனவாக்குவதில் தமது அமைச்சகம் உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். வாகனங்கள் மற்றும் உற்பத்தி தொழில்துறையை விரிவாக்கம் செய்வதன்மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார் அவர்.

பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்வழித் திட்டங்கள், வலுவான அரசியல் உறுதித் தன்மையால் தற்போது நிறைவடைந்து வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் காரணத்தால் உற்பத்தி மற்றும் வாகன தொழில்துறைக்கு அரசு ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதிகபட்ச வேக அளவீடுகள், நிலையான எரிவாயு பயன்பாட்டு வேகம், மாசு வெளியீட்டு சோதனைகள் போன்ற பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளும் வசதிகள் நாட்ராக்ஸ் மையத்தில் இடம்பெற்றிருப்பதுடன், வாகன இயக்கவியலுக்கான தலைசிறந்த மையமாகவும், இது செயல்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக