திங்கள், 28 ஜூன், 2021

முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்ம ராவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அவருக்கு புகழாரம்


 முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்ம ராவின் நூற்றாண்டு பிறந்த தினமான இன்று, குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியிருப்பதுடன், பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்த தலைசிறந்த ஆளுமை என்று அவரை வர்ணித்தார்.

சிறந்த அறிஞர், விவேகமான நிர்வாகி, புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர் மற்றும் மொழியியலாளர் போன்ற பன்முகத் திறமை வாய்ந்தவர், முன்னாள் பிரதமர் என்று குறிப்பிட்ட அவர், தமது ஒருமித்த தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் மூலம் ஒரு பொருளாதார நெருக்கடியின் போது திரு ராவ் நாட்டை வழி நடத்தியதாகத் தெரிவித்தார். முன்னதாக, விசாகப்பட்டினத்தின் சர்க்யூட் ஹவுஸ் சந்திப்பில் அமைந்துள்ள திரு நரசிம்ம ராவின் உருவச்சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

திரு ராவ் மேற்கொண்ட துணிச்சலான சீர்திருத்தங்கள், கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதில் உதவிகரமாக இருந்து வருவதாக அவர் கூறினார். திரு  நரசிம்ம ராவ் துவக்கிய சீர்திருத்தங்களை முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தினார். தற்போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த சீர்திருத்தங்களை துரிதப்படுத்தியுள்ளார். “சீர்திருத்தங்கள் காலத்தின் கட்டாயம். எனவே மிகச்சிறந்த செயல் முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்”, என்றும் அவர் தெரிவித்தார்.

திரு ராவின் முயற்சியால் நாட்டில் லைசன்ஸ் ராஜாங்க முறை முடிவுக்கு வந்ததாகக் கூறிய குடியரசு துணைத் தலைவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி என்று அவரைக் குறிப்பிட்டார். “முக்கியமாக, உலக வர்த்தக அமைப்பில் இந்தியா நுழைவதற்கு திரு ராவ் ஒரு காரணியாக இருந்தார்”, என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய கட்டமைப்பிற்கு மாபெரும் பங்களிப்பை அளித்த பெருந்தலைவர்கள், அந்நாட்டின் கலாச்சாரம், மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மறந்த எந்த நாடாலும் முன்னேற முடியாது என்று திரு நாயுடு தெரிவித்தார். சிறந்த தலைவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகள், இளம் தலைமுறையினருக்குக் கற்றுத் தரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக