ஞாயிறு, 27 ஜூன், 2021

அதிர்வுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய நேனோ மின்னியற்றிகள் உருவாக்கம்


 எளிதான, குறைந்த செலவில், உயிரி- இணக்கமுடைய, ஒளி ஊடுருவும் நேனோ மின்னியற்றியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். ஒளி மின்னணுவியல், சுயமாக இயங்கும் உபகரணங்கள் மற்றும் இதர உயிரி மருத்துவ செயல்முறைகளில் பயன்படுத்தும் வகையில் சுற்றியுள்ள அதிர்வுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த நேனோ மின்னியற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதல், எரிசக்தி பற்றாக்குறை முதலிய அச்சுறுத்தல்களால், கரியமில வெளியீடுகள் குறைவாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் தேவை அதிகரித்துள்ளது. தொடு திரைகள், மின்னணு காட்சி முறைகள் முதலிய கருவிகளில் மரபுசாரா முறையில் மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென்மையான பொருள் அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் சங்கர் ராவ் மற்றும் அவரது குழுவினர், டாக்டர்ஸ் பிளேட் என்ற தொழில்நுட்பத்தில் தெர்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன், பாலிஎதிலீன் டெரிஃப்தலேட்டைப் பயன்படுத்தி இந்த டிரைபோ மின்னணு நேனோ மின்னியற்றியை வடிவமைத்துள்ளனர்.

மென்மையாக கைகளைத் தட்டுவதன் மூலம் 11 எல்இடி விளக்குகளுக்கு இந்த உபகாரணத்தால் ஒளியூட்ட முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக