வெள்ளி, 25 ஜூன், 2021

தி.மு.க. அரசின் இந்த முறையான செயல்பாடுகளுக்கு சமூகநீதியில் அக்கறையுள்ள அத்தனைத் தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்டுவதே - சமூகநீதிக்கு ஆற்றும் அருந்தொண்டாக இருக்க முடியும்.- கி.வீரமணி


தி.மு.க. இடம்பெற்ற காங்கிரஸ் ஆட்சியின் (யுபிஏ)போதுதான் ‘நீட்’ வந்தது என்று கிளிப்பிள்ளைப் பாடம் படிக்கவேண்டாம்!

அப்பொழுதே தி.மு.க. எதிர்த்து வழக்குத் தொடுத்தது - ‘நீட்’ செல்லாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பெறப்பட்டது!

தி.மு.க. மேற்கொள்ளும் சட்ட ரீதியான முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்டுவதே முக்கியம்! - கி.வீரமணி

‘நீட்’ தொடர்பான விவாதங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (23.6.2021) நடந்துள்ளன. தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘நீட்’டை நீக்குவதுபற்றி கூறப்பட்டுள்ளதுபற்றி (தேர்தல் அறிக்கை வரிசை எண். 160) எல்லாம் பேசப்பட்டுள்ளது.

அன்றுமுதல் தி.மு.க. எதிர்ப்பு

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (21.12.2010) ‘நீட்’ கொண்டுவரப்பட்ட காலத்திலேயே - அதில் அங்கம் வகித்த தி.மு.க. கடுமையாக எதிர்த்து வந்துள்ளது என்பது முக்கியமான உண்மையாகும்.

நீட்டை எதிர்த்து ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியதோடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தன் கடமை முடிந்தது என்று கைகழுவிடவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது தி.மு.க. ஆட்சி; சென்னை உயர்நீதிமன்றம் ‘நீட்’டுக்குத் தடையும் விதித்தது.

‘நீட்’டை எதிர்த்துப் பல தரப்பிலும் போடப்பட்ட வழக்குகளை ஒன்றிணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.

தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் அல்தாமஸ் கபீர் தலைமையில், ஜஸ்டீஸ் விக்கிரமத் சென், ஜஸ்டீஸ் ஏ.ஆர்.தவே அடங்கிய அமர்வு இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 25, 26, 29, 30 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் ‘நீட்’டை நடத்தும் உரிமை மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று தீர்ப்பு வழங்கியது (18.7.2013).

அத்தோடு ‘நீட்’டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் ‘நீட்’டைக் கொண்டு வந்தது என்றாலும், அந்த ஆட்சிக் காலத்திலேயே ‘நீட்’டுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. (நீதிபதி ஏ.ஆர்.தவே மட்டுமே மாறுபட்ட சிறுபான்மை தீர்ப்பு வழங்கினார்).

நீட்டுக்கு உயிர் ஊட்டியது என்.டி.ஏ. (பா.ஜ.க.) அரசே!

அதற்குப் புத்துயிர் அளித்து, மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அ.இ.அ.தி.மு.க. ஆதரவு பெற்ற - பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் என்பதை மறந்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பேசி வருவது உண்மைக்கு மாறானதாகும்.

என்.டி.ஏ. (பா.ஜ.க.) அரசின் மறுசீராய்வு மனுவின் மீதான தீர்ப்பில் தான் (16.3.2016) (ஏற்கெனவே ‘நீட்’ செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய ஏ.ஆர்.தவேதான் இந்த அமர்வின் தலைவர்) ‘நீட்’ செல்லும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை மறைத்துப் பயனில்லை - அதுதான் உண்மையாகும்.

அனைத்துக் கட்சி ஆதரவோடு, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 2017 இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குக் கோரும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய  அரசுக்கு அனுப்பப்பட்டதே - அதன்மீது அ.இ.அ.தி.மு.க. அரசு போதுமான அழுத்தம் கொடுத்து சாதகமான முடிவினை எட்ட முடியாததற்குப் பொறுப்பு அ.இ.அ.தி.மு.க. ஆட்சிதானே!

அ.தி.மு.க. அரசின் இருட்டடிப்பு

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட தகவலைக்கூட அ.இ.அ.தி.மு.க. அரசு சொல்லாதது - மறைத்தது எவ்வளவு பெரிய மன்னிக்கப்படவே முடியாத துரோகம்?

உச்சநீதிமன்றத்தில் ‘நீட்’ தொடர்பான வழக்கின்போதுதான் ஒன்றிய அரசின் வழக்குரைஞர்கள் தெரிவித்த தகவலின்போதுதான்  (6.7.2019) அனுமதி மறுக்கப்பட்ட தகவல் வெளிச்சத்திற்கு வந்தது  - இது ஒரு கறைபடிந்த நிகழ்வு என்பதில் அய்யமில்லை.

தி.மு.க.வைப் பொறுத்தவரை ‘நீட்’டை எதிர்ப்பதில் ‘நீட்’ கொண்டுவரப்பட்ட அந்தக் காலகட்டத்திலிருந்தே (2010) உறுதியாக, திட்டவட்டமாக, தெளிவாக இருந்துவருகிறது.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி தி.மு.க. ‘நீட்’டை நீக்குவதற்கான சட்ட ரீதியான செயலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழு உடனடியாக நியமிக்கப்பட்டு, அந்தக் குழுவும் வேகமாக அந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

பிரதமரை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தபோதுகூட ‘நீட்’டைப்பற்றிய தி.மு.க. அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்திக் கூறியுள்ளார், விதிவிலக்கும் கோரியுள்ளார்.

அரசியல் செய்யவேண்டாம் - ஆதரவு தாரீர்!

ஒடுக்கப்பட்ட மக்களின் உயிருக்கும் மேலான சமூகநீதியில் - இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சமூகநீதிப் பிரச்சினையில், ஒன்றிய அரசு - ‘நீட்’டில் மறுபரிசீலனை செய்து நல்லதோர் முடிவு எடுக்கவில்லை என்றால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி சட்ட ரீதியான செயல்பாட்டில் தி.மு.க. இறங்கும் - சமூகநீதியில் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்.

தி.மு.க. அரசின் இந்த முறையான செயல்பாடுகளுக்கு சமூகநீதியில் அக்கறையுள்ள அத்தனைத் தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்டுவதே - சமூகநீதிக்கு ஆற்றும் அருந்தொண்டாக இருக்க முடியும். இதில் அரசியல் செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக