வியாழன், 1 ஜூலை, 2021

வீரதீர செயல்களுக்கான விருதுகள் வென்றவர்களை மையமாகக் கொண்ட மெய்நிகர் அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.


 75-வது சுதந்திர ஆண்டை நாடு கொண்டாடவிருக்கும் தருணத்தில், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீரர்களை கௌரவிக்கும் வகையில் வீரதீர செயல்களுக்கான விருதுகள் வென்றவர்களை மையமாகக் கொண்ட மெய்நிகர் அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

எந்தவிதமான நிதி தாக்கமும் இல்லாமல் இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் திட்டத்தை அமல்படுத்தும். இதற்கான அனுமதி கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய்குமார், இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜெயந்த் டி பாட்டிலிடம் இன்று (ஜூன் 30, 2021) புதுதில்லியில் வழங்கினார். இந்தத் திட்டம் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரதீர செயல்களுக்கான விருதுகள் தளத்தில்  (https://www.gallantryawards.gov.in/)  இந்த மெய்நிகர் அருங்காட்சியகம் இடம்பெறும். அரங்கக் கட்டிடம், துணிச்சல் மிக்க வீரர்கள் பற்றிய குறிப்புகள், அவர்களது புகைப்படங்களுடன் கூடிய விருதுகள் அடங்கிய வளாகம், போர் நினைவு சின்னங்களின் உலா, வீரதீர சாகச கதைகள் இடம்பெற்றுள்ள ‘தி வார் ரூம்’ என்ற அரங்கம் முதலியவை முப்பரிமாண வடிவில் இடம்பெறும்.

போர் வீரர்களின் கதைகளைக் கண்முன்னே கொண்டுவரும் தத்ரூபமான உயிரூட்டப்பட்ட காணொளிகளும் இதில் இடம் பெறும். வீரர்களுக்கு பொதுமக்கள் தங்களது மரியாதையை செலுத்தும் விதமான செய்திகளை வெளியிடும் வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதுபற்றிப் பேசிய பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய்குமார், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் மிக உயரிய பணியில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய வீரதீர செயல்களுக்கான விருதுபெற்ற வீரர்களின் அர்ப்பணிப்பை எடுத்துரைக்கும் முயற்சியாக இந்தத் திட்டம் அமையும் என்று கூறினார். நாட்டிற்கு அவர்கள் வழங்கிய சேவையைப் போற்றும் வகையிலும், பொதுமக்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்துடனும் இந்த மெய்நிகர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக