வியாழன், 1 ஜூலை, 2021

ஜெய்ஹிந்த் என்ற உணர்வு முழக்கம் ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது.- E.R.ஈஸ்வரன் MLA


 தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆட்சிகளில் நிகழ்த்திய ஆளுநர் உரையில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டி முந்தைய அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய கட்டுப்பாட்டில் இருந்ததையும், இப்போதைய அரசு யாருக்கும் கட்டுப்படாத தலைநிமிர்ந்த அரசாகவும் செயல்படுவதை குறிப்பிட்டிருந்தேன். ஒன்றிய அரசோடு உறவுக்கு கை கொடுப்பது வேறு. தன்னை காப்பாற்றிக் கொள்ள தலைகுனிவது வேறு. ஆட்சியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள தலைகுனிந்து இருந்த தமிழக அரசு மே 2-ஆம் தேதிக்கு பிறகு தலைநிமிர்ந்து இருக்கிறது என்று பலராலும் சொல்லப்பட்ட உண்மைதான் நான் குறிப்பிட்டேன். 

ஜெய்ஹிந்த் என்ற உணர்வுபூர்வமான முழக்கத்திற்கு நான் எதிரியும் அல்ல. இந்தி மொழிக்கும் நான் எதிரியல்ல. இருமொழி கொள்கையை கடைப்பிடிக்கின்ற தமிழக அரசின் ஆளுநர் உரையில் இந்தி மொழி திணிக்கப்பட்டிருப்பதை தான் நான் குறிப்பிட்டேன். இரண்டு ஆளுநர் உரைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை "அவையில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டேன். உரையினுடைய தொடக்கத்திலேயே தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.உ.சி போன்ற தமிழ் மண்ணின் சுதந்திர போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை வணங்கிய எனக்கு தேசப்பற்றை பற்றி யாரும் பாடம் எடுக்க வேண்டிய தேவை இருக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

25 ஆண்டுகால பொதுவாழ்வில் தேசத்தினுடைய ஒற்றுமையை என்னுடைய உரைகளில் தூக்கி நிறுத்தி இருப்பதை, முக்கியத்துவம் கொடுத்திருப்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். அன்றைய தினம் சபையில் இருந்த 234 உறுப்பினர்களும் என்னுடைய உரையை பாராட்ட தான் செய்தார்கள். அடுத்த நாளும் நான் சட்டமன்றத்திற்கு சென்ற போது பாராட்ட தான் செய்தார்கள். எள்ளளவும் யாருக்கும் இப்போது உள்நோக்கத்தோடு அரசியலுக்காக பேசுகின்ற ஒரு சிலரை போல எந்த சந்தேகமும் எழவில்லை. ஜெய்ஹிந்த் என்ற உணர்வு முழக்கம் ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது. பலமுறை என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பின்னாலும் சில அனுபவம் மிக்க தலைவர்கள் கூட தங்கள் சுய விளம்பரத்திற்காக மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. புரியாதவர்கள், புரிந்தும் புரியாதது போல் நடிப்பவர்களுக்காக தான் நான் இந்த விளக்கத்தை கொடுக்கின்றேன். எங்கள் இயக்கத்தின் பெயரிலேயே தேசியம் வர வேண்டுமென்று உருவாக்கியவர்கள் நாங்கள். 

வெல்க பாரதநாடு, வளர்க தமிழ்நாடு, மலர்க கொங்குநாடு.

உங்கள் புரிதலுக்கு நன்றி,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக