சனி, 3 ஜூலை, 2021

பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும் உரிமையை மாநிலங்களிடமிருந்து பறிப்பதைத் தடுக்க சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தீர்வைக் காண வேண்டும். - கி.வீரமணி


பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காணும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாதா?

மக்களை நேரடியாக அடையாளம் காணும் வாய்ப்பு மாநில அரசுக்கே அதிகம்!

மாநில அரசுகள் சட்ட ரீதியாக இதற்குத் தீர்வு காணவேண்டும்!

ஒன்றிய அரசு உரிய வகையில் சட்டத் திருத்தம் செய்யட்டும்! - கி.வீரமணி

‘அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்‘ (நிரந்தரம்) என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதை நினைவுபடுத்தும் வண்ணமே உச்சநீதிமன்றத்தில் மும்பை அரசு - அதன் மராத்திய மக்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்ற பெரும்பான்மை (3:1) தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட மறுசீராய்வு (Review) மனு மீது ஜஸ்டிஸ் அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நேற்று (1.7.2021) வழங்கிய தீர்ப்பில், அம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, முந்தைய தனது பெரும்பான்மை தீர்ப்பையே உறுதிப்படுத்தி - ஆணியடித்ததுபோல் - வழங்கியுள்ளது!

பொருளாதார அடிப்படையில் 10 சதவிகிதம்பற்றி கருத்தில்லையா?

1. மராத்திய அரசு போட்ட மராத்திய மக்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என்று முன்பு கூறியதையே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

2. இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் செல்வது அரசமைப்புச் சட்ட விரோதம் (unconstitutional) என்று மீண்டும் கூறுகிறது - அந்த மறுசீராய்வு மனுவின் மீதான தீர்ப்பு.

3. பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே (Centre alone was empowered to identify socially and educationally backward common for the certain list) என்றும் இத்தீர்ப்பில் உறுதிபடக் கூறுகிறது.

இதில் சில சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

'இந்திரா சகானி வழக்கு' என்ற மண்டல் கமிஷன் வழக்கில் 9 நீதிபதிகள் அமர்வினைச் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் போகக் கூடாது என்று தீர்ப்பு தந்துள்ளது உச்சநீதிமன்றம்.

50 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குக் கூடுதலாக முன்னேறிய ஜாதிகளில் பொருளாதாரத்தில் ஏழ்மையாக உள்ள நலிவடைந்தோருக்கு தரப்பட்டுள்ள 10 சதவிகித இடஒதுக்கீடு தற்போது வேகவேகமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறதே, அது அந்த சட்டத்தை மீறித்தானே 60 விழுக்காடாக இருக்கிறது? அது தொடரலாமா?

அரசமைப்புச் சட்டப்படி சரிதானா?

அது எப்படித் தொடருகிறது? 10 சதவிகித இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் கடந்த 3, 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தும் உச்சநீதிமன்றம் இதுவரை விசாரித்துத் தீர்ப்பு வழங்காத நிலையில், 60 சதவிகித இடஒதுக்கீடு தொடருவது அரசமைப்புச் சட்டப்படி சரிதானா? (Is it not unconstitutional as per this order - Judgement) என்ற கேள்வி சட்ட வட்டாரங்களில் எழுந்துள்ளதே, அதற்குப் பதில் என்ன?

உச்சநீதிமன்றத்தின் கருத்து முரண்படவில்லையா?

இந்திரா சகானி வழக்கில் 9 நீதிபதிகள் தீர்ப்பினையே ஜஸ்டீஸ் ரத்தினவேல் பாண்டியன் எழுதியதில் (Concurring but Separate Judgement), பாலாஜி வழக்கு என்ற 50 சதவிகிதத்திற்கு மேல் போகக் கூடாது இடஒதுக்கீடு என்பதேகூட, (Obiter Dicta) என்ற வழக்கிற்குச் சம்பந்தமில்லாத கருத்து என்று குறிப்பிட்டு, 50 சதவிகிதத்திற்கு எதிரான கருத்து கூறப்பட்டுள்ளதே, உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து இதில் முரண்படவில்லையா?

ஜஸ்டீஸ் ஜீவன் ரெட்டி அவர்கள் எழுதிய 5 நீதிபதிகள் சார்பில் அந்த (இந்திரா சகானி - மண்டல்) வழக்குத் தீர்ப்பில், 50 விழுக்காட்டிற்கு விதி விலக்குகளும் நிச்சயமாகத் தரலாம் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதே! அதைக் கவனிக்க வேண்டாமா?

அரசு தலைமை வழக்குரைஞர் கூறிய கருத்து ஏன் எடுத்துக்கொள்ளப்படவில்லை?

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டும் உரிமை ஒன்றிய அரசுக்கே உரியது - மாநிலங்களுக்குரியது அல்ல என்று கூறுவதை எதிர்த்து ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய தலைமை வழக்குரைஞர் கூறிய கருத்து ஏன் எடுத்துக்கொள்ளப்படவில்லை?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன. அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் இத்தனை சதவிகிதம்தான் இட ஒதுக்கீடு என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

அதுமட்டுமல்ல, மாநில அரசு கருத்தில், போதிய அளவு என்று நிர்ணயிக்கப்படுவதைத்தானே அரசமைப்புச் சட்ட பிரிவுகள் கூறுகின்றன. 'Adequate Representation' என்ற சொற்றொடரைத்தானே, அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களால் - பயன்படுத்தப்பட்டுள்ளது! அதன் முழுப்பொருளை இத்தீர்ப்புகள் உணர்த்துகின்றனவா?

மகாராட்டிர அரசு சமூகநீதி காப்பு முயற்சியைத் தொடரவேண்டும்!

இனி மராத்திய மாநில அரசு இப்பிரச்சினையை மக்கள் மன்றத்தின் ஆதரவோடு புதிய இட ஒதுக்கீடு சட்டத்தை அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி நிறைவேற்றவேண்டும்; இன்றேல் அவசரச் சட்டம் மூலமாகவே  மீண்டும் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி -  மக்கள் மன்ற ஆதரவோடு - தங்களது சமூகநீதி காப்பு முயற்சியைத் தொடரவேண்டும். மக்களிடம் நேரடியாக தொடர்புடையது மாநில அரசே தவிர, ஒன்றிய அரசு அல்ல; இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோரை தெளிவாக அடையாளம் காணும் வாய்ப்பு மாநில அரசுக்குத்தானே இருக்க முடியும். ஒன்றிய அரசே, மாநிலத்திற்கு உரிமையுண்டு என்ற வகையில், மறுசீராய்வு மனு போட்டுள்ள நிலையில், இயல்பாக அதனை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்குவதற்கே அதிக வாய்ப்பு!

ஆனால், தீர்ப்போ வேறு வகையாக உள்ளது!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்டம் 102 ஆம் திருத்தத்தில் காணப்படும் வாசகத்தின் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதால், அதுகுறித்தும் ஒன்றிய அரசு சிந்தித்துத் தேவையான திருத்தம் செய்ய வாய்ப்பு உண்டே! அதனை ஒன்றிய அரசு செய்யட்டும்!

தமிழ்நாடு வழிகாட்டும்!

மற்ற மாநில முதலமைச்சர்கள், பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும் உரிமையை மாநிலங்களிடமிருந்து பறிப்பதைத் தடுக்க சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும்  தீர்வைக் காண உடனடியாக முயலவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக