ஞாயிறு, 18 ஜூலை, 2021

மீன் வள மசோதா மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் கொடும் சட்டம் ! - எம் எச் ஜவாஹிருல்லா



மீன் வள மசோதா  மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் கொடும் சட்டம்…!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

மீனவர்களுக்கு எதிரான மீன்வள மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

மீனவர்கள் இந்த வகையான மீன்களை தான் பிடிக்க வேண்டும் இந்த வகை வலையை வைத்து தான் மீன் பிடிக்க வேண்டும் இந்தப் பகுதியில்தான் மீன் பிடிக்க வேண்டும் இவைகளுக்கெல்லாம் அரசு உரிமங்கள் வாங்க வேண்டும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு போடவேண்டிய சட்டங்களை ஏழை-எளிய மீனவர்கள் மீது திணிப்பது மாபெரும் அபத்தம். 

இந்த மசோதா பாரம்பரிய மீனவர்களை அழித்து ஒழித்து விடும். கடல் பகுதியில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு உரிமையை கொடுத்து பாரம்பரிய மீனவர்களை அப்புறப்படுத்த நினைக்கும் ஒன்றிய அரசின் மோசமான நோக்கம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. 

இந்த மசோதா நிறைவேறினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்.. லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பது மற்றும் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற தண்டனைகளை மீனவர்களுக்கு அளிப்பதன் வாயிலாக மீனவர்களை முற்றாக  அழிக்க முற்படுகிறது ஒன்றிய அரசு. 

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் வஞ்சிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு உருப்படியான எந்த ஒரு முன் முயற்சியையும் ஒன்றிய பாஜக அரசு செய்யவில்லை. இந்தச் சூழலில் இந்த மசோதாவின் வாயிலாக, ஒன்றிய பாஜக அரசு மீனவர்களை மேலும் நசுக்கும் வேலையில் ஈடுபடுகிறது . 

எனவே இந்த சட்டமுன்வரைவை தமிழகத்தில்  உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக