திங்கள், 4 அக்டோபர், 2021

கூடங்குளம் அணு உலைக்கே மக்கள் எதிர்ப்பு இருக்கும் நிலையில், அணு உலைக் கழிவு நிலையத்தையும் அருகே ஏற்படுத்துவதா? - கி.வீரமணி


 கூடங்குளத்தில் அணு உலை ஏற்பாடு செய்து, அது செயல்பட்டுவரும் நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிகழ்வுகளை ஒன்றிய அரசு - மறந்திருக்க வாய்ப்பில்லை.

வேதனையையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது!

அப்படி இருக்கும் நிலையில், ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதுபோல, இப்போது அதே பகுதியில் மற்றொரு அணு உலைக் கழிவு நிலையத்தையும் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து அறிவித்திருப்பது, அப்பகுதி மக்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர் களுக்கும், காப்பாளர்களுக்கும் அதிர்ச்சியையும், வேதனையையும், கவலையையும் ஏற்படுத்தி யுள்ளது.

அவர்களது கவலையும், அச்சமும் நியாய மானதேயாகும். அந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவருமான மாண்புமிகு மு.அப்பாவு அவர் களும், ஒன்றிய அரசுக்கு உடனடியாக கடிதம் - வேண்டுகோள்மூலம், அத்தொகுதியின் மக்க ளின் அச்சத்தையும், கவலையையும் தெரிவித்து, அதை வேறிடத்திற்கு மாற்றிடக் கோரியுள்ளார்.

எவ்வகையிலும் நியாயமானதல்ல!

ஓர் ஆபத்து பற்றிய அச்சமே இன்னமும் மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில், மற்றொரு ஆபத்தையும் மேலும் வளர்க்கக்கூடிய அணு உலை கழிவுகளுக்கான கூடத்தையும் அங்கேயே - அருகருகே ஏற்பாடு செய்வது எவ்வகையிலும் நியாயமானதல்ல!

மக்கள் உயிருக்குத்தான் முன்னுரிமை - மற்ற அம்சங்கள் எல்லாம் அடுத்தவையே!

மக்கள் நாயகமான ஜனநாயக ஆட்சியில், எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும்கூட வலுக் கட்டாயமாக அவர்கள்மீது திணிக்க ஒன்றிய அரசோ, மற்ற அரசுகளோ முயற்சிக்கக் கூடாது; அது வெறுப்பையும், கசப்பையுமே மேலும் மேலும் ஏற்படுத்தும்.

கருத்திணக்க முடிவைக் கண்டிருக்கவேண்டாமா?

இதற்கென தமிழ்நாட்டுச் சுற்றுச்சூழலியளாளர்கள், தமிழ்நாடு அரசு மற்றும் மாநில அரசுகள் ஆகியோரது கருத்துகளை முன்கூட்டியே கேட்டு, ஒரு கருத்திணக்க முடிவைக் கண்டிருக்க வேண்டாமா? எந்த ஒன்றிய அரசு திட்டமா னாலும்கூட மக்கள் ஒத்துழைப்போடு - எவ்வித எதிர்ப்புமின்றி இருந்தால்தான் வெற்றிகரமாக நிறைவேற்றப் படக் கூடும்!

மக்கள் நலனையே பிரதானமாகக் கருதி, அதற்கே முன்னுரிமை தந்தால் மட்டுமே அரசின் திட்டங்களுக்கு - அவை சிறந்த வளர்ச்சித் திட்டங்களாக இருப்பினும்கூட - கால்கோள் விழா செய்தால், அவை பயன்தரக் கூடியதாக அமையும்!

ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்க!

இந்த அணுக்கழிவுக் கூடம் அங்கே அமைப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதற்கு, ஆயிரம் வலுவான காரணங்கள் எடுத்து வைக்கப்படும் நிலையில், இதில் ஒன்றிய அரசு கவுரவப் பிரச்சினையாக அதனை எடுத்துக் கொள்ளாது, தனது முடிவை மறுபரிசீலனை செய்து, வேறு ஓர் இடத்தில், மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட இயலாத அளவுக்குத் தக்கப் பாதுகாப்புள்ள இடத்தை ஒதுக்கி, அமைப்பதே சிறந்ததாகும்.

எனவே, இந்த முடிவை மாற்றி, மேலும் ஆய்வு செய்வது அவசரம், அவசியம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக