வியாழன், 7 அக்டோபர், 2021

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் தொடங்கியிருப்பதால் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தி.வேல்முருகன்

 


தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் தொடங்கியிருப்பதால் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெற் பயிர்கள் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. 

இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஆவதாகவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாகவும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.   இதன் காரணமாக பெரு நஷ்டமாவதாகவும் உழவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஆவதால், அறுவடை செய்யாமல் விளைநிலங்களிலேயே மழையில் நனைந்து நெல் வீணாகி வருகிறது.   

இது ஒருபுறம் இருக்க, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய சில அதிகாரிகள் கையூட்டு பெறுவதாகவும் கூறப்படுகிறது. 

எனவே, விவசாயிகளின் நலன் கருதி டெல்டா மாவட்டங்களில் தற்போதுள்ள கொள்முதல் நிலையங்களை திறக்கவும்,  கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் மூட்டைகளைக் கொண்டு வரும் விவசாயிகளிடம் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். கையூட்டு பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. 

மேலும், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாற்று நடும் பணிகள் தொடங்கியுள்ளது. இப்பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு, கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் பெறவும், உரங்கள் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக