சனி, 20 நவம்பர், 2021

விழிப்புணர்வு - வன்முறைக் கலக்காத அறப்போராட்டமே வெற்றி தரும்! ‘நீட்’, சிறுபான்மை நலன் போன்றவை வெற்றி பெற இதனைப் பின்பற்றுவோம்! - கி.வீரமணி



 டில்லி விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வெற்றி

ஓராண்டுக்குமேல் போராடிய விவசாயிகளை ஒருமுறையாவது பிரதமர் சந்தித்தாரா?
விழிப்புணர்வு - வன்முறைக் கலக்காத அறப்போராட்டமே வெற்றி தரும்!
‘நீட்’, சிறுபான்மை நலன் போன்றவை வெற்றி பெற இதனைப் பின்பற்றுவோம்! - கி.வீரமணி
1. பிரதமர் மோடி, பிடிவாதமாகக் கொண்டு வந்து, முதலில் அவசரச் சட்டங்களாக உருவெடுத்து, பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய விவாதமே நடத்தவிடாமல் அவசர அவசரமாக முதலைப் பிடிவாதத்துடன், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு - மாநிலங்களில் உள்ள பல எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு உள்பட பலவற்றையும் அலட்சியப்படுத்தியே குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
இச்சட்டங்களை எதிர்க்கட்சிகள் மட்டும் எதிர்க்கவில்லை. ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக முன்னணியில் (என்.டி.ஏ.) அங்கம் வகித்த பஞ்சாபின் அகாலிதளமும் கடுமையாக எதிர்த்தது; பிரதமரோ, பா.ஜ.க. ஆட்சியோ பணியவில்லை. ஒன்றிய அகாலி தள பெண் அமைச்சரும் பதவியை ராஜினாமா செய்தார் - எதிர்ப்புக் குரலை முழங்கினார்.
அறவழியில் நடத்தப்பட்ட போராட்டம்
2. உச்சநீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்குகள் வந்தபோதுகூட ஒன்றிய அரசும், அதன் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல், அடிஷனல் ஜெனரல் ஆகியோரும் ஒன்றிய அரசின் வேளாண்மைச் சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து நிறுத்திவைத்தோம் என்று தங்கள் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் அறிவித்த நிலையிலும், தொடர் போராட்டத்தில், குடும்பம் குடும்பமாக ஈடுபட்ட விவசாயிகள் - எவ்வித அரசியல் கட்சியினரையும் தங்களது போராட்டக் களத்திற்கு அழைக்காமல் - அவர்களது அறவழிப்பட்ட ஆதரவை மட்டும் பயன்படுத்திக் கொண்டே - காந்திய வழியில் கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், கொடுமையான குளிர் - பனி இவற்றைப் பொருட்படுத்தாமல், தங்களது விவசாயத்தை ஓராண்டுக்குமேல் புறக்கணித்து, சாலைகளை வாழ்விடங்களாக மாற்றி அறவழிப் போராட்டங்களை அமைதியாக நடத்தினர்.
700 பேர் உயிர்த் தியாகம் செய்தனரே!
3. ஏறத்தாழ 700 பேர் இதில் மாண்டு உயிர்த் தியாகம் செய்துள்ள நிலையிலும், ‘சத்தியாகிரகம்‘ சளைக்காது - தொடர்ந்த வரலாறு இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் போராடி அச்சட்டத்தை மோடி அரசு ரத்து செய்யும் வரை போராடுவோம் என்ற வைராக்கிய உறுதியை எந்த சக்தியாலும் விவசாயிகளிடமிருந்து பறிக்க முடியவில்லை.
ஜனநாயக உணர்வும், மாநில உரிமை உணர்வும் கொண்ட இந்தியாவின் முக்கிய மாநிலங்கள் இந்த சட்டங்களைத் திரும்பப் பெற சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றின. பிரதமரோ, ஒன்றிய அரசோ அதுபற்றிக் கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
‘குடியரசு’ நாளில் டில்லி செங்கோட்டையில் ஜனநாயகம் துகிலுரியப்பட்டபோது, வழக்குகள் பாய்ந்தன.
என்றாலும், போராட்டத்தை விவசாயிகள் பின்வாங்கவே இல்லை! உலகம் வியந்து பார்த்தது விவசாயிகள் கட்டுப்பாட்டை!
பிரதமர் ஒரே ஒருமுறை சந்தித்ததுண்டா?
4. சுமார் 20, 30 முறை பேச்சுவார்த்தைகள் நடந்தன; அவை தோல்வியில் முடிந்தன. பிரதமர் ஒருமுறைகூட அந்த விவசாயிகளை - போராடுபவர்களை அழைத்துப் பேசவோ, போராட்டக் களம் சென்று அவர்களது கோரிக்கைகள்பற்றிக் கேட்டறியவோ கூடத் தயாராக இல்லாத ‘விசித்திர ஜனநாயக வில்லங்கமே’ கோலோச்சியது.
5. தங்கள் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. போன்ற நிபந்தனையற்ற அடிமை முறிச்சாசனம் எழுதியவர்கள் தங்கள் பக்கம் நின்று ‘பஜனை’ பாடுவதையே ஒன்றிய அரசு பெரிதும் ரசித்துக் கொண்டு செங்கோலை(?) நடத்தியது!
ஆனால், திடீரென்று ஒரு நாள் (19.11.2021) காலை 9 மணிக்கு நமது பிரதமர் மோடி, மூன்று வேளாண்மைச் சட்டங்களையும் திரும்பப் பெறுகின்றோம் என்று ஊடக வாயிலாக திடீர் அறிவிப்புச் செய்து, விவசாயிகளையும், நாட்டு மக்களையும், எதிர்க்கட்சிகளையும் அதிர்ச்சியில் தள்ளினார்!
இந்த வேளாண்மை விரோத, மாநில உரிமைப்பறிப்புச் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கி, ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளான’ பரிதாபத்திற்குரிய அ.தி.மு.க. போன்ற அடிமைகள் இன்னும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்!
‘விவசாயிகளின் நண்பர்’ பிரதமர் மோடி தனது பல குரலான பஜனையை விடாமல் பாடுகிறார் - பவளவிழா ஆண்டில் ஆட்சியை அடகு வைத்த அந்த பூஜ்ய பெருமான்!
அ.தி.மு.க.வின் பரிதாப நிலை!
பா.ஜ.க.வினரே திகைத்து வாயடைத்து நிற்கும் நிலையில், ‘‘ஆர்.எஸ்.எஸ். தவறு திருத்திக் கொள்ளப்பட்டது’’ என்று ஜாக்ரன் மஞ்ச்மூலம் கூறியிருக்கும் நிலையிலும்கூட, இங்கே இப்படி ஒரு விசித்திர வியாக்கியான குரல்! அதுவும் தமிழ்நாட்டிலிருந்து, ‘திராவிட’ முத்திரை - அண்ணா பெயரும்கூட!
என்று விடியும் இந்த அடிமையின் மோகம் - யாருக்கும் தெரியவில்லை!
பஞ்சாபிலும், உத்தரப்பிரதேசத்திலும் வரும் 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என்று உளவுத் துறை அறிக்கைகள் வந்திருக்கலாம்; அந்த அச்சத்தினால், இது ஒரு தேர்தல் உத்தியாக, ‘‘வித்தை’’யாக கையாளப்பட்டிருக்கலாம் என்ற கருத்து பலமாக உலா வருகிறது!
காகம் - வடை - நரி - பாட்டி கதைதான்
ஆனால், போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள், ‘‘காகம் - நரி - வடை - பாட்டி’’ கதை போல, ‘‘நாங்கள் (விவசாயிகள்) ஏமாறத் தயாராக இல்லை; முழுமையாக அறிவிப்பு சட்டப்பூர்வமாக வெளிவரும் வரையில் போராட்டத்தைத் தொடரவே செய்வோம்‘’ என்று திட்டவட்டமாகக் கூறியிருப்பது - அவர்களது விழிப்புணர்ச்சியின் ஆழத்தைக் காட்டுகிறது.
இந்த இரண்டு மாநிலத் தேர்தல்கள் - இது ஒன்றுதானா பா.ஜ.க.வுக்கு எதிரானது? இன்னும் எத்தனையோ மக்கள் விரோத சட்டங்களும், நடப்புகளும் உள்ளன!
மீண்டும் அந்த மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிட்டால், இச்சட்டம் மீண்டும் கல்லறையிலிருந்து உயிர் பெற்றெழுந்தாலும் வியப்பில்லை என்பதைப் புரியாதவர்களா?அந்த விவசாயிகள்.
போராட்டமே வெற்றிக்கு வழி என்பதை உணர்வோம்!
தி.மு.க.வும், தமிழ்நாட்டு முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வந்ததுடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானங்களையும் நிறைவேற்றின. இதுபோலவே கேரளா மற்றும் சில மாநிலங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி தங்களது வேளாண்மை மக்களுக்கான நலனைக் காத்ததோடு, மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தனர்.
வேளாண்மை மாநில அதிகாரத்திற்குட்பட்டது; மாநில அரசுகளிடம் கூட கலந்துரையாடாமல், சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்றன!
தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு, எழுச்சியும், வன்முறை கலக்காத அறப்போராட்டமும் விடியலைத் தருவது உறுதி. ‘நீட்’ போன்ற தேர்வு, சிறுபான்மை நலன் விரோதச் சட்டங்களையும் எதிர்த்து, தமிழ்நாட்டில் இப்படி ஒரு வெகுமக்கள் விழிப்புணர்வு அறப்போர் தொடரவேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக