சனி, 13 நவம்பர், 2021

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.–மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன்


 மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், இன்று பார்வையிட்டார். குறிப்பாக அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டை பிரமுகர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். பின்னர் போரூர் மற்றும் தியாகராய நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முருகன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் வழங்கும் என்றார். பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி, தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்டு, வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அண்மையில் வாக்குறுதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் முருகன், அந்த அடிப்படையில் தேவையான உதவிகளை மத்திய அரசு தற்போது செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அண்மையில் தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி ,பிரதமர் திரு.நரேந்தி்ர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஆகியோரைச் சந்தித்து தமிழகத்துக்கு செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார் என்றும் அப்போது மேலும் தேவைப்படும் உதவிகளை தமிழகத்துக்குச் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

பல பத்தாண்டுகளாக மழைக்காலங்களில் சென்னையின் நிலை இதேபோன்றுதான் நீடித்து வருவதாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், அதற்கு தொலை நோக்குடன் கூடிய நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் அவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்ட போதிலும், தண்ணீர் அனைத்தும் வீணாகி கடலில் கலந்ததால் அடுத்த இரண்டு மாதத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது பெய்த மழையில் கூட அதிகளவு தண்ணீர் வந்தும் அதைச் சேமித்து வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ நம்மிடம் எந்த திட்டமும் இல்லை என்பதுதான் நிதர்சனம் என அமைச்சர் கூறினார்.

எனவே மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்கவும், அந்தத் தண்ணீரைப் முழுமையாகப் பயன்படுத்தவும் ஏதுவாக தமிழக அரசு தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், பல இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது என்றும், அந்தப் பணிகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  

வெள்ளத்தால் நெற்பயிர்கள், கரும்பு, வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளதால், இதுவரை பயிர்க்காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக அதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இயற்கை பேரிடரால் விவசாயிகள் சிறிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டே, பிரதமர் நரேந்தி்ர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமது கனவுத் திட்டமாக பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தார் என அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய கனவுத் திட்டத்தை தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அது குறித்த அறிவிப்பு இன்றைய நாளிதழ்களில் கூட விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் முருகன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக