திங்கள், 15 நவம்பர், 2021

கடும்மழை பாதிப்பை - கடும் உழைப்பால் இரண்டே நாளில் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் சாதனை!.- கி.வீரமணி

 கடும்மழை பாதிப்பை - கடும் உழைப்பால் இரண்டே நாளில் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் சாதனை!

ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.6 ஆயிரம் கோடி எங்கே ஒளிந்தது?

டிரிபியூனல் அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும்

வருங்காலத்தில் ஊழல்வாதிகளுக்குப் பாடமாக அமையட்டும்!.- கி.வீரமணி

சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும் சென்ற ஆறு ஆண்டுகாலத்தில் பெய்யாத அளவு கனமழை தொடர் மழையாகப் பொழிந்தது; அது வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது; தண்ணீர் ஆங்காங்கு பல பகுதிகளில் குறிப்பாக புறநகர் பகுதிகளில் தேங்கி மக்களை படகுகள்மூலம் வெளியேற்றிக் கொண்டு வரும் நிலைக்குத் தள்ளியது.

என்றாலும், அதுபற்றிச் சிறிதும் கலங்காமல் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 5, 6 நாள்களாக ஓய்வு ஒழிச்சலின்றி பம்பரம்போல் சுற்றிச் சுற்றி அமைச்சர்களுடன் சென்று,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை அளித்ததோடு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி, நம்பிக்கையூட்டி, துயர் துடைப்புப் பணிகளில் தனது அரசு இயந்திரத்தையும் போர்க்கால அடிப்படையில், ராக்கெட் வேகத்தில் இயங்கும்படி முடுக்கிவிட்டு, இரண்டே நாள்களில் இயல்பு நிலைக்கு அவர்கள் வாழ்க்கை வருவதற்கான அத்துணைப் பணிகளையும் அயர்வின்றிச் செய்ததைக் கண்டு அவனியே மூக்கில் விரலை வைத்து வியந்து பாராட்டுகிறது!

எப்படி முதலமைச்சரால் இப்படி உழைக்க முடிகிறது?

எப்படி அவரால் இப்படி இடைவிடாமல் உழைக்க, உற்சாகம் குன்றாமல் ஒரு தொண்டனைப்போல், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் தொண்டறப் பணிகளைச் செய்ய முடிகிறது? மின்னல் வேகத்தில் அவரது துயர் துடைப்புத் தொண்டறம் சுழன்று கொண்டேயுள்ளது.

ஆனால், இது அரசியல் ‘காந்தாரிகளுக்குப்’ பொறுக்கவில்லை; கண்ணிருந்தும் பார்க்காதவர்களாகவும், காதிருந்தும் கேட்காதவர்களாவும், நாக்கில் நரம்பின்றி முதலமைச்சரை, தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில் மல்லாந்து படுத்து தங்கள் மார்பு மீதே எச்சிலை உமிழ்ந்து கொண்டுள்ள வெட்கக்கேடு கண்டு நாடே கைகொட்டி சிரிக்கிறது!

ஸ்மார்ட் சிட்டி (Smart City) என்ற திட்டத்திற்கு சுமார் 6,000 கோடி பணத்தை ஒழுங்கான ஓட்டை உடைசலின்றி செலவிட்டு ஆக்கப் பணிகளைச் செய்திருந்தால், இப்படிப்பட்ட அவலம் சென்னை மற்ற நகரப் பகுதிகளில் வந்திருக்கவே வந்திருக்காது!

இந்த வெள்ளம், நீர்த் தேக்கம், மக்கள் அவதிமூலம் ஊழலின் உச்சம் ‘பளிச்‘சென்று உலகத்திற்குப் பறைசாற்றுகின்ற நிலை தெளிவாகி விட்டது!

குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுக!

எவ்வளவு ஆயிரம் கோடி வந்தாலும் அது நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படாமல், எங்கே ஒளிந்தது என்பது நாட்டுக்கு அம்பலமாகிவிட்ட நிலையில், கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிந்து பார்க்கிறார்கள் ‘மாஜிகனங்கள்.’

அவர்களைக் குற்றவாளிக் கூண்டிலேற்றி மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டியதை எப்படி கூட்டுக் கொள்ளை சாம்ராஜ்ஜியத்தில் பங்கு போட்டதாகிவிட்டது என்ற உண்மைகளை வெளியே கொண்டுவர, உடனடியாக ஒரு தனி ஆணையமே ஏற்படுத்திட வேண்டும் இன்றைய அரசு.

இதில் தயவு தாட்சண்யம் சிறிதும் காட்டாமல், விரைந்து நீதி கிடைக்கச் செய்ய தனியே ஒரு டிரிபியூனல் (Special Tribunal)  அமைத்து, இந்த வழக்குகளை வாய்தா வாங்காமல் தொடர் விசாரணையாக நடத்தவேண்டும்.

கறுப்பு ஆடுகளை அடையாளம் காண்க!

முன்பு துப்பு துலக்கிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான திரு.நல்லம நாயுடு போன்றவர்களையும்கூட அழைத்து, தனியே Director of Prosecutions என்ற பதவியை ஏற்படுத்தி, குற்றப் பத்திரிகைகளில் சட்ட ஓட்டையின்றி, தனியே விசாரணை அமைப்பை ஏற்படுத்தி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வழக்குள் முடியும் வகையில் ஏற்பாடுகளை செய்து முடிக்கவேண்டும்.

இது வருங்காலத்தில் எக்கட்சி ஆட்சிக்கு வந்து ஊழல் செய்தாலும், அவர்களுக்குப் போதிய பாடமாக இருக்கவேண்டும்.

இன்னமும் ஆட்சி இயந்திரத்தில் முந்தைய ஊழல் பெருச்சாளிகளுக்குத் துணையாக இருந்து புறங்கையை ருசி பார்த்த கறுப்பு ஆடுகளையும் அடையாளம் கண்டு அவர்கள்மீதும் சட்டம் தாமதமின்றிப் பாய்ந்து தனது கடமையைச் செய்யவேண்டும்!

பழைய ஆளுங்கட்சிக்குப் பதில்கள் வார்த்தையல்ல - செயல்களே!

மக்களாட்சியின் செலவுத் திட்டங்கள் அவற்றிற்கே செலவழிக்கப்பட வேண்டுமே தவிர, இடையில் மடை மாற்றமானால், கடந்த சில நாள்களாக தமிழ்நாடு கடும் மழை, வெள்ளத்தினால் அவதியுறும்போது மட்டும் வெளியாகாமல், உறுபயன் ஏற்பட்டு உண்மையான வளர்ச்சி ஏற்படும்; ஊழலின் ஊற்றுக்கண் அப்போதுதான் அடைபடும்!

பழைய ஆளும் கட்சிக்குப் பதில் சொற்களால் அல்ல; நடவடிக்கைகளாக விடைகள் கிடைக்கட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக