சனி, 13 நவம்பர், 2021

நரேந்திர மோடியின் லட்சியமான ‘தற்சார்பு இந்தியாவை’ அடைய உதவும் வலுவான பாதுகாப்பு உற்பத்திச் சூழலியல் உத்தரப் பிரதேசத்தில் விரைவில் உருவாக்கப்படும்.- திரு ராஜ்நாத் சிங்


 உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் முதலீட்டை அதிகரிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் லக்னோவில் உள்ள முதல்வர் இல்லத்தில் நவம்பர் 12, 2021 அன்று ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் பாதுகாப்புத் தொழில்துறை பிரதிநிதிகளின் கருத்துகளை பாதுகாப்பு அமைச்சர் கேட்டறிந்தார். முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.

தொழில்துறை பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டதைப் பாராட்டிய திரு ராஜ்நாத் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியமான ‘தற்சார்பு இந்தியாவை’ அடைய உதவும் வலுவான பாதுகாப்பு உற்பத்திச் சூழலியல் உத்தரப் பிரதேசத்தில் விரைவில் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“எங்கள் தொழில்களின் தேவைகள், அபாயங்கள் மற்றும் பலம் ஆகியவற்றை நாங்கள் புரிந்துகொள்கிறோம். விரைவில் நம் நாட்டை தன்னிறைவாக மாற்றும் திறன் நமது தொழில்களுக்கு உள்ளது. இதை நான் பல்வேறு தளங்களில் வலியுறுத்தி வருகிறேன்” என்று அவர் கூறினார்.

உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்களை அமைப்பது, பாதுகாப்புத் தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் பல படிகளில் ஒன்றாகும் என்று அவர் விவரித்தார்.

2000 மற்றும் 2014-க்கு இடையில் வழங்கப்பட்ட 200 உரிமங்களுடன் ஒப்பிடுகையில், 2014 முதல் இன்றுவரை 350 உரிமங்கள் தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார்.

பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அனைத்துப் பரிந்துரைகளையும் பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலித்து செயல்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக