சனி, 6 நவம்பர், 2021

சமூக நலனில் கவனம் செலுத்தும் இலக்கியம் மற்றும் கவிதைகள் காலத்தால் அழியாமல் இருக்கும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 சமூக நலனில் கவனம் செலுத்தும் இலக்கியம் மற்றும் கவிதைகளை காலத்தால் அழிக்க முடியாது. அதனால் தான் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் இன்றும் ஊக்கமளித்து வருகின்றன என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறினார்.

இலக்கிய அமைப்பான விசாகா சாஹிதியின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பேசிய அவர், ஒரு நாட்டின் மகத்துவத்தையும் பெருமையையும் பிரதிபலிக்கும் வாகனமாக இலக்கியம் விளங்குவதாகவும் என்றும், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் எல்லா எழுத்துக்களிலும் சமூக நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒரு நாட்டின் கலாச்சாரம் மற்றும் மரபுகள் இலக்கியத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார். நமது நாட்டுப்புற இலக்கியங்களை நாம் பாதுகாத்தால் நமது கலாச்சாரத்தை பாதுகாக்க முடியும் என்றார் அவர்.

தெலுங்கு மொழியின் செழுமையைக் குறிப்பிட்ட அவர், நமது உடை, உணவுப் பழக்கம், பண்டிகைகள், பழக்கவழக்கங்கள், தொழில்கள் என நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இலக்கியத்தால் பிரதிபலிக்கப்படுவதாகக் கூறினார்.

தெலுங்கு மற்றும் பிற இந்திய மொழிகளைப் பாதுகாத்தல் நமது கலாச்சாரத்தை நிலைநிறுத்தவும், எதிர்கால சந்ததியினருக்கு சரியான பாதையை வகுக்கவும் வழிகாட்டும் என்றும் அவர் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் உள்ள 920 பள்ளிகளில் தெலுங்கு எழுத்து மூலம் கோயா மொழியில் ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படுகிறது என்று திரு நாயுடு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இந்த முயற்சிக்காக அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை அவர் பாராட்டினார். பிற மொழிகளைக் கற்கும் முன் தாய்மொழியில் புலமை பெறுவது அவசியம் என்று அவர் பரிந்துரைத்தார். பெற்றோர்கள் இவ்விடயத்தில் தேவையான முன்முயற்சி எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் இலக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு எழுத்தாளர்களை வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், அத்தகைய இலக்கியங்களை பிரபலப்படுத்த புதிய வழிகளைக் கண்டறியுமாறு அறிவுறுத்தினார். இந்த விஷயத்தில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களான முல்லப்புடி வெங்கடரமணா மற்றும் சிந்தா தீக்ஷிதுலு ஆகியோரின் பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக