திங்கள், 22 நவம்பர், 2021

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆற்றிய உரை


 கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆற்றிய உரை 

கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

முதலில், சத்தியஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் திரு.இஸ்த்வான் ஸ்சாபோ (Istvan Szabo) மற்றும் திரு. மார்ட்டின் ஸ்கோர்ஸ்செஸ் (Martin Scorsese) ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகிற்கு நீங்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

இங்கு விருது பெறும் திருமதி.ஹேமமாலினி மற்றும் திரு.பிரசூன் ஜோஷி ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி. ஹேமமாலினி அவர்களே. கடந்த பல தசாப்தங்களாக வெள்ளித்திரையில் உங்களது நடிப்பு, பல தலைமுறை திரைப்பட ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரசூன் ஜோஷி அவர்களே, உங்களது தலைசிறந்த பாடல்கள், இந்தியாவின் பாரம்பரிய நெறிமுறைகள் மற்றும் சாராம்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன.

இந்திய சர்வதேச திரைப்பட விழா, மிகவும் பிரசித்தி பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். உலகெங்கிலும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான பொது மேடையை இந்த விழா வழங்குகிறது. திரைப்படக் கலாச்சாரங்களை ஒருங்கிணைப்பதோடு, பல்வேறு சமூகம் மற்றும் கலாச்சாரப் பண்புகளை புரிந்து கொள்ளவும் வழிவகுப்பதுடன், உலகத் திரைப்படங்களை அறிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

எனவேதான், நமது துறையின் அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் அவர்களின் முயற்சியால், சுதந்திரப் பெருவிழா கொண்டாடும் வேளையில், திரைப்படத் துறையில் புதுமைப் படைப்பாற்றல் கொண்ட 75 இளைஞர்கள், இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமை காரணமாக, திரைப்பட தயாரிப்பு தொழிலுக்கு உகந்த இடமாக மாற இந்தியா முயற்சித்து வருகிறது. தொழில் தொடங்குவதை எளிதாக்குவதில் கவனம் செலுத்தப்படுவதன் விளைவாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள், படப்பிடிப்புக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான அலுவலகத்தை நாம் திறந்திருக்கிறோம்.

சாமானிய மனிதனின் வாழ்க்கைக் கதையை, அவர்களது போராட்டங்கள், அவர்களது உணர்வுகள், நற்பண்புகள், யதார்த்த முறையில் பிரதிபலிக்கும் திரைப்படங்கள், பிரசித்தி பெற்ற திரைப்படங்களாக மாறுகின்றன. நமது நடிகர்கள், கடந்த கால வரலாற்றுத் தலைவர்கள் மற்றும் தலை சிறந்த நிகழ்வுகளை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

எம்ஜிஆர், என்டிஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்றோர் திரையுலகிற்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தலைசிறந்த நடிகர்களான திலீப் குமார், புனித் ராஜ்குமார், சுமித்ரா பவே மற்றும் பிற ஜாம்பவான்களையும் நான் இங்கு நினைவுகூர விரும்புகிறேன். திரையுலகம் உங்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

இந்த விழா சிறப்பாக அமைய அரும்பாடுபட்டு வரும் அனைவரது பணிகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன். கோவா மக்கள் அன்பான உபசரிப்புக்கு பெயர் பெற்றவர்கள் ஆவர். நீங்கள் அனைவரும் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்று மகிழ்ச்சியடைவதுடன், எழில்மிகு பூமியான கோவாவில் தங்கி மகிழ்ச்சியை அனுபவிப்பது உறுதி என்று நான் நம்புகிறேன் என்றும் அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.

முன்னதாக, கோவாவில் நடைபெற்று வரும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இடையே  அன்று (20.11.2021) செய்தியாளர்களிடம் பேசிய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், முதுபெரும் திரைப்பட நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. ஹேமமாலினிக்கு, இந்த ஆண்டிற்கான இந்திய திரைப்பட சாதனையாளர் விருது வழங்கப்படுவது, தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும் என்றார்.

இதற்கு முன்பு இந்த விருது நடிகர் திரு.ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் வரலாறு பற்றி குறிப்பிட்ட அமைச்சர், 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விழா, நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட நிலையில், அப்போதைய கோவா முதலமைச்சரான காலஞ் சென்ற திரு.மனோகர் பாரிக்கரின் முயற்சியால் 2004-ல் இந்த விழா கோவாவுக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

“அப்போது முதற்கொண்டு சிறப்புமிக்க இந்த விழா கோவாவில் ஆண்டுதொறும் நடைபெற்று வருகிறது. 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டமான சுதந்திரப் பெருவிழாவைக் குறிக்கும் விதமாக, 75 இளம் திரைப்பட சாதனையாளர்களின் திரைப்படங்கள், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. முதன்முறையாக ஓடிடி ஏற்பாட்டாளர்களும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்” என்று அவர் கூறினார்.

உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட இருப்பதாக குறிப்பிட்ட டாக்டர் எல்.முருகன், இந்தியா முழுவதிலுமிருந்தும், உலகெங்கிலுமிருந்தும் வந்துள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரையுலக முன்னோடிகள், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக