சனி, 13 நவம்பர், 2021

தோல்விகளைக் கண்டு துவள்பவன் அல்ல நான்; என் உயிருள்ளவரை போராடுவேன்!.- DR.S.ராமதாஸ்

 தோல்விகளைக் கண்டு துவள்பவன் அல்ல

 நான்; என் உயிருள்ளவரை போராடுவேன்!.- DR.S.ராமதாஸ்

1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் நாள். அக்காலத்தில், அமெரிக்காவில் உள்ள மாண்ட்கோமரி மாநிலத்தில் ஒரு சட்டம் இருந்தது. நகரப் பேருந்துகளின் முதல் பத்து வரிசைகளில் வெள்ளைக்காரர்கள் மட்டுமே உட்கார முடியும். கருப்பினத்தவர் பின்னிருக்கைகளில் மட்டுமே உட்காரலாம். வெள்ளைக்காரர்கள் அமரும் இருக்கையில் கருப்பினப் பெண்மணியான ரோசா பார்க் உட்கார்ந்து விட்டார். வெள்ளைக்காரர்கள் பேருந்தில் ஏறிய போது தன் இருக்கையிலிருந்து எழுந்து அவர்களுக்கு இடம் தரும் படி பேருந்தின் ஓட்டுனர், ரோசா பார்க் அம்மையாருக்கு உத்தரவிட்டார். இருக்கையிலிருந்து எழுவதற்கு ரோசா பார்க் மறுத்துவிட்டார். அந்நகரத்தின் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டபிறகு மீண்டும் பேருந்துகளில் வெள்ளைக்காரர்கள் அமரும் இருக்கைகளிலேயே அமரத் தொடங்கினார். அந்தப் போராட்டம் மாண்ட்கோமரி பேருந்து மறுப்புப் போராட்டம் என்ற பேரியக்கமாக மாறி அமெரிக்காவில் நடைபெற்ற நிறவெறிக்கெதிரான போராட்டத்தின் இன்றியமையாத மைல் கல்லாக ஆனது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தின் அருகில் உள்ள கோவிலில் நடைபெற்ற அன்னதான விருந்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அநீதியை எதிர்த்து பொங்கி எழுந்த நரிக்குறவர் பெண் அஸ்வினியை 'இந்தியாவின் ரோசா பார்க்' என்று அழைத்தால் அது மிகையல்ல. 

அந்தப் பெண்ணின் போராட்டம் ஊடகங்களின் பேராதரவைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சர் விரைந்து சென்று அவருக்கும் மற்ற நரிக்குறவர்களுக்கும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கியிருக்கிறார். இந்தக் கொண்டாட்டத்தில், விடுதலை பெற்று எழுபத்தி நான்கு ஆண்டுகள் கடந்தும் அரசாங்கத்தின் கண்களால் தீண்டப்படாதவர்களாக, சாதிச் சான்றிதழ் பெறுவது கூட இயலாதவர்களாகவேபழங்குடிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையான உண்மை யாராலும் சுட்டிக் காட்டப்படவேயில்லை. 

விளிம்புநிலை மக்களான நரிக்குறவர்கள் நவீன நாகரீக வளர்ச்சியின் எந்தக் கூறுகளையும் அடையவில்லை என்பதும் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையையே இப்பொழுதும் வாழ்கிறார்கள் என்பதும் என் நெஞ்சைச் சுடுகிறது.

நரிக்குறவர் பெண்ணின் உரிமைப் போராட்டத்தை கொண்டாடித் தீர்க்கும் ஊடகங்கள் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதை மௌனத்தின் வாயிலாகக் கொண்டாடியிருக்கின்றன.  முன்னணி ஆங்கில இதழ் ஒன்று (The Hindu) ‘அரசியல் காரணங்களுக்காக, தரவுகளின்றி வழங்கப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது’ என்று மகிழ்ந்திருக்கிறது.

மாண்புமிகு நீதிபதிகள் துரைசாமியும், முரளி சங்கரும் வழங்கியிருக்கும் தீர்ப்பு இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களைத் தருவதற்குப் பதிலாக பல புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 

10.5% இட ஒதுக்கீட்டுக்குத் தடை வழங்க சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்ட நிலையில் இவ்வழக்கு நடைபெற்றது. நீதிபதி துரைசாமி அவர்கள் நவம்பர் மாதத்தில் ஓய்வு பெறும் நிலையில் இருந்ததால் இவ்வழக்கினை விரைவில் நடத்தி தீர்ப்பு வழங்க முடிவெடுத்தார். அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும்  உணவு இடைவேளைக்குப் பிறகு மதியம் 2.15 மணிக்கு வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படியே விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் பதில்கள் காணப்படவேண்டிய ஏழு கேள்விகளாக பின்வருவனவற்றை மாண்பமை நீதிபதிகள் எடுத்துக் கொண்டனர்:

1. அரசியல் சாசனத் திருத்தம் 102 நடைமுறைக்கு வந்ததற்கும், 102வது அரசியல் சாசனத் திருத்தத்தின் விளைவுகள் அரசியல் சாசனத் திருத்தம் 105 இன் வாயிலாக நேர் செய்யப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் இட ஒதுக்கீடு குறித்து சட்டம் இயற்றும் உரிமை மாநில சட்டசபைக்கு இருந்திருக்க முடியுமா?

2. ஒன்பதாவது அட்டையின் அட்டவணையின் கீழ் உள்ள ஒரு சட்டத்தை அரசியல் சாசனத்தைத் திருத்தாமல் மாற்ற முடியுமா?

3. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான முன்னெடுப்புகளைச் செய்வதற்கு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? குறிப்பாக அரசியல் சாசனத்தின் 338-B பிரிவு அத்தகைய அதிகாரத்தை வழங்குகிறதா?

 4. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?

5. பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றின் மக்கள் தொகை, சமூக, கல்வி நிலைமைகள், அரசுப் பணிகளில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில் இட ஒதுக்கீடு வழங்க இயலுமா?

6. அளவிடக்கூடிய புள்ளி விவரங்கள் ஏதும் இல்லாத நிலையில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு அரசியல் சாசனப் பிரிவு 14, 15, 16 ஆகியவற்றை மீறுவதாக ஆகுமா?

7. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தொகுப்பை தகுந்த அளவுகோல்கள் ஏதுமின்றி மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டும் மூன்று பிரிவுகளாக பிரிக்க முடியுமா?

இந்த வழக்கின் விசாரணை இந்த ஏழு கேள்விகளுக்கும் பதில் தேடும் வகையில் அமைய வேண்டும்என்பதும், இந்தக் கேள்விகளை இரு தரப்பினரிடமும் கேட்டு அவர்கள் தரும் பதில்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்பதும் தான் இரு தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்க முடியும். 

விசாரணையின்போது இந்த 7 கேள்விகளுக்கான பதில்களை பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மிகத் தெளிவாக எடுத்து வைத்திருக்கின்றனர். 

கேள்வி (I)

மராத்தியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டஅரசியல் சாசன 102 ஆவது திருத்தத்தின்படி, ஒரு சாதியை 'பின்தங்கிய சமூகம்' என்று அறிவிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று 2021 ஆம் ஆண்டு, மே மாதம் 21ஆம் தேதி அறிவித்தது. பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பின் காரணமாக நடுவண் அரசு 105 ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தைக் கொண்டு வந்து ‘பின் தங்கியவர்கள்' என்று அறிவிக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீட்டுத் தந்தது. இந்தத் திருத்தம் 2021 ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்டது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் 26.2.2021 அன்று கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது 102 ஆவது அரசியல் சாசனத் திருத்தம் நடைமுறையில் இருந்த காரணத்தினால், மாநில அரசுக்கு வன்னியர்களை பின்தங்கியவர்கள் என்று அறிவிக்கும் அதிகாரம் இல்லை என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஆகும். 

இதற்கான சரியான பதிலை மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார் நீதிமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ விளக்கத்தில் கூறியிருந்தார். விடுதலைக்கு முன்பிருந்தே வன்னியர்கள் பின்தங்கியவர்கள் என்ற தொகுப்பிலேயே இருந்து வருகிறார்கள். 1989 ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் மிகவும் பின் தங்கியவர்கள் என்ற தொகுப்பில் இருந்து வருகிறார்கள். வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அவர்களை புதியவர்களாக பின்தங்கிய மக்களாக அறிவிக்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீட்டுத் தொகுப்பில் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆகவே இந்த அறிவிப்பு அரசியல் சாசனத் திருத்தம் 102 க்கு முரணானது அல்ல என்பது விளக்கப்பட்டது.

கேள்வி (II)

"அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டத்தை திருத்தாமல் இந்த இட ஒதுக்கீட்டை வழங்க முடியுமா?" 

"தமிழ்நாடு சட்டம் 1994, 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கிறது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு என்பதால் 69% இட ஒதுக்கீட்டூ வரம்பை மிகாது. ஆகவே இந்த இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் தமிழ்நாடு சட்டத்தை மீறுவது ஆகாது. 10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசியல் சாசனத்தை திருத்தத் தேவையில்லை" என்பதுநீதிமன்றத்தில் நாம் வைத்தவாதமாகும்.

கேள்வி (III)

பின்தங்கிய மக்களுக்கான முன்னெடுப்புகளை செய்வதற்கான அதிகாரத்தை அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கி இருக்கிறதா என்பதே மூன்றாவது கேள்வி. அதிலும் குறிப்பாக அரசியல் சாசனப் பிரிவு 338-B என்ன சொல்கிறது என்ற கேள்வியை மாண்பமை நீதிபதிகள் முன் வைத்தனர். 

இந்தக் கேள்விக்கான பதில் அனைவரும் உணர்ந்தது. பின்தங்கிய மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எதையும் திட்டமிடுவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்குமேயானால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மட்டுமல்ல, கல்வி உதவி அளிப்பது, கட்டணச் சலுகை அளிப்பது உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் எல்லா முன்னெடுப்புகளும் சட்டவிரோதம் என்றாகிவிடும். இது மாநிலங்களின் அடிப்படை உரிமைகளையும், கடமைகளையும் கேள்விக்கு உட்படுத்தும் கேள்வியாகும்.  

தமிழ்நாடு சட்டம் 1994, பிரிவு 3 (a) பின்தங்கிய வகுப்பு, மிகப் பின்தங்கிய வகுப்பு, சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை முடிவு செய்யும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு அளிக்கிறது.  

தமிழ்நாடு சட்டம் 1994, பிரிவு 7, 15.3.1993 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பின்தங்கிய மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஆணையின் படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் என்ற தொகுப்பை எப்படி வேண்டுமானாலும் பிரித்து இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 

மாண்புமிகு நீதிபதிகள் இந்தக்கருத்தினை ஒப்புக் கொள்கின்ற போதிலும், அந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 'தகுந்த ஆய்வுகளின் அடிப்படையில்' என்ற சொற்றொடரைச் சுட்டிக்காட்டி மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பை மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதற்கு என்ன ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று வினவுகின்றார்கள்.

கேள்வி (IV)

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு உரிமை இருக்கிறதா? 

இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலங்களின் அரசுப் பணிகளுக்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன. இந்த நடைமுறை 1921ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசின் கீழ் அமைந்த அன்றைய சென்னை மாகாணத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாலும் வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர அரசு தனியார் பணிகளுக்கும் இட ஒதுக்கீட்டை அறிவித்தது. 

தமிழ்நாடு சட்டம் 1994 சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இருப்பதை உறுதி செய்கிறது. 

ஆயினும் மாண்புமிகு நீதிபதிகள் அரசியல் சாசனப் பிரிவு 102 இன் படி மாநிலங்களிடம் இருந்த இந்த உரிமை பறிக்கப்பட்டு விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியை 'பின்தங்கிய வகுப்பினர்' என்று அறிவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இல்லை என்று அரசியல் சாசனத் திருத்தம் 102 கூறியது. அரசியல் சாசனத் திருத்தம் 105 இந்த உரிமை மாநில அரசுகளுக்கு இருப்பதை உறுதி செய்தது. 105 ஆவது திருத்தம் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்டது. வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்ட பிப்ரவரி 2021 காலகட்டத்தில் மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்பதே நீதிபதிகளின் கருத்தாகும். இதில் ஒரு குழப்பம் இருக்கிறது. வன்னியர் 10.5 இட ஒதுக்கீடு சட்டம் வன்னியர்களை புதியதாக மிகப் பின் தங்கள் என்று அறிவிக்கவில்லை. வன்னியர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களாக விடுதலைக்கு முன்பு இருந்தே கருதப்படுகிறார்கள். 1989 ஆம் ஆண்டில் அது மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்ற தொகுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் பொதுப் பிரிவினராக இருந்த, புதியதாக மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்று அறிவிக்கப்பட்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே அது 102 ஆவது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.

கேள்வி (V), (VI), (VII) ஆகிய மூன்று கேள்விகளும்ஒரே ஒரு பிரச்சினையைத் தான் சுட்டுகின்றன.அளவுகோல்களின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடுவழங்கப்பட்டிருக்கிறது என்று பல்வேறு தரப்பினர் எழுப்பும்குற்றச்சாட்டுக்கான பதிலைத் தான் இக்கேள்விகள் கோருகின்றன. 

இந்தக் கேள்விகளுக்கான வலுவான பதில்களை பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு அளித்தனர். 

பிற்படுத்தப்பட்டமக்களுக்கு வழங்கப்படும் எல்லா இட ஒதுக்கீடுகளும் 1931 ஆம் ஆண்டு நடைபெற்றசாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.அந்தவகையில் தமிழ்நாட்டில் வாழும் வன்னிய சமூகத்தின் எண்ணிக்கையும் 1931ஆம்ஆண்டு கணக்கெடுப்பை இன்றைய மக்கள் தொகைக்கு பொருத்தியேகணக்கிடப்படுகிறது. 

1957ஆம்ஆண்டு கர்மவீரர் காமராசர் முதலமைச்சராக இருந்த போது ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் 38 சாதியினர் மிகவும்பின்தங்கிய நிலையில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் வன்னிய குல சத்திரியர்கள் ஆவார்கள். அவ்வறிக்கை அந்த 38 சமூகங்களை பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் மிகவும் பின்தங்கியுள்ளவை எனக்குறிப்பிட்டு, அவர்களுடைய கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு முன்னெடுப்புகளை செய்ய வேண்டுவது அவசியம் என பரிந்துரைத்தது. 

1970ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கை தான் தமிழகத்தில்பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளுக்கானஅடிப்படையாக இருந்தது. அதன் பின்னர் அம்பாசங்கர் ஆணையம் (1983 ஆம் ஆண்டு)பிற்படுத்தப்பட்டமக்களின் சமூக பொருளாதார கல்வி நிலைகளை ஆய்வு செய்து அறிக்கைவெளியிட்டது. இந்த இரண்டு அறிக்கைகளும் வன்னிய சமூகத்தின் மிகப் பின்தங்கியநிலையை உறுதி செய்திருக்கின்றன. 

மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்20%இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை இந்த இரண்டு ஆய்வறிக்கைகளும் தான். 

69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக ஜனார்த்தனம் ஆணையம் ஒரு ஆய்வுநடத்தியது. இந்த ஆய்வு அம்பாசங்கர் ஆணையத்தின் ஆய்வறிக்கையை பரிசீலித்துஅதன் அடிப்படையிலேயே தன் அறிக்கையைத் தந்தது. 

ஜனார்த்தனம்ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே அருந்ததியினருக்கான இடஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடும் தரப்பட்டது. அந்த இரண்டு இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஜனார்த்தனம் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுதான் உச்சநீதிமன்றம்அந்த இட ஒதுக்கீடுகளுக்குத் தடை வழங்க மறுப்பு தெரிவித்தது. 

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வழங்கப்பட்டுவரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரானஉச்சநீதிமன்ற வழக்கிலும்  ஜனார்தனம் ஆணையத்தின் அறிக்கையே 69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்றியது. 

ஜனார்த்தனம்அறிக்கை தமிழக மக்கள் தொகையில் வன்னியர்கள் 13.1% ஆக இருக்கிறார்கள்எனவும், அவர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தரலாம் எனவும் 2012ஆம் ஆண்டுபரிந்துரை செய்திருக்கிறது. 

ஆகவேவன்னியருக்கு அளிக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு மேற்கூறிய ஆய்வுகளின்அடிப்படையில் வழங்கப்பட்டது ஆகும்.அளவுகோல்களின் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் இன்றி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டது என்பது தவறான கருத்து ஆகும். 

குறிப்பிட்டசில மாவட்டங்களில் வாழும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமேசீர்மரபினர் ஆவார்கள். அந்த குறிப்பிட்ட சில சமூகங்கள் தமிழகத்தில் எங்குவாழ்ந்தாலும்  சீர்மரபினர் என்ற சான்றிதழைப்பெறலாம் என்று சீர்மரபினர்குறித்த அரசாணை திருத்தப்பட்டது. இது உண்மையான சீர்மரபினருக்கு மிகப்பெரும்ஆபத்தாக முடிந்திருக்கிறது.அரசாணையில் செய்யப்பட்ட இந்த திருத்தத்தைப்பயன்படுத்தி பல்வேறு சமூகங்கள் சீர்மரபினர் என்று சான்றை தமிழகம் முழுவதும்பெற்று வருகிறார்கள். வன்னியர்களுக்கும், சீர்மரபினருக்கும், பிற  மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டை இவர்கள்அபகரித்துக் கொள்கிறார்கள். 

இந்தஅபகரிப்பாளர்கள்தான்அடிப்படைப் புள்ளிவிவரங்களும், சான்றுகளும் இல்லாமல்வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது என்ற பொய்யைபொதுவெளியில் பரப்பியது மட்டுமல்லாமல் நீதிமன்றத்துக்கும் கொண்டுசென்றார்கள். 

கெடுவாய்ப்பாகமாண்பமை நீதிமன்றமும் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதாரமாக இருந்தஅளவுகோல்கள் குறித்தும், புள்ளி விவரங்கள் குறித்தும் பாட்டாளி மக்கள்கட்சியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்தசான்றுகளை பரிசீலிக்கவில்லை. 

நீதிபதிகள்வழங்கும் தீர்ப்பு சரியானதாக இருந்தால் மட்டும் போதாது. அது அனைவரும் சரிஎன்று உணரும்படி இருக்க வேண்டும் என்பது ஒரு கூற்று. பாட்டாளி மக்கள் கட்சி அளித்த பல்வேறு எழுத்துப்பூர்வசான்றுகளையும், விவாதங்களையும் மாண்பமை நீதிபதிகள் ஆழமாகப் பரிசீலித்து, வலுவான காரணங்களின் அடிப்படையில் அவற்றை மறுதலித்தார்கள் என்பதற்கானபதிவுகள் எதையும் 184 பக்கங்களைக் கொண்ட இந்தத் தீர்ப்பில் காண முடியவில்லை. 

நீதிபதிகள் எழுப்பியிருக்கும் ஐந்தாவது கேள்வியான ''பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றின் மக்கள் தொகை, சமூக, கல்வி நிலைமைகள், அரசுப் பணிகளில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில் இட ஒதுக்கீடு வழங்க இயலுமா?'' என்பதில் புள்ளி விவரங்கள் இல்லையென்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்துவிட்ட பிறகு தான் வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

"வன்னியர் இட ஒதுக்கீடு அச்சாதியின் மக்கள் தொகை, சமூக, கல்வி நிலைமைகள், அரசுப் பணிகளில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் ஆகிய பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதா? அப்படியானால் அதற்கான தரவுகள் / சான்றுகள் என்ன?" என்று இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அது ஒரு திறந்த கேள்வியாக இருந்திருக்கும். கேள்வி எழுப்பப்பட்ட விதம் விசாரணைக்கு முன்பாகவே மாண்பமை நீதிபதிகள் சில முன்முடிவுகளைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று எண்ண இடமளிப்பதாக இருக்கிறது.

மாண்பமை நீதிபதிகளின் ஏழாவது கேள்வியான "தெளிவான அளவுகோல்கள் இன்றி வெறும் மக்கள்தொகையின் அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தொகுப்பை மூன்றாகப் பிரிக்க இயலுமா?" என்பதும், வன்னியர் இட ஒதுக்கீடு அளவுகோள்கள் ஏதுமின்றி தரப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வழக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே அவர்கள் வந்து விட்டார்கள் எனபதைக் காட்டுகிறது.

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இதைச் சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. இந்தத் தீர்ப்பை நான் விமர்சனம் செய்யப் போவதில்லை. அந்தப் பணியை தந்தை பெரியாரிடம் விட்டுவிடுகிறேன். 6.11.1956 அன்று விடுதலை நாளிதழ் தலையங்கத்தில் தந்தை பெரியார் கூறியதை இங்கே தருகிறேன்:

"உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிப் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பது கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் (Contempt of Court) என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றத்து நீதிபதிகளும் மனிதப் பிறவிகளாதலால், ஆசாபாசங்களுக்கும், சமுதாய உணர்ச்சிகளுக்கும், தவறுகளுக்கும் கட்டுப்பட்டவர்கள். ஜனநாயக சமூகத்தில் உரிமை இருக்கும் போது சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமை இருக்க வேண்டாமா?"

ஆனால் என்னுடைய வேதனை நீதிமன்றத் தீர்ப்பு மட்டுமல்ல. சமூக நீதியின் முழு உரிமையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இயக்கங்களின் மௌனம் தான் என்னை அதிகம்வேதனைக்குள்ளாக்குகிறது. 

சமூக நீதிக்கான பயணம் நெடியது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அதனுடைய தொடக்கப் புள்ளி மட்டுமேஆகும். 

தொடக்கப் பள்ளி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான, இலவசமான, தாய்மொழிவழிக் கல்வியை வழங்காமல் இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் இட ஒதுக்கீடு வழங்கினாலும் அனைவரும் சமம் என்ற நிலையை அடைய முடியாது. இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் பயன்களை அற்றுப் போகச் செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான் நுழைவுத்தேர்வு. நுழைவுத் தேர்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்காகவும் நான் போராடியிருக்கிறேன். 

குறைந்தபட்ச கூலியை உறுதி செய்வது, தனியார்மயத்தை எதிர்ப்பது, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற பெரு வணிக நிறுவனங்களுக்கு ஆதரவான முயற்சிகளின் வாயிலாக ஏழை விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்ப்பது ஆகியவையும் சமூகநீதிப் போராட்டங்களே. ஏழை, எளிய மக்களின் வாழ்வை அழிக்கும் மதுவுக்கு எதிரானப் போரும் சமூக நீதிக்கானப் போரே ஆகும். தமிழினத்தின் போராளியாக இவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று செய்திருக்கிறேன்.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டீன் இன்றைய வடிவமும் இறுதியானது அல்ல. வன்னியர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் 10.5% இட ஒதுக்கீடு கிடைத்தாலும் வன்னியருக்கான இட ஒதுக்கீட்டின் இறுதி நிலை அதுவல்ல.  தனியார் துறைகளிலும், தமிழகத்திலுள்ள நடுவண் அரசு நிறுவனங்களிலும் வன்னியர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பின்தங்கிய, மிகப் பின்தங்கிய மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்தப்படும் வரையில் நான் போராடுவேன். 

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வன்னியர் இட ஒதுக்கீட்டினை மட்டும் ரத்து செய்யவில்லை. இட ஒதுக்கீடு வழங்கவும், உள் இட ஒதுக்கீடு வழங்கவும் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை கேள்வி கேட்கிறது. 

இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் உள்ள பல்வேறு சமூகநீதி இயக்கங்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால் சமூகநீதி இயக்கங்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் எல்லா இயக்கங்களும் மௌனத்தின் வாயிலாக இந்தத் தீர்ப்புக்கு ஆதரவளித்திருக்கின்றன. 

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு எந்த மாற்றமுமின்றி அப்படியே தொடர வேண்டும் என்று சிலர் விரும்புவது இட ஒதுக்கீட்டின் பயன்கள் பரவலாக்கப் படக்கூடாது என்ற தீய எண்ணத்தினால் தான். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய அரசாங்கத்தின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உள்ள வாய்ப்புகளை அனுபவித்த முன்னேறிய வகுப்பினர், பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பயன்களை அடைய விடாமல் தடுத்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட பின்னர்பிற்படுத்தப்பட்டோரில் உள்ள முன்னேறிய பிரிவினர்,அதனுடைய பயன்கள் விளிம்பு நிலையிலுள்ள மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களைச் சென்றடையாமல் பார்த்துக்கொண்டனர். இதற்கு எதிராக நான் நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டம் வெற்றி பெற்று மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற தொகுப்பு உருவாக்கப்பட்டது. அத்தொகுப்பு உருவாக்கப்பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்தும்,பல்லாயிரக் கணக்கில் சிறை சென்று, அடக்குமுறையால் பாதிக்கப்ப்ட்டு, உயிர்த் தியாகம் செய்து போராடிய வன்னியர்களை அதன் பயன்கள் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதற்காகத்தான் நான் மீண்டும் போராடினேன். அதனால் விளைந்த பயனை நீதிமன்றம் இல்லாமல் செய்திருக்கிறது. 

கோயிலில் மற்றவர்களோடு சேர்ந்துண்ணும் உரிமை மறுக்கப்பட்ட நரிக்குறவர் பெண் அஸ்வினியின் போராட்டத்தை தமிழகத்தின் முற்போக்காளர்கள் கொண்டாடுகிறார்கள். நான் அதனை வேதனையோடு பார்க்கிறேன். கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து விட்டதாக மார்தட்டிக் கொள்பவர்கள் இப்போதாவது விழித்துக் கொண்டு தமிழ் நாட்டின் உண்மை நிலையை அறிந்துகொண்டு அதனைச் சரி செய்வதற்கான வழிகளைத் தேட வேண்டும். 

அன்புச் சகோதரி அஸ்வினி சமமாக உண்பதற்கு வாய்ப்புக் கேட்பதை 'புரட்சி' என்று கூறும் இவர்கள், நாளை அவளுடைய மகள் ஐஏஎஸ் அதிகாரியாவதற்கு ஆசைப்பட்டுஅதற்காகப் போராடினால் அதற்குச் சாதிச் சாயம் பூசி அந்த முயற்சியை முறியடிப்பதற்கு முயற்சிப்பார்கள். அவளுடைய பெயரன் ரங்கநாதன் தெருவில் கடை வைக்கப் போனால் அந்த முயற்சி கடுமையாக முறியடிக்கப்படும்.

'கல்வியிலும், அரசு வேலை வாய்ப்பிலும் கிடைக்கும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு' என்பதாக சமூகநீதியை சுருக்கி விடக்கூடாது. என்னுடைய கனவு என்பது வன்னியர் உள்ளிட்ட மிகப் பின்தங்கிய சமூகங்கள் தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும். தமிழகத்தின் மாநில ஒட்டுமொத்த உற்பத்தியில் ஒவ்வொரு சமூகமும் அவர்கள் மக்கள் தொகைக்கு சமமான வருவாயை ஈட்டுகிறார்கள் என்ற நிலை வர வேண்டும். வங்கிகள் வழங்கும் கடன் தொகை தமிழகத்தில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு அவரவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வழங்கப்பட வேண்டும். அரசு கட்டுமான பணிகளுக்கு வழங்கப்படும் ஒப்பந்தங்கள் கூட சாதி அடிப்படையில் எல்லாச் சமூகங்களுக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும்.

சாதியற்ற சமுதாயம் காண்பதற்கான முதல் படி சாதி சமத்துவம் தான். அதற்காக என் உயிருள்ளவரை போராடுவேன். தோல்விகளைக் கண்டு துவண்டவன் அல்ல நான். 

உண்மையான சாதி சமத்துவத்திற்கான உந்துதல் இல்லாதவர்கள் சாதி ஒழிப்பைப் பற்றி பேசுவது நடிப்புச் செயலே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக