வெள்ளி, 26 நவம்பர், 2021

சில அரசியல் கட்சிகளின் சுயநல கொள்கைகள், நமது தேசப்பற்று மற்றும் தேசிய சேவைக்கு முன்பாக நிற்க முடியாது.- திரு நரேந்திர மோடி


 உத்தரப்பிரதேசத்தின் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் வி.கே. சிங், திரு சஞ்சீவ் பால்யான், திரு எஸ். பி. சிங் பாஹேல் மற்றும் திரு பி.எல். வர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 21-ம் நூற்றாண்டின் புதிய இந்தியா, தற்போது மிகச்சிறந்த அதிநவீன கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது என்றார். “மேம்பட்ட சாலைகள், மேம்பட்ட ரயில் போக்குவரத்து, மேம்பட்ட விமான நிலையங்கள், சாதாரண கட்டமைப்பு திட்டங்களாக மட்டுமின்றி அந்தப் பகுதி முழுவதையும் மாற்றியமைப்பதுடன், மக்களின் வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றியமைக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

நொய்டா சர்வதேச விமான நிலையம், வட இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக திகழும் என பிரதமர் தெரிவித்தார். இந்த விமான நிலையம், அப்பகுதி முழுவதையும், கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தேசிய பெருந்திட்டத்தின் வலிமைமிக்க அடையாளமாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதால் ஏற்படக்கூடிய பொருளாதார விளைவுகளை சுட்டிக்காட்டிய பிரதமர், விமான நிலைய கட்டுமானத்தின்போது புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். விமான நிலையம் சுமூகமாக இயங்குவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் தேவை. எனவே, “இந்த விமான நிலையம், மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் வழங்கும்”.

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக, உத்தரப்பிரதேசம் ஏற்கனவே பெறத் தகுதியானவற்றை பெறத்தொடங்கியுள்ளது. இரட்டை எந்திர அரசின் முயற்சிகளால் உத்தரப்பிரதேசம் தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளுடன் இனைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சியில், நொய்டா சர்வதேச விமான நிலையம் பெரும் பங்கு வகிப்பதோடு, முக்கியப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் அதிக விமானங்கள் இயக்கப்படும் மையமாக உருவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையாக மாற்றியமைத்தலுக்கான MRO வசதிகள் 40 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட இருப்பதுடன், நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா தற்போது வெளிநாடுகளிடமிருந்து இந்த வசதிகளைப் பெறுவதற்காக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த  பல்வகை சரக்குப் போக்குவரத்து மையம் உருவாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அனைத்துப் பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலத்திற்கு, விமான நிலையம் மிகுந்த பயனளிக்கும். இந்த மையம், அலிகார், மதுரா, மீரட், ஆக்ரா, பிஜ்னோர், மொரதாபாத் மற்றும் பரேலி போன்ற தொழில் மையங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.  புதிய கட்டமைப்பு வசதிகள் குர்ஜா கைவினைஞர்கள், மீரட் விளையாட்டுத் தொழில், சகரான்பூர் நாற்காலி, மொரதாபாத் பித்தளைத் தொழில், ஆக்ரா காலணி மற்றும் பேத்தா தொழில்களுக்கு பேராதரவாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய அரசுகளால் உத்தரப்பிரதேசம், பற்றாக்குறை மற்றும் இருளில் தள்ளப்பட்டதோடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் தவறான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்திலும் மத்தியிலும் முன்பு ஆட்சி செய்த அரசுகள், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியை எந்த அளவிற்கு புறக்கனித்தன என்பதற்கு ஜேவார் விமான நிலையம் மிகச் சிறந்த உதாரனம் என்றும் பிரதமர் தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி ஆட்சி செய்தபோது இத்திட்டத்தை வகுத்தது. ஆனால் இதற்கு முன்பு தில்லியிலும் லக்னோவிலும் நடைபெற்ற அரசுகளுக்கு இடையேயான மோதல் காரணமாக இந்த விமான நிலையம் பல ஆண்டுகளாக சிக்கித் தவித்தது. இதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த அரசு, இந்த விமான நிலைய திட்டத்தைக் கைவிடும்படி, அப்போதைய மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. தற்போது இரட்டை இயந்திர அரசின் முயற்சிகளால், அதே விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

“கட்டமைப்பு வசதி என்பது நமக்கு அரசியலில் ஒரு அங்கம் அல்ல, ஆனால், தேசிய கொள்கையின் ஒரு அங்கம். எந்த திட்டத்திற்கும் பின்னடைவு ஏற்படாமல் நாம் உறுதி செய்வதோடு, அந்தரத்தில் தொங்காமலும், வழி தவறி சென்றுவிடாதவாறும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கட்டமைப்புப் பணிகள் நிர்னயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்யவும் நாம் முயற்சித்து வருகிறோம்”.

நம் நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள், அவர்களது சுய நலத்தை தான் எப்போதும் பிரதானமாக கருதுவதாக பிரதமர் குறிப்பிட்டார். “இவர்களது சிந்தனையே சுயநலம் பற்றித்தான், அவர்களது சுய வளர்ச்சி மற்றும் குடும்ப வளர்ச்சிதான் முக்கியம். ஆனால் நாம் தேச உணர்வைத்தான் முதலில் பின்பற்றுகிறோம். அனைவரும் இணைவோம்- அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை- அனைவரின் முயற்சி என்பதே நமது மந்திரம்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மத்திய அரசு அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் பட்டியலிட்டார். 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி வரலாற்று சாதனை படைக்கப்பட்டதைப் பற்றி குறிப்பிட்ட அவர், 2070 ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றமில்லாத நிலையை உருவாக்குவதற்கான இலக்கு நிர்ணயம், உத்தரப்பிரதேசத்தில் குஷிநகர் விமான நிலையம், 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது, மஹோபாவில் புதிய அணை மற்றும் பாசனத்திட்டங்கள், ஜான்சியில் பாதுகாப்புத் தொழில்வழித்தடம் சார்ந்த திட்டங்கள், பூர்வாஞ்சல் அதி விரைவுச் சாலை, பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டம், போபாலில் அதி நவீண ரயில் நிலையம், பந்தார்பூரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இன்று நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். “சில அரசியல் கட்சிகளின் சுயநல கொள்கைகள், நமது தேசப்பற்று மற்றும் தேசிய சேவைக்கு முன்பாக நிற்க முடியாது” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக