திங்கள், 22 நவம்பர், 2021

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிக்கலாமா? - கி.வீரமணி


சட்டப்பேரவை குறித்து தந்தை பெரியார் கூறியது என்ன?

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிக்கலாமா?

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரையறை தேவை!

சட்டப்பேரவைத் தலைவர்களின் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரின் அரிய கருத்துரை

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் கடந்த 17 ஆம் தேதி அனைத்திந்திய சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமது கருத் துரையை முன்வைத்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்பமை அப்பாவு அவர்கள் மிக அருமையான, அரசியல் சட்ட ரீதியான கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை குறித்து பெரியார் அவரது பாராட்டத்தக்க உரையில்,

‘‘சட்டப்பேரவை என்பது அதிகாரம் குடிகொண்டுள்ள நிறுவனம் அல்ல. அது சமூகநலனுக்கான இடம் என்று பெரியார் கூறியிருக்கிறார். அனைத்துக் கட்சிகளுமே அரசை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில் பேரவைத் தலைவர்கள் நடந்துகொள்ளவேண்டும். அவர் சுதந்திர மாகவும், சார்பில்லாமலும் செயல்படவேண்டும்.

எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கும்போது, அவர்கள் கருத்துக் கூற வாய்ப்பு அளிக்கும் அதேநேரத்தில், சட்டப்பேரவையின் மாண்பு கெட்டுவிடாத அளவுக்கு, மக்களின் நம்பிக்கை அசைக்கப்பட்டுவிடாத வகை யிலும் பேரவைத் தலைவர் உறுதியாக செயல்பட வேண்டும்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையுடன் ஒரு மசோதா நிறைவேற்றப்படும்போது அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், சில நேரம் ஆளுநர் அதை கிடப்பில் போட்டுவிடுகிறார். அல்லது அந்த மசோதாவை குறிப்பிட்ட கால வரை யறைக்குள் திருப்பி அனுப்புவதும் இல்லை. ஆனால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மசோதாமீது முடிவு செய்யப்படவேண்டும் என்று அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது.

இதில் மற்றொரு பிரச்சினையும் உள்ளது. சில மசோதாக்களுக்கான ஒப்புதலை குடியரசுத் தலைவரிடம் பெறவேண்டிய நிலையில், அதை ஆளுநர்கள் பல மாதங்களாக கொண்டு செல்லுவதில்லை. ஆனால்,  அவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது. இது சட்டப்பேரவையின் அதிகாரத்தைத் துருப்பிடிக்கச் செய்துவிடுகிறது.

மாநிலத்தின் நலனை ஆளுநர் புறக்கணிக்கலாமா?

ஒன்றிய அரசால் மாநில  நிர்வாகத்தின் தலைமைப் பதவியில் நியமிக்கப்படுகிறவர்கள் ஆளுநர்களே. அவர்களே ஒரு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப் பதை நிறுத்தி வைத்திருந்தால், மாநிலத்தின் மக்கள் நலனை அவர்கள் அப்பட்டமாக மீறுவதாக அமைந்து விடுகிறது.

எனவே, எந்தெந்த மசோதாக்களுக்கு, எந்தெந்த காலகட்டத்திற்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவேண்டும் என்பதுபற்றியும், அவற்றைத் திருப்பி அனுப்பினால், குடியரசுத் தலைவர் காரணம் கூறவேண்டியதும் அவசியமா? இல்லையா?

மக்களின் தேவைகளைத்தான் சட்டப்பேரவை பிரதிபலிக்கிறது என்றால், அங்கு நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலை நிறுத்தி வைப்பது, அந்த மக்களின் தேவையை அல்லது நலனைப் புறக்கணிப்பதாக அமைகிறது. மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணத்தைத் தெரிந்துகொண்டால், அதில் உள்ள குறைபாடுகளைத் திருத்திக் கொண்டு, மற்றொரு மசோதாவை நிறைவேற்ற முடியும்.’’

இவ்வாறு மிக அருமையான - அரசியல் சட்ட ரீதியான கருத்துரைகளை, துணிவுடனும், தெளிவுடனும் அங்கே எடுத்துக்காட்டிய நமது சட்டப்பேரவைத் தலைவரின் உரை ஒரு நல்ல உரிமை முழக்கமாகும்!

கலைஞரின்  வழிகாட்டும் நெறியின் குரல்!

‘உறவுக்குக் கை கொடுப்போம்; அதேநேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறோம்‘ என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழிகாட்டும் நெறியை பின்பற்றிய அருமையான, தேவையான கருத்தாகும்.

இந்திய அரசமைப்புச் சட்ட கர்த்தாக்கள் குறிப்பிட்ட காலத்தை அந்த சட்டப் பிரிவுகளில் கூறவில்லை என்பதால், எல்லையற்ற காலதாமதத்தை எடுத்துக் கொள்வது ஆளுநர்களின் ஆளுமையைப் பெருமைப் படுத்தாது என்பது மட்டுமல்ல, நியாயப்படுத்தவும் செய்யாது - ஜனநாயகத்தைக் காயப்படுத்தவே செய்யும்!

பேரவைத் தலைவர் கூறிய கருத்துகள் அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாகவே உள்ளன.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எடுத்துக்காட்டான செயல்பாடு!

இதுபோலவே கடந்த 17.11.2021 அன்று இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றத்தில், பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கும், அங்குள்ள பேரவைத் தலைவருக்கும் எழுந்த வாக்குவாதத்தின்போது, அந்தப் பேரவைத் தலைவர், ‘‘நீங்கள் நாட்டின் பிரதமராக இருக்கலாம்; ஆனால், இங்கே என் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட வர்தான்’’ என்று அழுத்தந்திருத்தமாகப் பிரதமரை அமரச் சொல்லிப் பேசியுள்ளது, அந்நாட்டின் நாடாளு மன்றச் சுதந்திரம் எப்படி பாதுகாக்கப்பட்ட, பறிபோகாத சுதந்திரமாக, எடுத்துக்காட்டானதாக உள்ளது என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

நாடாளுமன்றத்தின் தலைவர், அவைக்குள்ளே முழு அதிகாரம் படைத்தவர் என்பதைப் பறையடித்து விளம்பரப்படுத்திய இங்கிலாந்து பேரவைத் தலைவரின் உரிமைக் குரலும் பாராட்டத்தகுந்தது!

கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக