புதன், 17 நவம்பர், 2021

விண்வெளித் துறையில் இந்தியா தனது கால்தடத்தை உலகளவில் விரிவுபடுத்துவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டிருகிறது.- திரு எம் வெங்கையா நாயுடு


 உலகளாவிய பயன்பாட்டிற்காக உள்நாட்டு பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பான நாவிக்கிற்கு உத்வேகம் கொடுக்குமாறு இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவிற்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு ஆலோசனை தெரிவித்தார்.

யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களிடம் உரையாற்றிய அவர், நாவிக்கை நிறுவி செயல்படுத்தியதற்காக இஸ்ரோவைப் பாராட்டியதோடு, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று கூறினார்.

உள்ளடக்கப்பட்ட பகுதிகள், வழங்கப்படும் சேவைகள் மற்றும் தேசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதன் சிறப்பான பயன்பாட்டின் அடிப்படையில் நாவிக் அமைப்பின் விரிவாக்கத்தை இஸ்ரோ தீவிரமாகத் தொடர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

விண்வெளித் துறையில் இந்தியா தனது கால்தடத்தை உலகளவில் விரிவுபடுத்துவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்ட திரு நாயுடு, சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி சங்கம் விண்வெளி அரங்கில் இந்தியாவை தற்சார்பாக்கவும், உலகளாவிய தலைவராக மாற்றவும் பெரிய அளவில் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய தனியார் நிறுவனங்களை விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வழிகாட்டும்  இஸ்ரோவின் தலைமைப் பங்கை அவர் பாராட்டினார். "பல ஆண்டுகளாக அறிவு தளம் மற்றும் விண்வெளி சொத்துகளை உருவாக்குவதில் இஸ்ரோவின் செம்மையான சாதனைகள், தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் இணைந்து தேசத்திற்கு நன்மைகளைப் பெருக்க பயன்படும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்ரோவை தேசத்தின் பெருமை என்று வர்ணித்த குடியரசு துணைத் தலைவர், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அதன் சிறந்த சாதனைகளுக்காக இந்த அமைப்பு உலகளவில் மதிக்கப்படுகிறது என்றார்.

"பல ஆண்டுகளாக, பல்வேறு பயன்பாடுகளுக்காக 100-க்கும் மேற்பட்ட அதிநவீன செயற்கைக்கோள்களை உருவாக்கியதன் மூலமும், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி போன்ற செயல்பாட்டு ஏவுகணை அமைப்புகளை நிறுவியதன் மூலமும் நாட்டின் முன்னேற்றத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை இஸ்ரோ செய்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக