செவ்வாய், 2 நவம்பர், 2021

ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக சட்டத்துறையினர் போராடி அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 நீதியை அனைவரும் அணுகக்கூடியதாகவும், குறைந்த செலவில் தாமதமின்றி நீதிமன்றங்களின் வாயிலாக கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

தாமோதரம் சஞ்சீவய்யா சட்டப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சுதந்திரப் போராட்டத்தின் உணர்வு: முன்னோக்கி செல்லும் வழி" என்ற கருப்பொருளிலான 'விடுதலையின் அம்ரித் மகோத்சவ' கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்து பேசிய குடியரசு துணைத் தலைவர் திரு நாயுடு, "நீதியை சரியான நேரத்தில் வழங்குவது மிகவும் முக்கியமானது என்பதால், நீதிமன்றங்களில் நிலவும் நிலுவைத்தன்மை மற்றும் அதிகப்படியான தாமதங்களைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்," என்றார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக சட்டத்துறையினர் போராடி அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்கள் தங்கள் உரிமைகளை எந்தவித நீர்த்துப்போதலோ அல்லது திசைதிருப்பலோ இல்லாமல் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். உரிமைகள் வழங்கப்படாவிட்டால் சட்டத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் .

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், கடந்த காலப் பெருமைகளை எண்ணி நாம் ஓய்வெடுக்க முடியாது என்றார். வறுமை, பாலினப் பாகுபாடு, கல்வியறிவின்மை, சாதிவெறி, ஊழல் போன்றவற்றை ஒழிப்பதற்காக சுதந்திரப் போராட்டத்தை போன்ற ஒரு மாபெரும் தேசிய இயக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட திரு தாமோதரம் சஞ்சீவய்யாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, குடியரசு துணைத் தலைவர் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார். திரு தாமோதரம் சஞ்சீவய்யா அவரது நேர்மை, நாணயம் மற்றும் தன்னலமின்றி தேசத்திற்குச் சேவை செய்த அர்ப்பணிப்புக்காக நினைவுகூரப்படுவதாக அவர் கூறினார். இந்த பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவின் தவப்புதல்வரின் பெயர் சூட்டப்பட்டது உண்மையிலேயே பெருமையாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக