சனி, 6 நவம்பர், 2021

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடன் தீபாவளி கொண்டாடினார் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்


 பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடன்  மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தீபாவளி கொண்டாடினார். 

நாஸ்காம் மற்றும் பெங்களூருவில் உள்ள எஸ்டிபிஐ-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் உரையாடிய அமைச்சர், அவர்களது பயணம் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், ஸ்டார்ட்அப் திட்டத்திற்கு அரசு அளித்துவரும் ஆதரவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் கேட்டு அறிந்துகொண்டார். 

டீப் டெக், டெக் வீ, கர்நாடகாவில் உள்ள எஸ்டிபிஐ ஐஓடி ஓபன் லேப் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை தலைவர்களுடன் ஆக்கபூர்வ உரையாடலில் அமைச்சர் ஈடுபட்டார். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை பார்வையிட்ட அமைச்சர், அந்த நிறுவனங்களால் பயனடைந்துள்ள மக்கள் குறித்தும் அறிந்து கொண்டார். 2026-ம் ஆண்டுக்குள் 'இந்தியாவில் டீப் டெக் சூழலியலை மேம்படுத்துவதற்கான யுத்திகள்' குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

கூட்டத்தினரிடையே உரையாடிய திரு ராஜீவ் சந்திரசேகர், டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியம் குறித்து பேசினார். மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தல், பொருளாதார வாய்ப்புகளை விரிவுப்படுத்துதல், குறிப்பிட்ட தொழில்நுட்பங்களில் திறன்களை வளர்த்தல் ஆகிய மூன்று தெளிவான நோக்கங்களுடன் 2015-ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் என்று அவர் கூறினார்.  

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது குறித்து குறிப்பிட்ட அவர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் கட்டமைத்த வலுவான அடித்தளங்கள் இதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாக கூறினார். தொலை தூர இடங்களில் உள்ள மக்களை கூட இதனால் எளிதில் அடைந்து விட முடியும் என்றும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக ஒவ்வொரு ரூபாயும் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக