ஞாயிறு, 7 நவம்பர், 2021

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . - திரு.விஜயகாந்த்


 சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . - திரு.விஜயகாந்த்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து  வருகிறது. குறிப்பாக சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. இதனால் தாழ்வான சாலைகள் அனைத்தும் குளம் போல்  காட்சியளிக்கின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.   மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் தொற்று  நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.  மழை காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் காலரா போன்ற பிற நோய்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.   கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழக நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தேவையான உணவு,  

குடிநீர், பாய், போர்வை, மருந்து  உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக