செவ்வாய், 2 நவம்பர், 2021

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் “சமூக வலுவூட்டல் முகாம்கள்” சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியிலும் நடத்தப்படும்.- டாக்டர் எல்.முருகன்


 மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் சார்பில் “சமூக வலுவூட்டல் முகாம்” தஞ்சாவூரில் நடைபெற்றது.

மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமினை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ. நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் ரூ. 1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான, மூன்று சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், வாக்கிங் ஸ்டிக்ஸ், காது கேட்கும் கருவி, செயற்கை கை மற்றும் கால்கள், ஸ்மார்ட் ஃபோன் போன்ற 3164 உபகரணங்களை 1700-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையிலே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் மத்திய அரசு வேளாண் சட்டத் திருத்தங்களை  நிறைவேற்றியிருப்பதாகவும், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயம் செய்ய இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், சிலர் அரசியல் நோக்கத்திற்காக இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ஏ.நாராயணன், பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு, நாடு முழுவதும் இதுவரை 10,993 முகாம்கள் நடத்தி ரூ.1,268.44 கோடி மதிப்பில் 20.74 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவி உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார். மத்திய அரசு 350 வகையான உதவி உபகரணங்களை தயாரித்து விநியோகிக்கிறது என்றும் தமிழகத்தில் இதுவரை 410 முகாம்கள் நடத்தி  ரூ.42.84 கோடி மதிப்பில் 92 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இத்தகைய “சமூக வலுவூட்டல் முகாம்கள்” சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியிலும் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.  

 பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், அறியப்படாத தலைவர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை வரலாற்றையும் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். அண்மையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்கள் மற்றும் அவர்களது 2 படகுகளைத் திரும்ப கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசிடம் இந்த மீனவர்களின் முழு விவரமும் கேட்கப்பட்டுள்ளது என்றும் அவர்களை விரைவில் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவங்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் மீனவர்கள் நலனில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக