சனி, 20 நவம்பர், 2021

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் அறிவிப்பு நம்பிக்கை தரவில்லை.- E.R.ஈஸ்வரன்



நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும்.

 மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் அறிவிப்பு நம்பிக்கை தரவில்லை.- E.R.ஈஸ்வரன்

 வரலாறு காணாத அளவிற்கு சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நூல் விலை கட்டுக்கடங்காமல் ஏறி இருக்கிறது. துணி தயாரிப்பு தொழிலிலும், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழிற்சாலைகள் ஒப்புக்கொண்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சிரமத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 25% முதல் 40% வரை நூல் விலை ஏறி இருக்கிறது. துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றவர்கள் புதிய விலையில் நூலை வாங்கி தங்கள் ஏற்றுமதி கடமைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

பஞ்சு விலை ஏற்றம் இதற்கான காரணம் அல்ல. கட்டுப்படுத்தப்படாத நூல் ஏற்றுமதி தான் இதற்கான காரணம். உள்நாட்டில் ஜவுளித் தொழில் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நூலை இருப்பில் வைத்து தான் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். பல நாடுகள் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி தொழிலை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதால் நாம் பலியாகி விடக்கூடாது. நூல் ஏற்றுமதிக்கான அரசு ஊக்க சலுகைகளும் உள்நாட்டு தொழிலை கவனத்தில் கொள்ளாமல் நிர்ணயித்து இருப்பது இதற்கான காரணமாக அமைகிறது. அதை எல்லாம் கணக்கிடும் போது உள்நாட்டில் விற்பதை விட ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைக்கின்ற காரணத்தினால் இந்தியாவில் உற்பத்தியாகும் நூலை அதிகமாக ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறார்கள். மொத்தமாக ஒரு ஆண்டிற்கு இவ்வளவு ஏற்றுமதி செய்யலாம் என்ற அளவை 12 மாதங்களுக்கும் சீராக பிரித்து அனுமதிக்க வேண்டும். துணி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

 தற்போதைய நூல் விலையின் ஏற்றம் நிலை தொடர்ந்தால் கோடிக்கணக்கான ஏழை எழியவர் வேலை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் மரியாதைக்குரிய பியூஷ் கோயல் அவர்களுடைய நேற்றைய அறிவிப்பு சிறு, குறு தொழில் துறையினரிடம் மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் இந்த சூழ்நிலையில் திடமான முடிவுகளை அறிவிக்காமல் பெயர் அளவிற்கு அவருடைய அறிவிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நிலையில்லாத நூல் விலை ஏற்றம் எந்த விதத்திலும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழிற்சாலைகள் மற்ற ஏற்றுமதி நாடுகளோடு போட்டி போட்டு வெளிநாட்டு ஆர்டர்களை எடுக்க நம்பிக்கை தராது. இதற்கான தீர்வை தாமதப்படுத்தாமல் உடனடியாக காண வேண்டும். நிலைமை கை மீறி சென்று கொண்டிருக்கின்றது. மத்திய, மாநில அரசுகள் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் பெரும் அளவில் வேலை இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக