செவ்வாய், 9 நவம்பர், 2021

அதிகரிக்கும் துர்நாற்றம்: சென்னையில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்!.- DR.S.ராமதாஸ்

 அதிகரிக்கும் துர்நாற்றம்: சென்னையில்

தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்!.- DR.S.ராமதாஸ்

சென்னையில் மழையின் அளவு பெருமளவில் குறைந்திருப்பதுடன், சூரிய வெயிலும் அடிக்கத் தொடங்கி இருப்பதால் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மூன்று நாட்களாகியும் இன்னும் மழை வெள்ள நீர் வடியாததும், பல இடங்களில் தேங்கியுள்ள நீரிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருப்பதும் கவலையளிக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு தொடங்கி பெய்து வரும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சிறிதும் குறைவதாகத் தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் 23 செ.மீ வரை பெய்த மழை நேற்று 14 செ.மீ என்ற அளவில் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி  சென்னையில் ஆங்காங்கே லேசான மழை இருந்தாலும் கூட, குறிப்பிடும்படியாக எந்தப் பகுதியிலும் மழை பதிவாகவில்லை. அதுமட்டுமின்றி மூன்று நாட்களுக்குப் பிறகு வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.  இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களிலாவது சென்னையில் இயல்பு நிலை திரும்பக்கூடும்.

ஆனால், சென்னையில் பெரும்பான்மையான பகுதிகளில் மழை - வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 458 தெருக்களில் மழை நீர் தேங்கி இருப்பதாகவும், அவற்றில் இதுவரை 81 தெருக்களில் மட்டும் தான் வெள்ள நீர் அகற்றப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் முதன்மைச் சாலைகளில் ஒன்றான தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தச் சாலையுடன் இணைந்த மற்ற சாலைகளிலும் மழை நீர் இன்னும் வடிந்தபாடில்லை. தியாகராய நகர்,  மாம்பலம், கே.கே.நகர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளிலும், வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை - வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பல இடங்கள் குளங்களாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட  கிடைக்கவில்லை.

மழை நீர் தேங்கியிருப்பது இயல்பு வாழ்க்கையை பாதிப்பது என்ற கட்டத்தைத் தாண்டி அடுத்தடுத்த நிலையிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தேங்கி நிற்கும் மழை நீரில் அந்தந்த பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட குப்பைகள், வீடுகளில் இருந்து வீசப்பட்ட அசுத்தமான கழிவுப் பொருட்கள், உணவுக் கழிவுகள் ஆகியவை கலந்துள்ளன. சில இடங்களில் கழிவு நீரும் கலந்துள்ளது.  இவ்வளவு கழிவுகளுடன் மூன்று நாட்களாக தேங்கிக் கிடக்கும் மழை நீரிலிருந்து  துர்நாற்றம் வீசத்  தொடங்கியுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்கான குடிநீர் சேமிப்புக் கலன்களில் மழை நீர் கலந்துள்ளது. இந்த சீர்கேடுகளின் காரணமாக சென்னையில் தொற்று நோய்கள் பரவும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

தேங்கியுள்ள தண்ணீர் கொசுக்களை உற்பத்தி செய்யும் பண்ணையாக மாறியுள்ளது. அவற்றின் மூலம் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட கொடிய நோய்கள் பரவக்கூடும். எலிகளின் தொல்லையும் அதிகரித்திருப்பதால் அவற்றின் மூலமாகவும் நோய்கள் பரவக்கூடும் என்ற அச்சம் மக்களை வாட்டுகிறது. 

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐந்தில் ஒரு பங்கு இடங்களில் மட்டுமே நிலைமை சீரடைந்துள்ளது. மீதமுள்ள பகுதிகளில் நிலைமை மோசமாக இருப்பதால் தமிழக அரசும்,  சென்னை மாநகராட்சியும் பணிகளை விரைவுபடுத்தி மழை நீரை அகற்றவும், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப் பட்டால் மற்ற மாவட்டங்களில் இருந்து பணியாளர்களை வரவழைத்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மழைநீர் அகற்றப்பட்ட பகுதிகளில், குப்பைகளை அகற்றுதல், ப்ளீச்சிங் பவுடர் தெளிப்பு உள்ளிட்ட தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையின் அனைத்து வட்டங்களிலும் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கும் அரசும், மாநகராட்சியும் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் அடுத்தடுத்து கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்தக்கட்ட மழை தொடங்குவதற்கு முன்பாக சென்னையில்  மழை நீர் வெளியேற்றப்படாவிட்டால் மிகவும் மோசமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்படக்கூடும். இதை உணர்ந்து சென்னையில் மழை & வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் குடிநீரை நன்றாக காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக