வெள்ளி, 19 ஜூன், 2020

“வளமான தேசத்தை உருவாக்க மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்குங்கள்” என்ற மந்திரத்தை அமல்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.


ஆச்சார்யஸ்ரீ மஹாப்ரக்யாஜிக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

“வளமான தேசத்தை உருவாக்க மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்குங்கள்” என்ற மந்திரத்தை அமல்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள்.

ஆச்சார்யஸ்ரீ மஹாப்ரக்யாஜியின் பிறந்ததின நூற்றாண்டினை ஒட்டி பிரதமர் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

அத்தருணத்தில் உரையாற்றிய பிரதமர் கூறுகையில், ஆச்சார்யஸ்ரீ மஹாப்ரக்யாஜி அவர்கள் தன் வாழ்நாள் முழுவதையும் மனிதகுலத்தின், சமூகத்தின் சேவைகளுக்காகவே அர்ப்பணித்தார் என்று குறிப்பிட்டார்.

அந்த மாபெரும் ஞானியுடனான தனது பல சந்திப்புகளையும் அப்போது நினைவு கூர்ந்த பிரதமர், ஆச்சார்யாவுடன் எண்ணற்ற முறை கலந்துரையாடும் பேறு தனக்கு வாய்த்ததாகவும், அந்த ஞானியின் வாழ்க்கைப் பயணத்திலிருந்து பல பாடங்களைத் தான் கற்றுக் கொள்ள முடிந்தது  என்றும் குறிப்பிட்டார்.

அந்த ஞானியின் அகிம்சை யாத்திரையிலும், மனித குலத்திற்கான சேவையிலும் பங்கேற்பதற்கான வாய்ப்பும் தனக்குக் கிடைத்தது என்றும் திரு. மோடி குறிப்பிட்டார்.

ஆச்சார்யஸ்ரீ மஹாப்ரக்யாவைப் போன்ற யுகபுருஷர்கள் தங்கள் தூல உடம்பிற்காக எதுவும் தேவைப்படாதவர்களாகவே இருந்தனர். எனினும் அவர்களது வாழ்க்கையும், செயல்களும் மனித குலத்திற்குச் சேவை செய்வதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“உங்களது வாழ்வில் ‘நான்’, ‘எனது’ போன்றவற்றை விட்டுவிடுவீர்களே ஆனால் பின்பு இந்த உலகம் முழுவதுமே உங்களுக்கானதாக மாறி விடும்” என்ற அவரது அருளுரையையும் பிரதமர் அப்போது நினைவு கூர்ந்தார்.

இதையே தனது வாழ்க்கையின் தாரக மந்திரமாகவும் வாழ்க்கையின் தத்துவமாகவும் ஆக்கிக்கொண்ட அந்த ஞானி தனது ஒவ்வொரு செயலிலும் அதை அமலாக்கிக் கொண்டு வந்தார் என்றும் திரு. மோடி குறிப்பிட்டார்.

அந்த ஞானி தன்னிடம் வைத்துக் கொண்டிருந்த ஒரே உடமை என்பது இங்குள்ள ஒவ்வொருவரின் மீதான அன்பு மட்டுமே ஆகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆச்சார்யஸ்ரீ மஹாப்ரக்யாஜியை நவீன யுகத்தின் விவேகானந்தர் என்று ராஷ்ட்ரகவி ரமாதாரி சிங் தினகர் அவர்கள் குறிப்பிட்டு வந்ததையும் பிரதமர் அப்போது நினைவு கூர்ந்தார்.

அதைப் போன்றே ஆச்சார்யஸ்ரீ மஹாப்ரக்யாஜி அவர்களின் எண்ணற்ற இலக்கியங்களைக் கருத்தில் கொண்ட திகம்பர பாரம்பரியத்தில் வந்த மகத்தான முனிவரான ஆச்சார்ய வித்யானந்தா அவர்களும் கூட மஹாப்ரக்யாஜி அவர்களை நவீன இந்தியாவின் தத்துவஞானி எனப் போற்றப்பட்டு வந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுடன் ஒப்பிட்டு வந்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இத்தருணத்தில் மேனாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை பிரதமர் சுட்டிக் காட்டினார். இலக்கியம், அறிவு ஆகியவற்றுக்கான தேடலில் திளைத்து வந்தவரான அடல்ஜி,  “ஆச்சார்யஸ்ரீ மஹாப்ரக்யாஜியின் ஆழ்ந்த புலமை, அறிவு, கருத்துக்களின் மீது கவரப்பட்டவனாக நான் எப்போதுமே இருந்து வந்திருக்கிறேன்” என்று அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

மகத்தான உரையாற்றல் திறன், கவர்ந்திழுக்கும் குரலினிமை, வந்து விழுந்து கொண்டே இருக்கும் வார்த்தை வளம் ஆகிய புனிதமான பரிசைப் பெற்றவராகவும் ஆச்சார்யஸ்ரீ விளங்கினார் என்றும் பிரதமர் சித்தரித்தார்.

ஆன்மீகம், தத்துவம், உளவியல், பொருளாதாரம் போன்ற பல துறைகள் குறித்தும் 300க்கும் மேற்பட்ட நூல்களை ஆச்சார்யஸ்ரீ சமஸ்க்ருதம், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதியுள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து மஹாப்ரக்யாஜி அவர்கள் எழுதிய “குடும்பமும் தேசமும்” என்ற நூலை இத்தருணத்தில் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

“எவ்வாறு ஒரு குடும்பம் மகிழ்ச்சிகரமான ஒரு குடும்பாக மாற முடியும் என்பது பற்றியும், எவ்வாறு ஒரு மகிழ்ச்சியான குடும்பம் வளமான ஒரு தேசத்தை உருவாக்க உதவும் என்ற கண்ணோட்டத்தையும் இந்த இரு மகத்தான மேதைகளும் அந்த நூலில் வழங்கியிருந்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இரு மகத்தான மனிதர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், இந்த இருவரிடமிருந்தும் தாம் எவ்வாறு கற்றுக்கொண்டேன் என்பதையும் குறிப்பிட்டார். “ஒரு ஆன்மீக குருவினால் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை உணர்ந்து கொள்ள முடிவதைப் போலவே ஓர் அறிவியல் விஞ்ஞானியும் ஆன்மீகத்தை எவ்வாறு விளக்க முடிகிறது என்பதையும் அவர்கள் இருவரிடமிருந்தே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.”

இந்த மகத்தான இருவருடனும் கலந்துரையாடும் பேறு கிடைத்தமைக்காக தாம் பெருமை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மஹாப்ரக்யாஜியை பற்றி டாக்டர்.கலாம் அவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அவரது வாழ்க்கை நடந்து கொண்டே இருப்பது; சேகரிப்பது; வழங்குவது என்ற ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது.  அதாவது தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பது; அறிவை சேகரிப்பது; அதை சமூகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மஹாப்ரக்யாஜி அவரது வாழ்நாளில் பல்லாயிரக் கணக்கான கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அவரது மறைவுக்கு முன்பாகவும் கூட, அகிம்சைக்கான ஒரு பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார். அவரது அருளுரை ஒன்றையும் பிரதமர் இத்தருணத்தில் நினைவு கூர்ந்தார்:  “ஆன்மா என்பதே என் கடவுள்; தியாகமே எனது பிரார்த்தனை; நட்புறவு என்பதே எனது பக்தி; பொறுமை என்பதே எனது வலிமை; அகிம்சை என்பதே எனது மதம்.” இத்தகையதொரு வாழ்க்கை முறையைத் தான் அவர் பின்பற்றி வந்தார். அதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களுக்கும் அவர் கற்பித்தார். யோகாவைக் கற்றுத் தருவதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களுக்கு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என்ற கலையை தாம் கற்றுத் தந்து வந்ததாகவும்  அவர் குறிப்பிட்டு வந்தார்.

“நாளை சர்வதேச யோகா தினம் என்பதும் கூட தற்செயலான ஒன்று தான். மகிழ்ச்சியான குடும்பம்; வளமான தேசம் என்ற மஹாப்ரக்யாஜியின் கனவை நனவாக்கும் வகையில் நாம் அனைவரும் பங்கேற்கவும், அவரது கருத்துக்களை சமூகத்திற்குக் கொண்டு செல்லவும் ஆன ஒரு தருணமாகவும் இது அமைகிறது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆச்சார்யஸ்ரீ மஹாப்ரக்யாஜியின் மற்றொரு அருளுரையையும் பிரதமர் மேற்கோள் காட்டினார்:  “உடல்நலமிக்க மனிதன்; செறிவான சமூகம்; செழுமையான பொருளாதாரம்” இந்த மந்திரம் நம் அனைவருக்கும் உத்வேகம் தருவதாகவும் அமைகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதே மந்திர வார்த்தைகளை மனதில் கொண்டு தான் நமது நாடு சுயச்சார்பு மிக்க பாரதம் என்ற இலக்கை நோக்கி உறுதியுடன் நடைபோடுகிறது.

நமது ஞானிகளும், முனிவர்களும் நம் முன் வைத்துள்ள இந்த குறிக்கோளை இந்த சமூகமும் நாடும் சிரமேற்கொண்டால் அந்த உறுதியை விரைவிலேயே நமது நாட்டினால் நிறைவேற்ற முடியும் என்றே நான் நம்புகிறேன். அந்தக் கனவை நீங்கள் அனைவருமே நனவாக்குவீர்கள்” என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக