செவ்வாய், 1 ஜூன், 2021

கொவிட்-19-க்கு எதிரான நாட்டின் போரில் 40 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனுடன் கிளம்பியுள்ள ஐஎன்எஸ் தல்வார் (INS Talwar) தாயகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.


 கொவிட்-19-க்கு எதிரான நாட்டின் போருக்கு ஆதரவளிக்கவும், சமுத்திர சேது II செயல்பாட்டின் ஒரு பகுதியாகவும், கொல்கத்தா, கொச்சி, தல்வார், தாபர், திரிகண்ட், ஜலாஷ்வா மற்றும் ஐராவத் ஆகிய 7 இந்திய கடற்படைக் கப்பல்கள், பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கிரையோஜனிக் கொள்கலன்கள்

மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.

ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் தல்வார் ஆகிய கப்பல்கள் மனாமா, பக்ரைன் துறைமுகத்தை 2021 ஏப்ரல் 30 அன்று சென்றடைந்தன. 40 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனுடன் கிளம்பியுள்ள ஐஎன்எஸ் தல்வார் தாயகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவதற்காக தோகா, கத்தாருக்கு  சென்றுள்ள ஐஎன்எஸ் கொல்கத்தா திரவ ஆக்சிஜன் கொள்கலன்களை எடுத்து வருவதற்காக அங்கிருந்து குவைத் செல்லும்.

கிழக்கு கடற்பரப்பில் ஐஎன்எஸ் ஐராவத் களம் இறக்கி விடப்பட்டுள்ள நிலையில், கடந்த வருட சமுத்திர சேது செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றிய ஐஎன்எஸ் ஜலாஷ்வா பராமரிப்பில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு, தயார் செய்யப்பட்டு, பணியில் இறக்கி விடப்பட்டுள்ளது.

திரவ ஆக்சிஜன் கொள்கலன்களை எடுத்து வருவதற்காக ஐஎன்எஸ் ஐராவத் சிங்கப்பூருக்குள் நுழைய இருக்கும் நிலையில், குறுகிய கால அவகாசத்தில் மருத்துவ பொருட்களை எடுத்து ஐஎன்எஸ் ஜலாஷ்வா தயார் நிலையில் உள்ளது.

கொச்சி, திரிகண்ட் மற்றும் தாபர் ஆகிய கப்பல்களும் தேசிய பணிக்காக  திருப்பி விடப்பட்டுள்ளன. தெற்கு கடற்படை தளத்தில் இருந்து ஐ என் எஸ் ஷர்தூல் 48 மணி நேரத்திற்குள் பணியில் இறங்க தயார் படுத்தப்பட்டு வருகிறது. 

கொவிட்-19-க்கு எதிரான நாட்டின் போருக்கு தேவை ஏற்படும் பட்சத்தில் இன்னும் அதிக கப்பல்களை பணியமர்த்தும் திறன் இந்திய கடற்படைக்கு உண்டு.

கடந்த வருடம் தொடங்கப்பட்ட சமுத்திர சேது திட்டத்தின் கீழ் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையே அண்டை நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் வெற்றிகரமாக தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக