ஞாயிறு, 20 ஜூன், 2021

கடந்த 7 நாட்களில் (2021 ஜூன் 11 முதல் 17 வரை ) இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 32.56 லட்சம் பயணிகள் நீண்டதூர மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் பயணம் செய்தனர்.


 கடந்த 7 நாட்களில் (2021 ஜூன் 11 முதல் 17 வரை ) இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 32.56 லட்சம் பயணிகள் நீண்டதூர மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் பயணம் செய்தனர். இந்த ரயில்களின் சராசரி பயணிகள் அளவு 110.2 சதவீதமாக இருந்தது. கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் இருந்து தில்லி, மும்பை, புனே, அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இவர்கள் பயணித்தனர்.

பீகார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து மும்பை, தில்லி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்கு வசதி அளிக்கும் விதத்தில் மெயில், எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள், விடுமுறை சிறப்பு ரயில்கள் மற்றும் கோடை சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.

கொரோனா விதிமுறைகளை கருத்தில் கொண்டு மேற்கண்ட அனைத்து ரயில்களும் முன்பதிவு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. முன்பதிவு மையங்களில் பயணிகள் முன்பதிவு அமைப்பின் மூலமும் ஆன்லைன் முறையிலும் இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

2021 ஜூன் 18 வரை 983 மெயில்/ எக்ஸ்பிரஸ் மற்றும் விடுமுறை சிறப்பு ரயில்கள் இந்திய ரயில்வேயால் இயக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 56 சதவீத ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பணியிடத்திற்கு திரும்ப விரும்பும் மக்களின் பயணத்திற்கு வசதி அளிக்கும் விதமாக 1309 கோடைக்கால சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஒடிசா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்து தில்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த கோடைக் கால சிறப்பு ரயில்கள் மூலம் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

2021 ஜூன் 19 முதல் 28 வரையிலான அடுத்த பத்து நாட்களுக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 29.15 லட்சம் பயணிகள் நீண்டதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளிலிருந்து தில்லி மும்பை, புனே, சூரத், அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இவர்கள் செல்ல உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக