வெள்ளி, 18 ஜூன், 2021

பிரதமர் திரு நரேந்திர மோடி வகுத்தளித்த “வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி” எனும் லட்சியத்துடன் ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து திரு அமித் ஷா ஆய்வு


 பிரதமர் திரு நரேந்திர மோடி வகுத்தளித்த “வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி” எனும் லட்சியத்துடன் ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புது தில்லியில் இன்று ஆய்வு நடத்தினார்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நலன் திரு மோடி அரசின் முதன்மை முன்னுரிமை என்று திரு அமித் ஷா கூறினார். ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு திட்டங்கள் 90 சதவீதம் சென்றடைந்திருப்பது குறித்து உள்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். கொவிட் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை ஜம்மு காஷ்மீரில் 76 சதவீத இலக்கை எட்டியிருப்பதற்கும், நான்கு மாவட்டங்களில் 100 சதவீத இலக்கை எட்டியிருப்பதற்கும் துணைநிலை ஆளுநர் மற்றும் அவரது குழுவினருக்கு திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.

பிரதமரின் வளர்ச்சி தொகுப்பு, முன்னுரிமை மற்றும் முக்கிய திட்டங்கள் மற்றும் தொழில் வளர்ச்சி திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர், மேற்கு பாகிஸ்தானில் இருந்த வந்த அகதிகள் மற்றும் காஷ்மீரில் இருந்து ஜம்முவுக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கு அகதிகள் தொகுப்பின் பலன்கள் விரைந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.

3000 மெகாவாட் பாகல் டல் மற்றும் கீரு நீர் மின்சார திட்டங்களை தொடங்குமாறும், 3300 மெகாவாட் திட்டங்களை விரைவுபடுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை விரிவுபடுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். விவாசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், ஒரு மாவட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு வேளாண் சார்ந்த நிறுவனத்தையாவது நிறுவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆப்பிள் உற்பத்தியின் தரமும், அடர்த்தியும் அதிகரிக்கப்பட்டு, ஆப்பிள் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

தொழில் கொள்கையின் பலன்கள் சிறு தொழில்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கான முயற்சிகளையும், பொது தளத்தில் உள்ள அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கும் அமைப்புசார் சீர்திருத்தங்களையும், அரசு மின்னணு சந்தையில் கொள்முதல்கள் செய்யப்படுவதையும், கிராம் சுவராஜ் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்திய நடவடிக்கையையும், சமூக பாதுகாப்பு மற்றும் இதர நலத் திட்டங்களையும் அமைச்சர் பாராட்டினார்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசின் மூத்த அலுவலர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக